ஆமணக்கு

Spread the love

ஒரு காலத்தில் விளக்கெண்ணை (ஆமணக்கு எண்ணை) ஒவ்வொரு குழந்தைக்கும் சீரான வயிற்றுப்போக்குக்காக கொடுப்பது அனைவருக்கும் தெரிந்ததே. கையில் விளக்கெண்ணை கிண்ணத்தை வைத்துக்கொண்டு சிறுவர்களை தாய்மார்கள் துரத்திக்கொண்டு ஒடும் காட்சியை நாம் இந்த காலத்தில் காணமுடியாது. விளக்கெண்ணையை கண்டதும் ஒடும் சிறுவர்கள் மீது தவறுசொல்லமுடியாது. விளக்கெண்ணை வயிற்றை பிரட்டும் நாற்றம் உடையது.

ஆமணக்கு, ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்ததாக தாவரவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் சிலர் இந்தியா தான் ஆமணக்கின் தாயகம் என்கின்றனர். தற்போது உலகெங்கும் ஆமணக்கு பயிரிடப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் ஆமணக்கு வேரும், வித்துக்களும், மரப்பட்டைகளும் ஆயுர்வேதத்தில் மருந்துகளாக பயன்பட்டன. சுஸ்ருதர், தமது சம்ஹிதையில் ஆமணக்கு பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கிறிஸ்துவ காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பேயே விளக்கெண்ணையைப் பற்றியும், ஆமணக்கு செடியைப் பற்றியும் நமது மூதாதையர்களுககு தெரிந்திருந்தது.

சுஸ்ருத சம்ஹிதையில் இரண்டு வகை ஆமணக்கு குறிப்பிடபடுகிறது. ஒன்று வெள்ளை, மற்றொன்று சிவப்பு ஆமணக்கு. இரண்டின் குணங்களும் ஒன்றே.

உலகில் 55 – 65 சதவிகித ஆமணக்கு உற்பத்தியை பிரேசிலும் இந்தியாவும் செய்கின்றன. இந்தியாவில் 300 – 400 ஆயிரம் ஹெக்டேர்களில் ஆமணக்கு பயிரிடப்படுகிறது. ஆந்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது.

ஆமணக்கு செடி, சிறுமரம் போல் 2 – 4 மீட்டர் உயரம் வளரும். பச்சை நிற தண்டும் இலைகளும் வளர வளர பழுப்பு நிறமாகும். இலைகள் பெரியதாக, தண்டின் இருபக்கங்களிலும் மாறி, மாறி இருக்கும். பூக்கள் பெரியவை. பழங்கள் மூன்று அறைகள் (விதைகளாக) கொண்டவை.

ஆமணக்கு செடி வலுவானது. வறண்ட சூழ்நிலையிலும் வளரும். பெருமழை, வெள்ளத்தையும் தாங்கும். சிவப்பு களிமண் பிரதேசம் ஆமணக்குக்கு உகந்தது. இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு கிட்டத்தட்ட 200 கிலோ மகசூல் (ஆமணக்கு விதை) கிடைக்கும். இதே, பிரேசிலில் ஒரு ஹெக்டேருக்கு 900 கிலோ கிடைக்கிறது.

ஆமணக்கின் தாவிரவியல் பெயர்: Ricinus Communis

குடும்பம்: Euphorbiaceae

சம்ஸ்கிருதம்: எராண்டா, இந்தி: அராந்த்

ஆங்கிலம்: Castar – Oil Plant.

ரசாயனம்:

ஆமணக்கு விதையில் 50% எண்ணையும் 26% புரதமும் உள்ளன. எண்ணையில் ரைசினின் (Ricinine) என்ற அல்கலாயிட், டாக்ஸால்புமீன் ரைசீன் (Toxalbumine ricine) முதலியவை உள்ளன.

ஆமணக்கு எண்ணை (விளக்கெண்ணை) – ஆமணக்கின் விதையிலிருந்து நெய் இருவகையாக எடுக்கப்படும். அவை பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்பனவாகும்.

பச்சை எண்ணெய்: ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, எந்திரத்தின் மூலமாய்ப் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய், பச்சை எண்ணெய் எனப்படும்.

ஊற்றின எண்ணெய்: ஓர் அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீர் விட்டு, அதில் ஆமணக்குப் பருப்புகளை இடித்து, ஒரு பங்கு சேர்த்து, தீயில் எரிக்க நெய் கக்கி நீரின் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து, வேறு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கலந்துள்ள நீரை, அனலில் வைத்து போக்கும் முறையே ஊற்றின எண்ணெய் எனப்படும். இதில் நீருக்குப் பதிலாக, இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றமற்றதும், உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதுமாகும்.

பயன்கள்

·     விளக்கெண்ணை சிறந்த மலமிளக்கி வயிற்றின் சுவர்களில் கோழையை உண்டாக்கும் சுரப்பிகளை ஊக்குவிக்கிறது. “பெரிஸ்டாலிஸ்” எனப்படும் தசை இயக்கத்தையும் ஊக்குவிக்கிறது. குடலின் சுவர்களுக்கு வழவழப்பை கொடுக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து விளக்கெண்ணை. பாதுகாப்பானது. எல்லா பருவ காலங்களிலும் கொடுக்கலாம். கொடுப்பது சுலபம். சுத்தமான விளக்கெண்ணை 30 – 60 கிராம் எடுத்து 250 – 375 கிராம் பாலில் சேர்த்து குடிக்க கொடுக்க வேண்டும். 1 மணி நேரத்தில் பலன் தெரியும். பாலுடன் சேர்த்தும், விளக்கெண்ணையை குடிப்பது கஷ்டமானால், பாலுக்கு பதில் ஓமத்தண்ணீர் அல்லது இஞ்சி தண்ணீருடன் கொடுக்கலாம். எலுமிச்சை சாற்றையும் பயன்படுத்தலாம்.

·     மூட்டுவலி, ருமாடிஸம் இவற்றுக்கு விளக்கெண்ணையை சிறிது சூடாக்கி, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். இலைகளை அனலில் சூடாக்கி, மூட்டுகளில் மேல் வைத்து கட்டலாம். இலைகளில் விளக்கெண்ணையை தடவி, வாட்டி, உபயோகிக்கலாம்.

·     தலை முடி கொட்டுவதை நிறுத்தும் தைலங்களில் விளக்கெண்ணை சேர்க்கப்படுகிறது. பொடுகை போக்கும்.

·     சருமத்தை மிருதுவாக்குவதில் விளக்கெண்ணை சிறந்தது. குளிக்குமுன் உடலில் தடவிக் கொண்டு குளிக்கலாம். கண் புருவங்களில் தடவினால் புருவங்கள் பிரகாசமாக நன்கு வளரும்.

·     இலை: சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைப் பொடி கொடுக்க காமாலை குணமாகும். இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் கொடுக்கலாம். ஆமணக்கின் இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் தாய்மார்களுக்கு தாய்ப் பால் பெருகும். ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், இரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வர இரத்தக் கசிவு மறையும். ரணம் ஆறும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.

இதர உபயோகங்கள்

·     எண்ணையை பிரித்தெடுத்தவுடன் கிடைக்கும் “புண்ணாக்கு” உடனடியாக மாட்டு தீவனமாக பயன்படாது. காரணம் அதில் உள்ள ஆல்புமின் ரைசின் (ricin) விஷத்தன்மை உடையது. இதை பிரித்தெடுத்தால் தீவினமாக விளக்கெண்ணை புண்ணாக்கு பயன்படுத்தமுடியும். எனவே புண்ணாக்கு உரமாக பயனாகிறது.

·     இயந்திரங்களுக்கு வழவழப்பை உண்டாக்கி, உராய்வதை மிருதுவாக்கும் எண்ணைகளில் விளக்கெண்ணை கலக்கப்படுகிறது.

·     சோப்பு தயாரிப்பில் பயனாகிறது.·    

·     வர்ணங்கள் தயாரிப்பிலும் விளக்கெண்ணை உதவுகிறது.


Spread the love