ஆமணக்கின் அற்புதம்

Spread the love

ஆமணக்குச் செடி பசுமையுடன் காணப்படும் புதர்ச் செடியாகும். இதன் தண்டுப் பகுதியில் வெண்மை நிறத்தில் மாவு படிந்து காணப்படும். இதன் இலைகள் நீண்ட காம்பினை உடையது. கனிகள் கோள வடிவத்தில் வெடி கனியாகவும் காணப்படும். இதில் ஆண், பெண் என இரு விதமான மலர்கள் காணப்படும். இதில் அதிகளவிலான மருத்துவ குணங்களும், பொருளாதார பலன்களும் நிறைந்துள்ளது.

ஆமணக்கு செடியானது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றது. இது இந்தியாவில் அனைத்து இடங்களிலும், தரிசு நிலங்களிலும் நன்கு வளரக் கூடியதாகும்.

ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு, செல்வாணக்கு என்ற மூன்று வகைகள் உள்ளன.  இதில் சிற்றாமணக்கு, பேராமணக்கு அவற்றின் கொட்டைகளின் அளவை பொருத்ததாகும். சிற்றாமணக்கின் கொட்டை அளவில் சிறியதாகவும், பேராமணக்கின்  கொட்டை அளவில் பெரியதாகவும் காணப்படும். இரண்டு வகைகளும் மருத்துவ பயனுடையதாகும். சிவப்பான விதை மூலமாக செல்வாணக்கு என்ற மூன்றாம் வகை பிரித்து அறியப்படுகின்றது.

ஆமணக்கு எண்ணெய்

முந்தைய காலங்களில் வயல்வெளி, ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படும் விதைகள் சேகரிக்கப்பட்டு வீடுகளிலும், அடுப்பங்கரையிலும் உபயோகப்படுத்தும் எண்ணெயாக தயாரித்து பயன்படுத்தி வந்தனர்.

ஆமணக்கு எண்ணெய் வயிறு, குடல், கர்ப்பப்பை முதலான அனைத்து நோய்களுக்கும் ஆரம்ப கட்ட மருந்தாக முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனை  இரவு நேரங்களில் விளக்கு வைப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர். எனவே தான் விளக்கெண்ணெய் என்ற பெயர் வந்தது.

எண்ணெய் தயாரிப்பு முறை

ஆமணக்கு விதைகளை இரண்டு முறைகளில் எண்ணெய் எடுக்கலாம். ஒன்று இயந்திரங்களில் ஆட்டி எண்ணெய் எடுப்பது. மற்றொன்று ஆமணக்கு விதைகளை இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து எண்ணெய் எடுப்பது. இது ஊற்றின எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.

பருப்பு வேக வைக்கும் போது அதில் 2 துளிகள் ஊற்றின எண்ணெய் விட வாயு நீங்கும். பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்குமான சிறந்த குளியல் எண்ணெய் ஆகும்.

ஊற்றின எண்ணெய் அனைத்து தரப்பினருக்கும் மலச்சிக்கலை நீக்குகிறது. ஊற்றின எண்ணெயில் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்கும் முன் குடித்து வரலாம். சிறுகுழந்தைகளுக்கு இரண்டு துளிகள் போதுமானது. இது பக்கவிளைவற்ற பாதுகாப்பான மலமிளக்கியாகும்.

மருத்துவ பயன்கள்

ஆமணக்கின் இலை, வேர், விதை, எண்ணெய் ஆகியவை கசப்பு சுவையும், வெப்பத்தன்மையும் உடையது. இது பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.

மஞ்சள் காமாலை நீங்க

ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து எலுமிச்சைப்பழ அளவில் காலையில் மட்டும் உண்டு வரவும். இவ்வாறு 3 நாட்கள் தொடர்ந்து செய்து வர மஞ்சள் காமாலை நீங்கும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க

பசுமையான ஆமணக்கு இலையை நெய் தடவி லேசாக வதக்கி, அதனை இளஞ்சூட்டில் மார்பில் வைத்து கட்டலாம்.

மார்பு காம்புகளில் ஏற்படும் புண்கள் மற்றும் வெடிப்புகள் மீது ஆமணக்கு எண்ணெய் பூசி வர விரைவில் குணமாகும்.

வீக்கங்கள் குறைய

ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கி விளக்கெண்ணெய் விட்டு நன்கு வதக்கி ஒத்தடம் கொடுக்க வீக்கங்கள் குறையும்.

கட்டிகள் மறைய

சூட்டினால் ஏற்படும் கட்டிகள் நீங்க ஆமணக்கு இலைகளை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி கட்டி வைக்கவும். இவ்வாறு செய்வதால் கட்டி விரைவில் பழுத்து உடைந்து சீழ் முழவதும்  வெளியேறும். பின் அப்பகுதியில் தேங்காய் எண்ணெய், மஞ்சள் பொடி கலந்து பூசவும். புண்கள் விரைவில் ஆறும்.

மலச்சிக்கல் நீங்க

மலச்சிக்கலுக்கு ஆமணக்கு எண்ணெயை மலவாயின் உட்புறப் பகுதியில் தடவலாம். இதனால் மலம் எளிதில் இளகி வெளிப்படும்.

4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், ஒரு தேக்கரண்டி அளவு தேன் இவற்றை சம அளவு கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுக பேதியாகும்.

மாதவிடாய் பிரச்சனைக்கு

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிறு வலி நீங்க விளக்கெண்ணெயை தடவி நன்கு மசாஜ் செய்யலாம். அல்லது ஆமணக்கு இலையை நன்கு வதக்கி அதனை வயிற்றுப் பகுதியில் வைத்து கட்டலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

வாத, பித்த, கப நோய்க்கு

விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் ஃபர்ஸ்ட் நைட் ஆகிய மூன்றும் ஒன்றாக  கலந்து தலையில் உறவைத்து குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை காணலாம். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், ஃபர்ஸ்ட் நைட் ஆகியவை வாத நோயாளிகளுக்கு 3:2:1 பித்த நோயாளிக்கு 2:1:3 கப  நோயாளிக்கு 1;3;2.

வாதநோய் ஆன ரொமாட்டாய்டு ஆர்த்தரைட்டீஸ் என்று கூறப்படும் கை, கால், மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஆமணக்கின்  ஓடு நீக்கி உள்ளிருக்கும் பருப்புகளை எடுத்து  அதனை வறுத்து நன்கு சூடேற்றவும். பின் இதனை துணியில் முடிந்து வலியுள்ள இடங்களில் ஆமணக்கு எண்ணெய் தடவி 30 நிமிடம் ஒத்தடம் கொடுக்கவும். இவ்வாறு செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

சுத்தமான எண்ணெயை கண்டறிதல்

விளக்கெண்ணெயில் உயர்தரமானது பழுப்பான வெண்மை நிறத்தில் நல்ல மணமுடன், படிவுகள் அற்று காணப்படும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love