படுக்கையறையில் இருந்து கழிப்பறை வரை செல்போனை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. செல்லும் இடம் எல்லாம் எடுத்துச் செல்வதால்தான் இதற்கு செல்பேசி என பெயரிட்டார்களோ என்னவோ..?
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தொடங்கி, பணிபுரியும் ஆண், பெண்கள், இல்லத்தரசிகள் என எல்லா தரப்பிலும் செல்போனை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். தற்போதைய நவீன ஸ்மார்ட் போன்களில் எல்லா வசதிகளும் இருப்பதால், சகட்டு மேனிக்கு ‘சாட்டிங்’ செய்வதும், வாட்ஸ்அப் வதந்திகளை படிப்பதும்.. பரப்புவதும் என இளைஞர், இளைஞிகள் குரூப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அளவுக்கு அதிகமான செல்போனை பயன்படுத்துவது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கிய கேடு என்பது பலருக்கு தெரிவதில்லை.
இதுகுறித்து ஒரு செய்தியை பார்ப்போம்..
லண்டனில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு 20 வயது பெண் ஒருவர் வந்தார். தனக்கு ஒற்றைக் கண்ணில் தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதாக மருத்துவர்களிடம் கூறினார். இதேபோல், 40 வயதுடைய பெண்ணும் இதே பிரச்சினைக்காக மருத்துவர்களை அணுகினார். இருவரையும் மருத்துவ ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, இரு பெண்களும் ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ எனப்படும் ‘தற்காலிக பார்வையிழப்பு’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.
வலது கண்ணில் திடீர் பார்வையிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்களிடம் கூறிய 20 வயது பெண், தினமும் இரவில் தூங்கும்போது படுத்தபடியே இடதுபக்கம் சாய்ந்து, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை தொடர்ச்சியாக பார்த்துள்ளார். அந்த நேரங்களில் இவரின் இடது கண் தலையணையில் புதைந்திருக்கும். 40 வயதைக் கடந்த மற்றொருவர், தினமும் சூரிய உதயத்துக்கு முன்பே, விழித்து, படுத்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்திகளை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த பழக்கத்தின் காரண மாகவே இருவருக்கும் தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்ப டுவதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் அதிகாரி கூறுகையில், ‘‘ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கிரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் வரும் போது, சாதாரண வெளிச்சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது. சில கணங்களுக்குப் பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தால் நிரந்தர குருட்டுத் தன்மைக்கும் இட்டுச்செல்லும்” என்றார்.
இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல், பெற்றோரில் 27 சதவீதம் பேரும், குழந்தைகளில் 50 சதவீதம் பேரும் செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தின் கட்டாயம் அதை தடுக்க முடியாது. ஆனால், அதை அளவோடு பயன்படுத்துவதுதான் அனைவரின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.