செங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு

Spread the love

குளோரியோசா ஒரு படர்ந்து வளரும் கொடிவகை தாவரமாகும்.  இது 3.5 லிருந்து 6 மீ வரை வளரக்கூடியது.  மலர்கள் தனியாகவோ அல்லது கொத்தாகவோ அடர் ஆரஞ்சு நிறத்துடன் அழகாகக் காணப்படும்.

குளோரி லில்லி, குளோரியோசா சூப்பர்பா, லில்லியேசியே அல்லது ஃப்ளேம் லில்லி

தமிழ்பெயர்- கார்த்திகைக் கிழங்கு, கண்வலிப்பூ,  கலப்பைக்கிழங்கு, செங்காந்தள் மலர்,  கண்வலிக்கிழங்கு

மலையாளம் – வெந்தோனி

குளோரியோசாவின் முக்கியத்துவம்

வெப்பமண்டலப் பயிரான, இந்த குளோரியோசா பயிர், ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.  மேலும் இது வங்கதேசம், இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் மியான்மார் போன்ற பகுதிகளில் இயற்கையாகவே காணப்படுகிறது.  மருந்துப் பயிர்களில் முதன்மைப் பயிராக கருதப்படும் இது, இந்திய மருத்துவத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவில், இப்பயிர் இமாலயமலை அடிவாரம், மத்திய இந்தியா, ஆந்திரபிரதேசம், வங்காளம் மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளில் காணப்ப்படுகிறது.  மேலும், மருந்துத் தொழிற்சாலைகளில், ஃபைட்டோகெமிக்கல், மூலவேதிப் பொருள்கள் பிரித்தெடுப்பதற்காக, வளர்ந்து வரும் நாடுகளான ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜிம்பாவ்வே மற்றும் கேமரூன் போன்ற நாடுகளுக்கு இதன் விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  அதிகரித்து வரும் மருத்துவப் பயன்பாட்டின் காரணமாக இதன் வேதிகளான கொல்ச்சின் மற்றும் கொலிச்சிகோ போன்றவற்றின் வெளிநாட்டு தேவை உயர்ந்துள்ளது.  மேலும், குளோரியோசா விதைகள் ஏற்றுமதி செய்வதில் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது.

இரகங்கள்

இந்தப் பயிரில் இதுவரை வெளியிடப்பட்ட இரகங்கள் என்று எதுவும் இல்லை. 

தமிழகத்தில் நிலை

தமிழ்நாட்டின் மாநில மலரான குளோரிலில்லி, 600 டன் விதை உற்பத்தியுடன் முதன்மைப் பங்காற்றுகிறது. மேலும் இப்பயிரானது, மூலனூர், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, தாராபுரம், அம்பிளிக்கை மற்றும் திண்டுக்கல் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மருத்துவப் பயன்கள்

இலையின் மகத்துவம்

உலகின் பல பகுதிகளில் செங்காந்தள் மலரானது, பலவித பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது,  இலைக் கரைசல், பற்றாக வைப்பதன் மூலம் இருமல் மற்றும் உடல் உபாதைகளை குணப்படுத்தவும், இலைச்சாற்றினை சில துளிகள் மூக்கில் விடுவதன் மூலம் மயக்கம் குணமடையவும் மற்றும் அரைத்த இலைகளை மார்புப் பகுதிகளில் தேய்ப்பதன் மூலம் ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமடைய வழிவகை செய்கிறது.  மேலும், இலைச்சாற்றினைத் தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் பேன், பொடுகு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கிழங்குகள் மற்றும் விதைகளின் மருத்துவ குணங்கள்

இதன் கிழங்குகள் குடற்புழுக்களைக் கட்டுப்படுத்தவும், பாம்பு மற்றும் தேள் கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

கிழங்கிலிருந்து எடுக்கப்பெறும் சாறு தூக்கத்தை தூண்டவும், வயிற்று உபாதைகளுக்கு மருந்தாகவும், கருத்தடை மருந்தாகவும் பயன்படுகிறது.  மேலும் வயிள்றுப்புண், வீக்கம், தோல் வியாதிகள், தொழுநோய், ஆஸ்துமா மற்றும் பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இதன் கிழங்கு மற்றும் விதைகளில் உள்ள ‘கொலிச்சிசின்’ மற்றும் ‘சூப்பர்பின்’ என்ற மூலப்பொருள் மூட்டுவலி மற்றும் பக்கவாத நோய்களைக் குண்ப்படுத்தவும் உதவுகிறது.

“கொலிக்சிசின்”; என்ற மூலவேதிப் பொருளானது கிழங்குகளைக் காட்டிலும் ஐந்து மடங்கு விதைகளில் காணப்படுகிறது. மேலும், இலைகளிலும் இதன் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், இம்மூலவேதிப் பொருள், மூட்டுவலி மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, குளிர்பிரதேச நாடுகளில் பொதுவாகக் காணப்படும் கௌட் என்னும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது.

இது தவிர, தாவரங்களில் மரபியல் பண்புகளைச் சடுதி மாற்றத்தின் மூலம் மாற்றி அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு தாவரத்தில் 0.9 கொல்ச்சிசின் மற்றும் 0.8 கொல்ச்சிகோசைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பயிர் வளர்ப்பு

மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 வரை உள்ள அனைத்து வகை மண்ணிலும் இப்பயிர் செழித்து வளரக்கூடியது. குறிப்பாக நல்ல வடிகால் வசதியுடைய குறுமணற்பாங்கான, செம்மண் மற்றும் கரிசல் மண் நிலங்களில் பயிரிட மிகவும் உகந்தவை.

வறட்சியான தட்ப வெப்பநிலையிலும் காற்றில் ஓரளவு ஈரப்பதம் மற்றும் பருவமழை பெய்யக்கூடிய காலங்களில் இப்பயிரானது நன்கு வளரும். பொதுவாக, இதன் கிழங்குகள், மழைக்காலத்தில் துளிர்த்து, படர்ந்து, பூத்து, காய்த்து விட்டு, கோடைக்காலங்களில் உறக்க நிலையில் இருக்கும். மேலும் ஆண்டு முழுவதும் அல்லது ஆண்டு சராசரி மழையளவு 373 செ.மீ இருத்தல் வேண்டும்.

பயிர் பெருக்க முறைகள்

இந்த மருந்துச் செடியானது ‘ஏ’ வடிவ கிழங்குகள் அல்லது விதைகள் மூலம் பயிர்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகளை இரவு முழுவதும் சுடுநீரில் ஊற வைப்பதன் மூலம் முளைப்புத்திறன் மேம்படுகிறது. விதைகள் முளைக்க 3 வாரங்களிலிருந்து 3 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். விதைகள் மூலம் பெறப்படும் கிழங்கானது பூக்க நான்கு வருட காலம் எடுத்துக் கொள்ளும், எனவே, விதை மூலம் பயிர் செய்தலைக் காட்டிலும், கிழங்குகள் மூலம் உற்பத்தி செய்தல் விவசாயிகளிடையே பெரிதும் பின்பற்றப்படுகிறது.

விதைக் கிழங்குகளின் தன்மை

முளைத்து வரும் கொடிகளின் தன்மை விதைக் கிழங்குகளின் அளவைப் பொறுத்தே வேறுபடுகிறது. விதைக்கப் பயன்படுத்தப்படும் கிழங்குகள் ஒவ்வொன்றும் 60 முதல் 80 கிராம் அளவில் இருக்க வேண்டும். சிறிய கிழங்குகள் பலவீனமான கொடிகள் உள்ளவையாகவும் அவை பூக்க அதிக காலம் எடுத்துக் கொள்ளும். பெரிய அளவுடைய கிழங்குகளை உடையா வண்ணம் உபயோகிக்கலாம். விதைக்கிழங்குகள் பிப்ரவரி முதல் மே வரை உறக்க நிலையில் இருக்கும். அதாவது மே முதல் ஜுன் மாதங்களில் முளைக்கும் திறன் பெற்றிருக்கும். விதைக்கிழங்குகளை விதைக்கும் முன் பூசான மருந்தினை கலந்து இருபது நிமிடம் நனைத்து பிறகு விதைப்பதன் மூலம் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

நடுவதற்கு ஏற்றவாறு நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, தொழு உரம் இட்டு மண்ணை நன்கு பண்படுத்த வேண்டும்.

இரண்டு அடி இடைவெளியில் அரை அடி ஆழம் அகலமுள்ள வாய்க்கால் எடுத்து, கிழங்குகளை 30 செ.மீ (1/2 அடி) இடைவெளியில் நடவேண்டும். நெருங்கிய இடைவெளி, அயல்மகரந்த சேர்க்கைக்கு வழி வகுத்து, அதிக விதை மகசூல் தரவல்லது.

விதைக்கும் பருவம்

தமிழ்நாட்டில், மழைக்காலத்தின் துவக்கத்தில் அதாவது ஜுலை – ஆகஸ்ட் மாதங்களில் விதைக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒரு ஏக்கரில் விதைக்க சுமார் 600 லிருந்து 700 கிலோ கிழங்குகள் தேவைப்படும்.

உரமிடுதல்

அதிக அளவு உரத்தை எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்ட இந்தப் பயிருக்கு தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துகளாக, ஜிங்க் சல்பேட் மற்றும் மெக்னீசியம் சல்பேட் உரங்கள் உரமாக வழங்கப்படவேண்டும்.

இயற்கை வேளாண்மையில், மக்கிய தொழு உரம், மண்புழு உரம் மற்றும் மக்கிய நார்க்கழிவு பரிந்துரை செய்யப்படுகிறது.

பொதுவாக கிழங்குகள், நடவு செய்த 55 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும் 105 முதல் 110 நாட்களில் காய்கள் உண்டாகி, 160 முதல் 180 நாட்களில் முற்றிய காய்கள் அறுவடைக்குத் தயாராகிறது.

விளைந்த காய்கள் பச்சைநிறத்திலிருந்து இளம்பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறி, காய்களின் தோல் சுருங்கி விடும். இத்தருணத்தில் எடை குறையும் போது காய்களைப் பறிக்க வேண்டும்.

பறித்த முதிர்ந்த காய்களை, விதை பிரித்தெடுப்பதற்காக ஒரு வாரம் நிழலில் உலர்த்த வேண்டும். நிழலில் உலர்த்திய காய்கள் மஞ்சள் நிறமாக மாறும் போதும் அவற்றில் உள்ள விதைகள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாக மாறும் போதும் விதைகளை நன்கு உலர்ந்த காய்களிலிருந்து பிரித்தெடுத்து, விதைகளை நீர்புகாத பைகளில் அடைத்து, மூலப்பொருள் பிரித்தெடுப்பதற்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பலாம்.

மகசூல்

ஒரு எக்டரில் 100 லிருந்து 150 கிலோ விதைகளும் 300 கிலோ கிழங்கும் முதலாம் ஆண்டில் மகசூலாகவும், பின்னர் மகசூல் அதிகரித்துக் கொண்டும் அதாவது 1000 கிலோ உலர்ந்த விதைகளைப் பெறலாம். ஒருமுறை சாகுபடி செய்தால், இப்பயிரினை நன்கு பராமரித்து ஐந்து ஆண்டுகாலம் வரை நல்ல மகசூல் பெறலாம்.

பயிர்ப்பாதுகாப்பு

லில்லி கம்பளி புழுக்கள் சிவப்பு மற்றும் கருப்புநிறம் கொண்டவை. மேலும், இவை இலைகளின் நுனி மற்றும் இலைகளை சேதப்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, பதினைந்து நாட்கள் இடைவெளியில் மருந்து தெளிக்க வேண்டும்.

இலைக்கருகல் நோயானது, கர்வுலேரியா எனும் பூஞ்சாண வகையினால் பரவக்கூடியது. இந்நோய் தொடர்மழை மற்றும் பனிக்காலத்தில் அதிகம் ஏற்படும். இலைகள், முதலில் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் மேலிருந்து காய்ந்து கருகிவிடும். இதனை மருந்துகள் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கிழங்கு அழுகல் நோய், மழைக்காலத்தில், மண்ணில் வடிகால் வசதி குறைவாக இருக்கும் போது அதிகம் ஏற்படும். இதனால் கொடிகளில் இலைகளின் நிறம் மாறி வெளுத்துக் காய்ந்து விடும், மேலும் விதைக் கிழங்குகள் அழுகி, தாவரம் இறக்கும் நிலை ஏற்படும்.

இதனை கட்டுப்படுத்தவும் மருந்தினை தாக்கப்பட்ட கொடிகளின் கிழங்குகள் நனையுமாறும், மண்ணில் தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால் வசதி ஏற்படுத்தியும், நீர் பாசன இடைவெளிகளைக் குறைப்பதன் மூலமும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.           

தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்


Spread the love
error: Content is protected !!