பிராங்கைல் குழாய்கள் (Bronchial Tubes)

Spread the love

பிராங்கைல் (மார்ச்சளி நோய்) குழல்கள் மூச்சுக் கிளைக் குழாய்கள். இவை மூச்சுக்குழாயிலிருந்து இரண்டு கிளை களாக பிரிகின்றன. ஒரு கிளை வலப்புற நுரையீரலுக்கும் மற்றொன்று இடப்புற நுரை ஈரலுக்குமாக செல்கின்றன. பிராங்கைல் குழல்கள் நுரையீரலுக்கு காற்றை எடுத்துச் செல்லும் வழிப்பாதைகளில் தொற்றாலோ, ஏதாவது தூசியினால் (அ) மாசு படிந்த காற்றினாலோ பிராங்கை குழாய்கள் பாதிக்கப்படுவது பிராங்கைடீஸ் (Bronchitis) எனப்படும்.

பிராங்கை குழல்கள் விரிவடைந்து, திடமான கெட்டியான சளி உண்டாகும். மூச்சுவிடுவது கடினமாகும். இந்த பாதிப்புகள் 90 நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தீவிர ப்ராங்கைடீஸ் (Acute Bronchitis) எனப்படும். குளிர்காலத்தில் தொற்று பிராங்கைடீஸ் அதிகம் ஏற்படும். வைரஸ்களால் ஏற்படும் தொற்றை குணப்படுத்தினாலும், அதன் பாதிப்பு பல நாள் நீடிக்கும். வைரஸ் போதாதென்று பாக்டீரியாவும் பிராங்கைடீஸை உண்டாக்கும்.

காரணங்கள்

மாசு படிந்த சுற்றுப்புற சூழ்நிலை, தூசி

குளிர்காலத்தில் அதிகம் நேரிடும்.

பாக்டீரியா, தொற்று Mycoplasma, Pneumoniae, Chlamytin நுண்ணுயிர்களால் இளைஞர்களை தாக்கும். வயதானவர்களை தாக்குபவை Streptococcus Pneumonoiae, Haemophilus influenza  மற்றும் Moraxella Catarrhalis பாக்டீரியாக்கள் பிராங்கைடீஸை உண்டாக்கும். வைரஸ் கிருமி ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’. சிலருக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்கம் இரண்டும் சேர்ந்தே இருக்கும்.

புகை பிடிப்பவர்களுக்கும், பலவீனமான நுரையீரல் உள்ளவர்களுக்கும், மார்புச்சளி லேசில் குறையாது.

ஊட்டச்சத்து குறைபாடு சுவாச கோளாறுகளை உண்டாக்கும். குறிப்பாக குழந்தைகளும் வயோதிகர்களும் சுலபமாக பாதிக்கப்படுவார்கள்.

நாள்பட்ட சைனஸ் தொற்று, ஒவ்வாமைகள், ப்ராங்கைடீஸை தூண்டி விடும்.

அமிலங்கள், அம்மோனியா, அமிலங்கள், குளோரின், சல்ஃபர் டை ஆக்சைட், ஹைட்ரஜன் சல்ஃபட், ப்ரோமைன் போன்ற ரசாயனங்கள் எரிச்சலை உண்டாக்கி, அழற்சி ப்ராங்கைடீஸை ஏற்படுத்தும்.

கடுங்குளிர், தவறான உணவுப் பழக்கம், குளிர்காலத்தில் அதிகமாக வெண்ணிற உணவுகள் (வெள்ளை ப்ரெட், மைதா), மாமிசம், சர்க்கரை முதலியவற்றை உண்பதும் பிராங்கைடீஸை உண்டாக்கலாம்.

தீவிரமான ப்ராங்கைடீஸ் பெரும்பாலும் வைரஸ்களால் உண்டாகின்றன. அதுவும் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ்களே ப்ராங்கைட்டீஸையும் உண்டாக்கலாம்.

ஆயுர்வேத காரணங்கள்

1.   வாததோஷம் கபத்தால் பாதிக்கப்படும் போது சுவாசம் கோளாறாகிறது. சுவாச மண்டல ஸ்ரோதாவான (உடல் நாளங்கள் ‘ஸ்ரோதா’ எனப்படும்) பிராணவாஹா ஸ்ரோதா, வளர்சிதை மாற்ற ஸ்ரோதவான அம்புவாக ஸ்ரோதா மற்றும் வயிற்றில் ஸ்ரோதாவான அன்னவாக ஸ்ரோதாவும் சீர்குலைகின்றன.

2.   கப சீர்கேட்டால் சுவாச மண்டலத்தின் உள்ளும் வெளியும் காற்று பயணிப்பது தடை பெறுகிறது.

3.   கிலேடக கபத்தின் இருப்பிடமான வயிற்றில் கபம் சேர்ந்து சுவாச மண்டலத்தில் பரவுகிறது. பரவி காற்றுப் (சுவாசம்) பாதையை அடைக்கிறது. கெட்டியான பாகு போன்ற கபம், மூச்சுக்கிளை குழல்களில் (Bronchi) படர்ந்து விடுகிறது.

4.   இதை விலக்குவது கடினம். கெட்டியான சளி மூச்சுக் குழல்களில் ஒட்டிக் கொண்டிருப்பதால், சுவாசிப்பது சிரமமாகிறது. நுரையீரல் காற்றுக்காக திணறுகிறது.

5.   இந்த நிலையில், ஜுரம், பசியின்மை, மூச்சுத்திணறல் ஏற்படும்.

அறிகுறிகள்

தொற்றினால் ஏற்படும் பிராங்கைடீஸ், சாதாரண ஜலதோஷத்தை போலவே, மூக்கில் ஒழுகுதல், தொண்டைப்புண், குளிர், களைப்பு, முதுகு, உடல் தசைவலிகளுடன் ஆரம்பமாகிறது. லேசான ஜுரம் இருக்கலாம். இருமல் ஆரம்பிக்கும் போது பிராங்கைடீஸ் வந்து விட்டதின் அறிகுறி.

இருமலும் வெள்ளையான சளி வந்தால் வைரஸ் ப்ராங்கைட்டீஸாக இருக்கலாம். சளி (கபம்) பச்சை (அ) மஞ்சள் நிறமாக இருந்தால் பாக்டீரியா தொற்று காரணமாகும்.

தீவிர அழற்சியில் ஜுரம் 101 (அ) 102 டிகிரி தி வரை போகும். ஆன்டிபயாடிக் கொடுத்தும் 3 லிருந்து 5 நாட்கள் நீடிக்கும்.

மற்ற அறிகுறிகள் மறைந்த பின் கடைசியாக நீங்குவது இருமல் தான். அதுவும் பல வாரங்கள் கழித்து மறையும்.

     இரைப்பு (Wheezing)

     மூச்சு விட சிரமம்.

     களைப்பு, ஆயாசம்.

     ஜுரம், மார்பில் (சளியினால்) அசௌகரியம்.

டாக்டரை அணுக வேண்டிய தருணம்

1. ஒரு மாதத்துக்கு மேல் அறிகுறிகள் (குறிப்பாக இரைப்பு, இருமல்) நீடித்தால்

2. இருமலுடன் ரத்தம் வந்தால்

3. படுத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால்

4. கால்கள் வீங்கினால்

ஆயுர்வேத சிகிச்சை முறை

ஒரு டம்ளர் பாலும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்து காய்ச்சி, தினமும் இரண்டு (அ) 3 வேளை குடித்து வரலாம்.

சுக்கு, கருமிளகு, திப்பிலி இவை மூன்றின் பொடி சம அளவில் கலந்து தினமும் 3 வேளை கொடுக்கலாம். தேனுடன் கொடுக்கலாம். இல்லை தேநீருடன் கலந்து கொடுக்கலாம்.

தேன் தினமும் 2 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளலாம்.

இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து தேனுடன் கலந்து குடிக்கலாம்.

துளசி, இஞ்சி, மிளகு இவற்றை கலந்து, கஷாயமாக காய்ச்சி, 25 மி.லி. தினமும் மூன்று வேளை குடிக்கவும்.

பிராங்கைடீஸை குணமாக்க மூலிகைகள்

1. ஆடாதொடை-கெட்டியான கபம் நிறைந்த பிராங்கைடீஸுக்கு ஆடாதொடை சிறந்தது. கபத்தை இளக்குகிறது. இதன் இலைச்சாற்றை தினமும் 2 தேக்கரண்டி மூன்று வேளை எடுத்துக் கொள்ளலாம். ஏழு ஆடாதொடை இலைகளை எடுத்து நீரில் காய்ச்சி வடிகட்டவும். இத்துடன் 25 கிராம் தேன் கலந்து குடித்தால் இருமல் குறையும். ஆடாதொடை பூக்களும் இருமலை தணிக்கும். பூக்கள் 60 கிராம் எடுத்து 180 கிராம் வெல்லத்துடன் கலந்து, இதில் தினமும் இரு வேளை 10 (அ) 12 கிராம் சாப்பிட்டு வரவும்.

2. துளசி-துளசியின் கிருமிகளை அழிக்கும் திறன் தெரிந்த விஷயம். புண்பட்ட தொண்டைக்கு இதமளிக்க, நீருடன் காய்ச்சிய துளசி இலை கஷயாத்தை குடித்து வரலாம்.

3. நிலதுத்தி-சுவாச மண்டலத்தை வலுப்படுத்தும் டானிக்.

4. ஆளி விதை (Linseed) (Flex seeds)-இந்த விதைகளை அரைத்து, மாவாக கிண்டி மார்பில் பற்றாக போட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். நீரில் (360 மி.லி.) ஒரு தேக்கரண்டி ஆளி விதைகளை பொடித்து, கலந்து நீர் பாதியாகும் வரை காய்ச்சவும். இந்த கஷாயத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் பிராங்கைடீஸ் குறையும். சிறுவர்களும் குடிக்கலாம். கண்டந்திப்பிலியும் கபதோஷத்தை தணிக்கும். ஆயுர்வேத சிகிச்சையில் ஒரு கண்டந்திப்பிலியை முதல் நாள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தினமும் கூட்டிக் கொண்டே போய், அடுத்த 7 நாட்கள் குறைத்துக் கொண்டே போக வேண்டும். இந்த முறையை ஆயுர்வேத மருத்துவரால் தான் சொல்ல முடியும்.

5. கண்டங்கத்திரி-கபத்தை இளக்குவதற்கு சிறந்த மூலிகை. ஃப்ளூ மற்றும் மார்ச்சளி சுவாசக் கோளாறுகளுக்கு கண்டங்கத்திரி பயன்படுத்தப் படுகிறது. தசமூலம் எனும் ஆயுர்வேத மருந்தில் கண்டங்கத்திரி ஒன்று. இது தனியாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

6. இஞ்சி-சிறந்த இயற்கை மருந்துகளில் ஒன்று. இரண்டு அங்குலம் இஞ்சித்துண்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக சீவிக் கொள்ளவும். இரண்டு பூண்டு சேர்த்து நீரில் காய்ச்சி கஷாயம் தயாரிக்கவும். கொதிக்கும் போதே எலுமிச்சம் பழச்சாறு (சில துளிகள்) சேர்த்துக் கொள்ளவும். வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் இருமல் மறையும். இஞ்சி சாற்றை சம அளவு தேன் கலந்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஜலதோஷம், இருமலுக்கும் பயனளிக்கும். இஞ்சியை நீர்ச்சுருக்கு, எரிச்சல், ரத்தக் கசிவு பிரச்சனைகள், இருக்கும் போது கொடுக்கக் கூடாது.

7. தாளிசபத்தரி-இருமல், ஜலதோஷத்திற்கு சிறந்த மூலிகை. தாளீசாதி சூரணம் இருமல் ஜலதோஷத்தை கண்டிக்க சிறந்த மருந்து.

8. ஏலக்காய்-கபத்தை குறைக்க வல்லது. ஐந்தாறு ஏலக்காய்களை நெருப்பில் போட்டு எழும்பும் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு நீங்கும்.

9. தூதுவளை-அனைத்து ஆயுர்வேத இருமல், சளி மருந்துகளில் சேர்க்கப்படும் மூலிகையாகும்.

பத்தியம்

தயிர், இனிப்புகள், ஐஸ்கிரீம் போன்ற கபத்தை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.

உங்கள் பிராங்கைடீஸ் மற்றவர்க்கு பரவாமல் இருக்க, இருமும் போதும், தும்மும் போதும் ‘டிஷ்யூ’ பேப்பரால் முகத்தையும், மூக்கையும் மூடிக்கொள்ளவும். பிறகு டிஷ்யூவை குப்பைத் தொட்டியில் போடவும்.

கைகளை அடிக்கடி ஆன்டி செப்டிக் சோப்பால் கழுவவும்.

அழுக்குக் கைகளுடன் மூக்கு, கண்கள், வாய் இவற்றை தொடாதீர்கள்.

பிராங்கைல் குழாய்கள் (Bronchial Tubes)

வலது பிராங்கைல் குழாய் இடது பிராங்கையல் குழாயை விட அகலமாகவும் சிறிது குட்டையாகவும் இருக்கும். இதன் நீளம் சுமார் 2.5 செ.மீ. வலது பிராங்கையல் குழாய் வலது நுரையீரலில் நுழைந்தவுடன் மூன்று கிளைகளாக பிரிந்து பின்பு எண்ணற்ற கிளைகளாக பிரியும்.

இடது பிராங்கைல் குழாய் வலது பிராங்கைல் குழாயை விட மெல்லியது. சுமார் 5 செ.மீ. நீளம் உடையது. இதுவும் இடது நுரையீரலில் நுழைந்ததும் இரு கிளைகளாக பிரிந்து பிறகு பல நுண்ணிய கிளைகளாக பிரிந்து நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை அடைகிறது.


Spread the love