உங்களுக்கு சரியான பழம்… சப்போட்டா

Spread the love

சப்போட்டா உறுதியான நீடித்து வாழும் மரம். முதலில் மத்திய அமெரிக்காவில் தோன்றிய தாவரம். மேற்கிந்திய தீவுகளுக்கு 15ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிலிப்பைன்சுக்கு ஸ்பெயின் தேசத்தவரால் கொண்டு வரப்பட்ட சப்போட்டா, அங்கிருந்து மலேஷியா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு பரவியது. இந்தியாவின் மஹாராஷ்டிராவில், சப்போட்டா 1898 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மஹாராஷ்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்காளத்தில் சப்போட்டா பயிரிடப்படுகிறது.

உஷ்ணபிரதேசங்கள் சப்போட்டாவிற்கு உகந்தவை. எந்த வித மண்ணிலும் சப்போட்டா வளரும். இந்தியாவில் 5000 ஹெக்டேரில் பயிராகிறது. நட்டவுடன் 3 வருடங்கள் கழித்து பலனளிக்கும். பல வகைகள் உள்ளன. ஒரு மரத்திலிருந்து சராசரி 2000 பழங்கள் கிடைக்கும். வருடத்தில் 2 முறை பலன் தரும்.

சப்போட்டா 30 (அ)- 40 மீட்டர் உயரம் வளரும். காற்றடித்தாலும் உறுதியாக நிற்கும் மரம். மரத்தின் பட்டை மரப்பாலும், பிசினும் உள்ளது. பச்சை நிற இலைகள், 7 -(அ)- 15 செ.மீ. நீளமுடையவை. வெள்ளை நிறப்பூக்கள். பழம் 4 (அ)- – 8 செ.மீ. குறுக்களவு உடையது. உருளைக் கிழங்கு போல் தோற்றமுடைய சப்போட்டா பழத்தில், 2 (அ)- 10 வரை விதைகள் இருக்கும். பழக்கதுப்புகள் வெளிர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமுடையவை. வாசனை நிறைந்த, சுவையான இனிப்பான பழம் சப்போட்டா. காய் கெட்டியாக, சபோனின் என்ற வேதிப்பொருள் உடையது. விதைகள் ‘பீன்ஸ்’ போன்ற வடிவத்துடன், ஒரு சிறிய ‘கொக்கி’ போன்ற அமைப்புடன் இருக்கும். பழங்கள் உருண்டையாகவும், அல்லது ‘கோள’ வடிவிலும் இருக்கும்.

பயன்கள்

மூல வியாதிக்கு சப்போட்டா பழம் சிறந்தது.

எலும்பு, பற்களுக்கு வலிமை தரும்.

நரம்பு தளர்ச்சியை போக்கும்.

தொண்டைப்புண், இருமல் இவற்றுக்கு மருந்தாகும்.

உடல் வலிமையை கூட்டும், ரத்தத்தை சுத்திகரிக்கும்.

குழந்தைகளுக்கு நல்லது, மூளையை மேம்படுத்தும்.

சிறுநீர் பிரிய உதவும். வயிற்றுப்பூச்சிகளை எதிர்க்கும்.

இதர பயன்கள்

சிறுவர்கள் விரும்பும் பபிள்கம் தயாரிப்பில் சப்போட்டா மரத்தின் பிசின் பயன்படுத்தப்படுகிறது.

சப்போட்டா ஜாம், ஜெல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. தோல் பதனிடும் தொழிலில், மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருள் பயனாகிறது. பழத்திலிருந்து குளூக்கோஸ் மற்றும் பெக்டின் தயாரிக்கப்படுகின்றன.

100 கிராம் சப்போட்டாவில் உள்ளவை

                ஈரப்பசை-                                73.7கி

                புரதம்- –                                   0.7கி

                பாஸ்பரஸ்-                 27மி.கி.

                கார்போஹைடிரேட்-   -21.4கி

                கொழுப்பு-                   1.1கி

                இரும்பு- –                                 2மி.கி

                கால்சியம்-                   28 மி.கி.

                அஸ்கார்பிக் அமிலம்- 6 மி.கி

சப்போட்டா மரம் தன்மையை விரும்புவதில்லை! தனிமரமாக இருப்பதை விட பல மரங்களுடன் சூழ்ந்திருக்கும் போது நல்ல பலனை தருகிறது.

சப்போட்டா சாலட்

தேவையான பொருட்கள்

                சப்போட்டா-               3

                மாதுளம் பழம்             -1கப்

                எலுமிச்சம் ஜுஸ்                    -2டீஸ்பூன்

                தேன்-                          2டீஸ்பூன்

                சீனி                             -தே.அளவு

செய்முறை

சப்போட்டாவை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மாதுளம் பழத்தை உதிர்த்துக் கொள்ளவும். ஒரு சாலட் பவுலில் இரண்டு பழங்களையும் சேர்த்து அதனுடன் எலுமிச்சம் ஜுஸ், தேன், சீனி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சப்போட்டா ஜுஸ்

தேவையான பொருட்கள்

                சப்போட்டா-   3

                எலுமிச்சம்பழம்           -1

                புதினா இலை-            5

                சீனி-                தே.அளவு

                ஐஸ் க்யூப்ஸ்-  சிறிது

செய்முறை

சப்போட்டாவின் தோலை சீவி விதைகளை எடுக்கவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஜுஸ் எடுக்கவும். ஒரு மிக்ஸியில் சப்போட்டா எலுமிச்சம் ஜுஸ், புதினா இலை, சீனி, ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைப் போட்டு ஒரு அடி அடித்துப் பரிமாறவும்.

சப்போட்டா மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்

                சப்போட்டா    -1

                பால்-               1கப்

                தேன்-              1 டீஸ்பூன்

                எலுமிச்சம் ஜுஸ்-       1/4 டீஸ்பூன்

                சீனி-                தே.அளவு

                ஐஸ் க்யூப்ஸ்-  தே.அளவு

செய்முறை

சப்போட்டாவின் தோலை சீவி விதைகளை எடுத்து விட்டு சதைப் பகுதியை நறுக்கிக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் சப்போட்டா, பால், தேன், எலுமிச்சம் ஜுஸ், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.


Spread the love