மன அழுத்தம் மிரட்டும் உண்மைகள்

Spread the love

மனிதர்களில் ஆண்வர்க்கத்தினர் தான் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களில் வலிமையாக இருக்கிறோம் என்று நினைத்து கொள்வது வழக்கமானது. அப்படியே, ஒரு சில பலகீனங்கள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டு விடுகின்றனர். ஆனால், பெண்கள் நிலை அவ்வாறு இல்லை.

நமக்கு ஏதேனும் பிரச்சனையா? உதவிக்கு யாரை அணுகலாம் என்று சக தோழிகளை, உறவினர்களை கூச்சப்படாமல் அணுகி தீர்வு காண்கின்றனர். ஆண்களோ, சுயமாக சிந்தனையும் மருத்துவமும் எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு மது அருந்துவது வடிகால் என்று தவறாக எண்ணுகின்றனர். இதன் விளைவு ஆரம்பத்தில் தெரியாது எனினும் பிற்காலத்தில் மனம் சார்ந்த ஒரு சிக்கலைச் சந்திக்கின்றனர்.

இந்தியாவில் மன அழுத்த வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கில் எடுக்கும் பொழுது தெரிய வந்த விஷயங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

மன அழுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 45 சதவீத டீன் ஏஜ் பிரிவினர் மது, போதை பொருட்களை தீர்வாக எண்ணி பயன்படுத்தி வருகின்றனர். மன அழுத்தத்தால் சுமார் 65 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்ளலாமா? என்று சிந்தனை செய்கின்றவர்களாக உள்ளனர். 15 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். மன அழுத்தம் அடைந்துள்ள இந்தியர்களின் சராசரி வயது 31, 32 ஆகும். வளர்ந்த நாடுகளில் இதைவிட குறைவான வயதினராக உள்ளனர்.

இந்தியாவில் பத்தில் ஒரு ஆண், நான்கில் ஒரு பெண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?

உடல் நலக்கோளாறுகள், கவலை, பொருளாதாரச் சிக்கல்கள், வேலை வாய்ப்பின்மை, பணி புரியும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக உடல் சார்ந்த, மனம் சார்ந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் 45 மில்லியன் மக்கள் மன அழுத்தம், டென்சன், கோபம், கவலை, அவநம்பிக்கை, மன நிலை மாறுபடுதல், பொறுமை இன்மை போன்றவற்றின் காரணமாக மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றது.

மனிதனின் மூன்று வகையான குணங்களான சாத்வீக, ரஜா, தாமசமானது நமது மனதை ஒழுங்குபடுத்துகிறது. இதில் சாத்வீக குணம் தரும் ஆற்றல், நேர்மறை கொண்டதாகும். இதனால் எந்த வித நோயும் ஏற்பட காரணமாகாது. ஆனால், ரஜா, தாமச குணங்கள் தருவது நரம்பு இயக்கங்களில் மாறுதலை உருவாக்கக் கூடியது. ரஜா, தாமச குணங்களின் ஆற்றல்கள் இயல்பாக இல்லையெனில் மனித மூளை இயக்கத்தில் பல மாற்றங்களைத் தோற்றுவிக்கும். 12 தோஷங்களை உருவாக்கும். காமம், கோபம், பேராசை, ஈடுபாடு, பொறாமை, ஈகோ, துக்கம், இறுக்கம், கவலை, பயம், மாயத்தோற்றம், இயோபோஃபியா போன்ற 12 தோஷங்கள் ஏற்படக் காரணமாகிறது என ஆயுர்வேத நூலான சரக சம்கிதாவில் கூறப்பட்டுள்ளது.

சாத்வீகக் குணம் கொண்ட உணவுகளைச் சாப்பிடாமல், ரஜா, தாமச ஆற்றலைத் தரும் அல்லது அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிட்டால் மேற்கண்ட தோஷங்கள் அதிகரித்து, மன நிலைச் செயல்பாடுகளை சீர்குலைத்து செயல்பட விடாமல் தடுக்கும்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன?

1.யாரிடம் பேசினாலும் எப்பொழுது எதிர்மறை எண்ணங்களாகவே பேசுவது. எதைப் பார்த்தாலும் எதிர்மறையாக நோக்குவது அல்ல எண்ணுவது.

2.தான் மனோ வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கோம் என்பதை உணராமலேயே நமது மனோபாவத்தை வெளிப்படுத்துவது.

3.எப்பொழுதும் ஒரு சோகம், அச்சமுடன் காணப்படுதல்.

4.எப்பொழுதும் எரிச்சலுடன் காணப்படுவது. மற்றவர்களிடம் எரிச்சலைக் காண்பிப்பது. கோபத்தைக் காண்பிப்பது.

5.அன்றாட வாழ்க்கையில் எந்தவித செயலிலும் ஆர்வமின்மை, அலட்சியம் காட்டுதல், திடீர் ஆர்வக் குறைவு அல்லது உணர்ச்சி வசப்படுதல்.

6.சக மனிதர்கள் பலர் இருக்கும் நேரத்திலும் தாம் தனியாக இருக்கிறோம் என்று உணர்வு கொள்வது.

மன அழுத்தம் – குணம் பெறும் வழிகள்

மன அழுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள்  தினசரி நடைபயிற்சி, யோகா, தியானம், பிராணாயாமம், தேவையான அளவு நல்ல ஓய்வு, எளிமையான உடனுக்குடன் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நேர்மறைப் பேச்சு, உரையாடல்களுடன் இருப்பது அவசியம். வயிற்றில் வாயுவை ஏற்படுத்தும், எளிதில் ஜீரணம் ஆவதைத் தடுக்கும் உணவுகளான ராஜ்மா, கடலை, உளுந்து போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் இரவில் கண் விழித்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு உணவை உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாதவாறு உடலைப் பேணிக் கொள்வது அவசியம். மன அழுத்தமானது கவலை, கூடுதல் மன அழுத்தம், இதயத் தாக்குதல், கை, கால்கள் செயலிழத்தல், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி, நோய்த் தொற்றுகள் மற்றும் குறிப்பிட்ட சில புற்று நோய்கள் ஏற்படக் காரணமாகி விடுகிறது.

முடக்கு வாதம், தோல் வியாதிகள், குடல் அழற்சி, வயிற்றுப் புண் ஏற்பட சந்தர்ப்பமுண்டு. மன அழுத்தம் காரணமாக இறுதியில் தூக்கமின்மை, முதியோர்களுக்கு ஏற்படும் பார்கின்சன் என்ற மறதி நோய், நரம்புத் தளர்ச்சி ஏற்படலாம்.

மன அழுத்தம் குறைக்க உதவும் ஆயுர்வேதம்.

உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தின் அவசியத்தை ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. உடலும், மனதும் தெளிச்சியுடன் காணப்பட அஸ்வகந்தா, ஜடாமான்சி, வல்லாரை, சங்கு புஷ்பம். வசம்பு போன்ற மூலிகைகள் உதவுகின்றன. மேற்கூறிய மூலிகைகள் மன அழுத்தம், இறுக்கத்தில் இருந்து விடுதலை தருவதுடன் மட்டுமல்லாது நினைவுத் திறனையும் அதிகரிக்கச் செய்கிறது.

ஜடாமான்சி, அஸ்வகந்தா போன்ற மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட கஷாயம் மற்றும் தைல எண்ணெய்கள் மன இறுக்கத்தை குறைக்க உதவுகின்றன. நரம்பு மண்டல செயல்பாடுகளை பராமரிக்க, தூண்டி விடுகின்றன. வாரம் ஒருமுறை மற்றும் ரெகுலராக ஆவிக் குளியல், பாதம் மசாஜ் எடுத்துக் கொள்வதும் மன இறுக்கத்தைப் போக்கி மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. இம்முறைகளினால் நிம்மதியான உறக்கம் கிடைத்து தூக்கமின்மை நோயை குணப்படுத்தவும் இயலுகிறது.

அதிமதுரம், நெல்லி, கடுக்காய், அர்ச்சுனா, சதாவரி, புனர்நவா, திராட்சை, அரசு, தான்றிக்காய் போன்ற மூலிகைகளும் மன அழுத்தம் சார்ந்த நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

மன அழுத்தம் குறைய…

சந்தோஷமாக இருக்க…

எப்பொழுதும் யாரிடம் பேசும் பொழுதும் அன்பாக பேசுங்கள்.

நேர்மையாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ளுங்கள்.

நேர்மறை சிந்தனையுடனும், தன்னம்பிக்கையுடனும் இருங்கள்.

மற்றவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள காது கொடுத்துக் கேளுங்கள்.

சுயக் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நன்றாக உறங்குங்கள்.

நன்றாக சாப்பிடுங்கள்.

நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி, மெது நடை என்று உடலுக்கு உற்சாகம் தருவதை காலை, மாலை என்று ஒவ்வொன்றாக மேற்கொள்ளுங்கள்.

ஒரு முயற்சியில் தோல்வி வந்தாலும், அதைக் கண்டு அஞ்சாமல் தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்று மேலும் முயற்சியுங்கள்.

நல்ல நண்பர்களை நட்புப் பாராட்டுங்கள்.

மனதைத் தட்டி எழுப்பும், உற்சாகம் தரும் புத்தகங்களைப் படியுங்கள்.


Spread the love