யாராவது குண்டக்க, மண்டக்க பேசினால், அவனுக்கு ‘கொழுப்பு’ அதிகமாகி விட்டது என்கிறோம். கொழுப்பு, பேச்சில் அதிகமானாலும், உடலில் அதிகமானாலும் ஆபத்துதான். மனித உடலுக்கு கொழுப்புச் சத்து மிக அவசியம். அது அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நம் உடலுக்கு கொழுப்பு ‘நல்ல நண்பன்’ (High Density Lipo Protine-HDL) . அதே நேரத்தில் ‘மோசமான எதிரி’ (Low Density Lipo Protine-LDL) .
வெள்ளை நிறம் கொண்ட மெழுகு போன்ற தோற்றமுள்ள கொழுப்பு வகையை சேர்ந்தது கொலஸ்ட்ரால். உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை மூடிப்பாதுகாக்கும் சவ்வு உருவாகிட மூல காரணகர்த்தா. கோடை காலங்களில் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறி, உடல் வெப்பம் குறைந்து விடாமல், சீராக பரமாரிக்கும் வேலையை செய்கிறது. தோலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வெளிப்புற அதிர்வுகளில் இருந்து உடல் உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. இப்படி ஏராளமான நன்மைகள் கொலஸ்ட்ராலால் கிடைக்கிறது.
உணவின் மூலம் உடலுக்கு வந்து சேர்கிற கொலஸ்ட்ரால் ரத்தத்தில் நேரடியாக கரையாத என்பதால், உடலில் வந்து சேரும் கொலஸ்ட்ராலுக்கு ஏற்ப கல்லீரல், ‘லிபோ புரோட்டின்’ எனும் கொழுப்பு புரதத்தை உற்பத்தி செய்து, உடலில் சேரும் கொலஸ்ட்ரால் மீது போர்வையாக படிந்து உடலின் பல பாகங்களுக்கும் நகர்த்தி செல்கிறது.
உடலுக்கு வந்து சேரும் மிக குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்புடன், கல்லீரல் உற்பத்தி செய்யும் லிபோ புரோட்டின் சேரும்போது, மிக குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ரால் (Very Low Density Lipo Protine-VLDL) ஆகிறது. அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புடன் கல்லீரல் உற்பத்தி செய்யும் லிபோ புரோட்டின் சேரும்போது, அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு ( High Density Lipo Protine-HDL) ஆகிறது.
மிக குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு, ரத்தத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்பட்டபின், குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ராலை (Low Density Lipo Protine-LDL) உற்பத்தி செய்கிறது. இந்த ‘எல்டிஎல்’தான், முன்பே கூறியது போல் மனித உடலின் ‘மோசமான எதிரி’யாக செயல்படுகிறது.
எண்ணெய், நெய்யில் பொரித்த, வறுத்த அயிட்டங்களை வெளுத்துக் கட்டும்போது, உடலில் அதிகளவு சேரும் கொலஸ்ட்ரால், கல்லீரல் உற்பத்தி செய்யும் லிபோ புரோட்டின் எனும் கொழுப்பு புரதம் இவை இரண்டும் அதிகரிக்கும். அப்போது இயற்கையாகவே எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகரித்து விடும்.
இது, ரத்த பிளாஸ்மாவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து உடலின் பல்வேறு பாகங்களில், ரத்த நாளத்தின் உட்புற சுவர்களில் அதிகப்படியான கொலஸ்ட்ராலை படியச் செய்துவிடுகிறது. இந்த செயல் தொடர்ச்சியாக நடைபெறும்போது, ரத்த நாளங்களின் உள்புறம் குறுகலாகவும், ரத்த நாளம் தடிமனாகவும் மாறி விடுகிறது. இதனால் இதயத்துக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இயல்பான வேகத்தில் ரத்தம் சென்றடைவதில்லை. ஆக்ஸிஜனும் போதுமான அளவு, உடல் உறுப்புகளுக்கு கிடைப்பதில் தடை உண்டாகிறது.
மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் தடை ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் மற்று உறுப்புகளுக்கும் ரத்த நாளம் பாதிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் இதய அடைப்பு, சிறுநீரக, நுரையீரல் கோளாறு வந்து நம்மை பாடாய்படுத்துகின்றன.
பரம்பரை, சோம்பல், உடற்பயிற்சியின்மை, புகை, மது பழக்கம், மன அழுத்தம், கொழுப்பு சத்துள்ள உணவுகளை வெளுத்துக் கட்டுவது, சர்க்கரை நோய், நாளமில்லா சுரப்பிகளின் சமச்சீரற்ற நிலை என கொழுப்பு அதிகரிக்க இப்படி பல காரணங்கள் உள்ளன.
நமது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை பெற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரை சேர்ப்பது அவசியம். பசலைக்கீரை மிகவும் நல்லது. காய்கறிகள், காளான் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மாவுப்பண்டங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மீன் உணவை எடுத்துக் கொள்ளலாம். தயிர், வெண்ணெய், நெய் மற்றும் மூளை, ஈரல் போன்ற அசைவ உணவை அறவே தவிர்க்கவும்.
தினசரி உணவில் ஒரு டேபிள் ஸ்பூனுக்கு மேல் சமையல் எண்ணெய் சேர்ப்பதை தவிர்க்கவும். புகை, மது பழக்கத்தை விட்டொழியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.