தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான உணவு டிப்ஸ்

Spread the love

இன்றைய காலகட்டத்தில் நாம் சிறுவயது முதலே ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. சிறு பிள்ளைகளுக்கு நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை நாம் அதிகமாக பார்க்க முடிகின்றது. பண்டைய காலத்தில் சிறுவர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்ததாக நாம் அதிகம் கேள்விப்படவில்லை. தற்போது இவை அதிகமாகி வருவதற்கு காரணம் ஆரோக்கியமான உணவுமுறை இல்லாமையும், சுற்றுப்புற சூழ்நிலையுமே ஆகும்.

இன்றைய குழந்தைகள் சிறுவயதிலேயே அதிக அளவு படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவர்களுக்கும் புத்தகப் பையே அதிக சுமையாகி உள்ளது. விளையாடும் வயதில் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றனர். சிறுவயதிலேயே நல்ல பள்ளியில் சேர்வதற்கு பல்வேறு தேர்வுகளை எழுத வேண்டிய நிலையில் அவர்கள் நேரத்திற்கு சாப்பிடுவதுமில்லை. தூங்குவதும் இல்லை. விளையாட முடிவதுமில்லை. இதனால் அவர்கள் பெரும்பாலும் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் ஆரோக்கியம் மிக அவசியம். அந்த பருவத்தில்தான் அவர்களுடைய எதிர்காலத்திற்கு தயாராகிறார்கள். அவர்களுடைய உடல் நலத்தைக் காக்கும் பொறுப்பில் பெரும்பங்கு பெற்றோர்களுடையது.அவர்களுக்காக குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பயனுள்ள சில டிபஸ்.

சமச்சீரான உணவு மூளையை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. அதிலும் படிக்கின்ற பிள்ளைகளுக்கு அதிக சக்தி தேவைப்படுகின்றது. சரிவிகித உணவு அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து அவர்களுக்கு நல்ல தூக்கத்தையும், நிம்மதியையும் தருகிறது. காலை உணவை தவிர்க்கும் குழந்தைகள் பெரும்பாலும் வகுப்பில் பாடத்தை கவனிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. ஏனென்றால் மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைப்பதில்லை.

மூன்று வேளை உணவு மிக அவசியம். இடையில் சிற்றுண்டிகளாக பழ சாலட், முளைகட்டிய பயறு வகைகள், காய்கறி சாலட் போன்றவற்றை சாப்பிட ஊக்குவிக்கலாம்.கேரட், பச்சை நிற கீரை வகைகள் போன்ற வைட்டமின் ஏ, நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வதால் அவர்கள் கண்களுக்கு நல்லது.

பி.காம்ப்ளக்ஸ் அதிகமுள்ள முளைகட்டிய தானியங்கள், பயறு வகைகள், உலர் பழங்கள் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிட ஊக்குவிப்பதால் மன அழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு ஆறிலிருந்து எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள்.

பால், தயிர் போன்றவற்றில் உள்ள கால்சியத்தினால் நரம்புகள் ஒன்றாக வேலை செய்ய உதவுகிறது. மேலும் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தால் ஏற்படும் அல்சர், செரிமானக் கோளாறு போன்றவற்றை தயிர் சரி செய்கிறது.

கார்போஹைடிரேட் நிறைந்துள்ள அரிசி, சப்பாத்தி, பிரட் சாப்பிடும்பொழுது தேவையான சக்தி கிடைக்கிறது. புரதச் சத்து நிறைந்த மாமிச உணவுகள், பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக மாமிச உணவில் மீன் பிள்ளைகளின் அறிவை வளர்க்க உதவும்.

நோய் இல்லாமல் வாழ்வதற்கு வைட்டமின் சி.யும் நார்ச்சத்தும் மிக அவசியம். அவை இரண்டும் பழங்களில் கிடைக்கின்றது.

பழங்கள் தினமும் உண்ணக் கொடுப்பதால் செரிமானமின்மைக் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம். பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. பரீட்சை நேரங்களில் எந்த நோயும் வராமல் பாதுகாக்கின்றது. தேர்வு நேரத்தில் மட்டுமில்லாமல், எல்லா நேரங்களிலும் குழந்தைகள் பழங்களை உண்ண நாம் அறிவுறுத்த வேண்டும். தேவையான தாது உப்புகள் கீரை காய்கறிகளிலும் பழங்களிலும் மட்டுமே இருக்கின்றது. இதனால் பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

காபி, டீ மற்றும் கோலா பானங்களால் குழந்தைகளின் மூளையின் செயல்திறன் குறைகின்றது. அதனால் இந்த பானங்களை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தாமல் இருப்பது நல்லது. எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, மாமிச வகைகளை குறைப்பது நல்லது. ஜங்க் புட்ஸ் எனப்படும் பாஸ்ட்புட் உணவு வகைகளும், அதிக கொழுப்பும் அதிக கலோரி உள்ள உணவினையும் எடுத்துக் கொள்வதால் எடை கூடுமே தவிர வேறு எந்த முக்கிய சத்துக்களும் அதில் இருப்பதில்லை.

தேர்வு நேரத்தில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்:

அதிகாலை & பால் 200 மிலி.

காலை உணவு & இட்லி / தோசை / சப்பாத்தி / உப்புமா / பொங்கல் & சட்னி, சாம்பார்.

இடைப்பட்ட நேரம் & பால் / மோர் / பழம் / சுண்டல் / வேர்க்கடலை & 50 கிராம் அளவு.

மதியம் & சாதம் / சப்பாத்தி / சாம்பார் / கூட்டு / குழம்பு / காய்கறிகள் / கீரைகள் / தயிர் / முட்டை / மீன் / கோழி

மாலை & பால் / சுண்டல் / பழம் / அவல்

இரவு & மதிய உணவைப் போல

படுக்கும் முன் & பால் / பழம்


Spread the love