ஆமணக்கின் இலை, வேர், விதை, நெய் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆமணக்கு யூஃபோர்பியேசி என்ற ஒற்றைப் பூவிதழ் வட்டத்தையுடைய இரு விதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பரவிக் காணப்படுகிறது.
இலை:
சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைப் பொடி கொடுக்கக் காமாலை குணமாகும். இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கின் இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் பெருகும். ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், இரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வர இரத்தக் கசிவு மறையும். ரணம் ஆறும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.
வேர்:
ஆமணக்கின் வேரைக் குடிநீர் செய்து அதில் சிறிது பூநீறு சேர்த்து மூன்று அல்லது, ஐந்து நாள்களுக்குக் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் உட்கொண்டால் பக்கச்சூலை குணமாகும். வளிக் குற்றத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் குடிநீர்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம். பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.
விதை:
ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்றிக் காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். விதையை ஓடு நீக்கி அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றிட அவை பழுத்து உடையும். கன்று ஈனாத எருமைப் பாலில் ஆமணக்கின் பருப்பை இழைத்துக் கண்களில் தீட்டினால் மறுநாள் பீளை போகும். பின்னர்க் கண்கள் மிகவும் தூய்மையாக இருக்கும்.