மதுமேக சந்தேகங்கள்

Spread the love

மிகவும் அதிகமாக எழுதப்பட்ட விவரிக்கப்பட்ட வியாதிகளில், சர்க்கரை வியாதியும் ஒன்று. இருந்தும் பல சந்தேகங்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. இவைகள் தீர்க்கப்படவேண்டிய விஷயங்கள். இவற்றில் சில

சர்க்கரை வியாதி தொற்று நோயா நோயாளிகலிடமிருந்து மற்றவருக்கு பரவுமா?

இல்லை. ஜலதோஷம், ஃபளூ போல் மற்றவர்களுக்கு பரவாது, பரம்பரையாக வரலாம். மரபணுகோளாறுகளினாலும் வரலாம். வாழ்க்கை முறையாலும் ஏற்படலாம். ஆனால் தொற்று நோயல்ல.

அதிகமாக இனிப்புகளை சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி வரும்

சர்க்கரை வியாதி மேற்சொன்னது போல், பாரம்பரியம், மரபணுகோளாறு, வாழும் முறை இவைகளால் ஏற்படும். இனிப்பு சாப்பிடுவதால் மட்டும் வராது. ஆனால் இனிப்பு சாப்பிடுவது, ஓரளவுக்குமேல் என், ஒர்வயதிற்கு மேல், நல்லதல்ல, உடல் எடை கூடும். இதனால் டைப் 2 டயாபடீஸ் வரலாம். உங்கள் குடும்பத்தில் சர்க்கரை வியாதி இருந்தால், இனிப்பை குறைப்பது மட்டுமல்ல, சரியான உணவு முறை அவசியம்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பையே தொடக்கூடாது.

ஆரோக்கிய உணவுடன், உடல் பயிற்சிகளினாலும், மருந்துகளினாலும் சர்க்கரை லெவலை கட்டுப்படுத்தி வரும் நோயாளிகள், ஆரோக்கிய உணவின் ஓர் அங்கமாக இனிப்பை சேர்த்துக் கொள்ளலாம், அளவுடன்.

பழங்கள் ஆரோக்கியமானவை. சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பழங்களில் உள்ள நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆரோக்கியமானவை. பழங்களில் கார்போஹைடிரேட்டும் உள்ளது. எவ்வளவு சாப்பிட வேண்டும், எந்த பழங்களை சாப்பிட வேண்டுமென்பதை உங்கள் டாக்டரோ அல்லது டயட்டிசீயனோ தான் தீர்மானிக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் விளையாட்டுக்களில் ஈடுபடமுடியாது.

தவறு. பாகிஸ்தானின் சிறந்த கிரிக்கெட் வீரர் வாஸிம் அக்ரம் ஒரு உதாரணம். இவர் டைப் – 1, இன்சுலீன் சார்ந்த நோயாளி. இவர் சிறப்பாக ஆட வில்லையா சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்ச்சி, விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. ‘ஆக்டிவ்’ ஆக இருப்பது பல சிக்கல்களை, இதய நோயை, தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள் போகப்போக கண்பார்வை இழந்து குருடாவர்கள்

கண்கள் பாதிக்கப்படுவது சர்க்கரை வியாதியின் ஓரு கெடுதலான விஷயம் தான் ஆனால் உங்கள் சர்க்கரை லெவல், ரத்த அழுத்தம், உடல் எடை கன்ட்ரோலில் இருந்தாலும், புகை பிடிப்பது இல்லாமல், தேவையான உடலுழைப்பு, உடற்பயிற்ச்சி இருந்தால் கண்கள் காக்கப்படும்.

சர்க்கரை வியாதி இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாமா?

வேண்டாம். ரத்தம் கொடுக்கும் போது மயக்கம், தாழ் சர்க்கரை நிலை ஏற்படலாம். வைரஸால் கூட நீரிழிவு நோய் வரலாமென்ற கருத்தும் இருப்பதால், ரத்த தானம் செய்ய நீரிழிவு நோயாளிகள் ஏற்றவர்கள் அல்ல.

சர்க்கரை வியாதி உள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா

கொடுக்கலாம். கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக முக்கியமான உணவு.

நீரிழிவு வியாதி உள்ள பெண்கள் கருத்தடை சாதனங்களை உபயோகிக்கலாமா

உபயோகிக்கலாம்.

சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவர்கள் மதுபானங்களை குடிக்கலாமா?

சாதாரணமானவர்களுக்கே மதுபானம் கெடுதல். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு கெடுதல் தான் செய்யும். பல மதுபானங்களில் சர்க்கரை இருக்கும். மிதமாக அருந்தலாம் என்று சில டாக்டர்கள் சொன்னாலும், அறவே தவிர்ப்பது நல்லது. டயாபிடீஸ் ரத்த அழுத்தத்தை உண்டாக்க கூடிய வியாதி. மது ரத்த அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கும். தவிர கல்லீரல் குடியால் கெட்டுவிடும். மூளையும் குடியால் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் மதுபானத்தை தவிர்க்க வேண்டியதின் இன்னொரு காரணம் அவர்கள் சாப்பிடும் மருந்து சர்க்கரை அளவை குறைக்கும் குளுக்கோபே க்ளூகோஸ் மருந்துகளுக்கு மதுபானங்கள் ஒத்துக் கொள்ளாது. அப்படி சாப்பிட்டால் தீடிரென்று சர்க்கரை அளவு குறைந்து விடலாம். தாழ்நிலை சர்க்கரை ஆபத்தானது. தவிர மதுபானங்கள் லேக்டிக் அசிடோஸை அதிக அளவு லாக்டிக் அமிலம் உண்டாக்கும்.

நீரிழிவு நோயாளிகள் விரத காலங்களில் பட்டினி இருக்கலாமா?

கூடாது. ‘ஓவராக’ சாப்பிடுவது எவ்வளவு கெடுதியோ, அவ்வளவு கெடுதி பட்டினி இருப்பது. உணவால் கிடைக்கும் சக்தி கிடைக்கவில்லை என்றால், கல்லீரலின் சேமிப்பான குளூகோஜென், திசுக்களில் உள்ள கொழுப்பை, இவற்றை உடல் எடுத்துக் கொள்ளும் நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே தேவையான இன்சுலீன் கிடைக்காமல், நீரிழிவுக்கார்களின் உடல் நிலை மோசமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு காயம்பட்டால், புண் லேசில் ஆறாது. இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யமுடியுமா?

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்ளுவார்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரத்யேக கவனம் செலுத்தி கவனிக்கப்படுவதால், அறுவை சிகிச்சைகள் டயாபிடீஸ் நோயாளிகளுக்கு செய்யலாம்.

கல்லீரல், சிறு நீரகம் இவற்றுக்கு மாற்று அறுவை சிகிச்சைகள் இருப்பது போல், கணையத்தையும் மாற்றமுடியுமா

இதுவரை கணைய மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்கவில்லை.

இனிப்பு உண்பதால் மாத்திரம் சர்க்கரை வியாதி வருவதில்லை. பின் ஏன் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையை சாப்பிடக்கூடாது

கணையம் பாதிக்கப்படுவதால் இன்சுலீன் சுரக்காமல் உடலில் சர்க்கரை தங்கி சர்க்கரை வியாதி உண்டாகுகிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள் சர்க்கரை சாப்பிட்டால், ஏற்கனவே கோளாறான கணையம் இன்னும் பாதிக்கப்படும். பீடா செல்கள் மேலும் அழற்சியடையும். சர்க்கரை இல்லாத வேறு கார்போஹைடிரேட்களை உண்ணும் போது, அவை குளூகோஸாக மாற்றப்பட்டு ஜிரணிக்கப்படுகின்றன. இதனால் அதிகமாகும் ரத்த சர்க்கரை அளவு, வெறும் சர்க்கரையை இனிப்பு சாப்பிடும் போது ஏற்படும் அதிக அளவை விட குறைவு. ஆகவே டயாபடீஸ் உள்ளவர்கள் சர்க்கரை சாப்பிடக்கூடாது.

அரிசி சாதம் சாப்பிடக்கூடாது.

தினமும் சாப்பிடலாம், குறைந்த அளவில். கோதுமை சப்பாத்திகளை மாற்று உணவாக சேர்த்துக் கொள்ளுவது நல்லது. அரிசி, கோதுமை, இரண்டிலும் கிட்டத்தட்ட சம அளவில் கார்போஹைடிரேட் இருந்தாலும், கோதுமை உணவுகள் ஜுரணிக்க சிறிது தாமதமாகும். கோதுமை உணவின் இன்சுலீனும் குறைவாக தேவை. இன்சுலீனுக்கு ஈஸியாக இருக்கும். அரிசியின் கார்போஹைடிரேட் சீக்கிரம் ரத்தத்தில் கலந்து, சர்க்கரை அளவை ஏற்றிவிடும்.

நீரிழிவு நோயாளிகள் தேனை சேர்த்துக் கொள்ளலாமா?

தேன் சர்க்கரை தான். எனவே தேனை தவிர்க்கவும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உருளைக் கிழங்கு கெடுதலா?

உருளைக்கிழங்கு கூட்டு கார்போஹைடிரேட் உள்ள காய்கறி. அளவோடு, குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.

அதிகமாக, வேண்டியதை சாப்பிட்டு விட்டு, நீரிழிவு மாத்திரையை ஒன்று எக்ஸ்ட்ராவாக போட்டுக் கொள்ளலாமா?

கூடாது. இது ஆபத்தான செயல்.

கசப்பான உணவுகள் சர்க்கரையை முறிக்கும் எதிர்மறை உணவுகள்

இல்லை, வாயை தாண்டியவுடன் எல்லா உணவுகளும் ஓரே சுவை தான்

சிறுநீரில் தொடர்ச்சியாக சர்க்கரை தென்படாவிட்டால் டயாபிடீஸ் நன்றாக கட்டுப்படுத்தப்பட்டது என்று அர்த்தமா?

பல சமயங்களில் சர்க்கரை அளவு 180 மி.கி. மேல் போனால்தான் சிறுநீரில் சர்க்கரை சேரும். சில சமயங்களில் 200 மி.கி. மேல் போனால் கூட சிறுநீரில் தெரிவதில்லை. எனவே, சிறுநீர் பரிசோதனை மட்டும் போதாது. ரத்தப் பரிசோதனையும் தேவை.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இளநீர் சாப்பிடலாமா?

இளநீர் இயற்கையான, ஆரோக்கியமான உணவு ஆனால் அது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதல்ல. உணவு நிபுணர்கள் சொல்வது – ஒரு டம்ளர் இளநீரில் 8 லிருந்து 10 கிராம் கார்போ-ஹைட்ரேட் இருக்கிறது. பெரும்பாலும் சர்க்கரை நிறைந்தது. அதனால் சர்க்கரை அளவை ஏற்றிவிடும். குடிக்க வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டால் 1/2 கப் இளநீர் மட்டும் குடிக்கவும். கூடவே பாதாம் போன்ற பருப்புகள் (அ) பீன்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும். இளநீருடன் பழங்களை சேர்த்து சாப்பிடாதீர்கள்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love