தங்கள் விருப்பங்களை, பெற்றோர் திணிப்பதால், குழந்தைகள் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. பெற்றோரின் நெருக்கடியால் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி செல்வதும், இளவயதிலே யே வன்முறையாக நடந்து கொள்வதும், மன அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் தற்கொலை விபரீத முடிவுக்கு செல்வதும் அதிகரித்து வருகிறது.
மன அழுத்தப் பிரச்சனை துவங்கும் குழந்தைகள், அதை சொல்லத் தெரியாமல் ஆரம்ப நிலையில் மருத்துவர்களிடம் வருகின்றன. அப்போது மருத்துவர்கள் அதன் தன்மையை அறிந்து உரிய ஆலோசனை மூலம், அவர்கள், இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.
மன அழுத்தப் பிரச்சனை நன்கு வளர் பருவத்திலேயே வரக்கூடிய நிகழ்வாக இருக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் மன நெருக்கடி சார்ந்த குறைபாடுகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என்பதை, புரிந்து கொள்வது நமக்கு சிரமமாக உள்ளது. இது நம்ப முடியாத உண்மையாகவும் இருக்கிறது. பெரியவர்களைப் போல குழந்தைகள், இன்றைய கால கட்டத்தில், தீவிரமாக, பரபரப்பாக இயங்க வேண்டி இருக்கிறது.
தற்போதைய இளம் தலைமுறையினர், போட்டி, சவால்களை எதிர்கொள்வதற்காக, சிறு வயதில் இருந்தே, பள்ளிக் கூடம், டியூஷன் என பகல் பொழுது முழுவதும் படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். இரவில் சில மணி நேரம் மட்டும் தூங்கி எழுந்து மீண்டும், அதிகாலை யிலேயே பாடப்புத்தகத்தை, தீவிரமாக படிக்க வேண்டி உள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் கூட அவர்கள், சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு பாடங்களை படிக்க வேண்டி உள்ளது. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு என விடுமுறை நாட்கள், இப்போது விடப்பட்டாலும், அந்த நாட்களிலும், மாணவர்களுக்கு வரக்கூடிய பாடத்திட்டத்தை பற்றிய போதனை தரப்படுகிறது. இந்த நெருக்கடி மாணவர்களிடம், பெரும் மன அழுத்தத்தை தருகிறது.
வருடத்தில் ஒரு நாள் கூட, ஓய்வு இல்லாமல், பாடம் மற்றும் அதிக மதிப்பெண் பெறுவதற்கான முயற்சிகளை பெற தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டி உள்ளது. பள்ளி படிப்பைத் தவிர, இசை, நடனம், விளையாட்டு, ஒவியம் தீட்டுதல் என பல்வேறு கூடுதல் செயல்பாடு களையும், மேம்படுத்திக் கொள்ள மாணவர்கள் தூண்டப்படுகிறார்கள்.
பொதுவாக குழந்தைகள் படித்தல், விளையாடு தல், புத்தகம் படித்தல் என இருப்பார்கள். தற்போது வளர்ந்த பருவத்தை காட்டிலும் பள்ளி மாணவப் பருவம் மிகுந்த நெருக்கடியான சூழலாக அமைந்து விட்டது. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற பெற்றோர்களும், ஆசிரியர்களும் நிர்பந்திக்க துவங்கி விட்டார்கள். தற்போது 3&-4 வயது குழந்தைகளுக்கு கூட தேர்வு முறை நெருக்கடியை தரும் நிலை ஏற்பட்டு விட்டது. எதிர்காலத்தைப் பற்றி குழந்தைகளுக்கு எந்த வித திட்டமிடல் இருக்காது. பெற்றோர்கள் அத்தகைய, எதிர் காலத்திட்டமிடலை மேற் கொண்டு, தன் பிள்ளை டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தைகளை படி,படி என்று நெருக்கடி ஏற்படுத்துகிறார்கள். தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகி வரும் குழந்தைகளில் ஏற்படும் மாற்றத்தை, பெற்றோர் அறிந்து உஷார் ஆக வேண்டும். அதிக மதிப்பெண் அவர்களுடைய உயர் கல்வியை தீர்மானிக்குமே தவிர வாழ்க்கையை தீர்மானிக்காது என்பதை அவர்கள் உணர வேண்டும். தீவிர மன அழுத்தத்திற்கு குழந்தைகள் ஆளான பின்னர், கதறி அழுவதில் அர்த்தம் இல்லை.
தீவிரமான மன அழுத்தப் பிரச்சனைக்கு ஆளாகும் மாணவர்கள், பள்ளிகளுக்கு, துப்பாக்கி எடுத்துச் சென்று, சக மாணவர்களை சுடுவது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அது மட்டுமல்லாமல் போதை மருந்து பழக்கம், டீன் ஏஜ் பருவ பாலுறவு போன்ற தவறான பாதைகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
எனவே, வருமுன் காப்போம் என்பதைப் போல மாணவர்களுக்கு அதிக நெருக்கடி தராமல் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு பெற்றோர் கூறும் அறிவுரைகள் திணிப்பதாக இல்லாமல், இனிப்பதாக இருக்க வேண்டும். அதற்காக எக்கேடும் கெட்டுப் போ என்று விட்டுவிடாமல், அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே ஓரமாக நின்று கண்காணியுங்கள். எது நல்லது என்று அவர்களுக்கு புரியும்படி வழிகாட்டியாக இருங்கள்.