இத்தாவரம் கொடி வகையைச் சார்ந்ததாகும். இது நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும். பிற தாவரங்களுக்கிடையே ஊடுருவி வளரும் தன்மையுடையது. நீலநிற மலர்களைத் தாங்கிய ஓடு தண்டு வகையைச் சார்ந்த மூலிகையாகும். இது வழவழப்பான சதைப்பற்று கொண்ட முட்டை வடிவ இலையுடையது. இனிப்பு மற்றும் துவர்ப்பு தன்மை உடையது.
இது மூளையின் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவுவதால் ‘பிரமி’ என பெயர் பெற்றது. நீர்ப்பிரமி இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.
இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சில மனநல கோளாறுகளை நீக்கவும் இது பெரிதும் உதவுகிறது. நரம்பு தளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் நீர்ப்பிரமியிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.
தாவர விவரம்
மூலிகையின் பெயர் | நீர்ப்பிரமி |
தாவரப்பெயர் | பகோபா மொனேரி, பகோசைட்டுகள், பிரமைன். |
தாவரக்குடும்பம் | ஸ்குரோபுலரேசியே |
வேறுபெயர்கள் | பிரமி, விமலம், பிரமிய வழுக்கை, பிரமியப் பூடு, வாக்குபவம் |
பயன் தரும் பாகங்கள் | வேர், தண்டு, இலைகள் |
மருத்துவ குணங்கள்
நீர்ப்பிரமி சாறுடன் 8 கிராம்
கோஷத்தை பொடித்து சேர்த்து, தேன் கலந்து உண்டு வர புளித்த ஏப்பம் நீங்கும்.
நீர்ப்பிரமி இலைகளை சாறு பிழிந்து அதனுடன் நெய் சேர்த்து காய்ச்சி குடித்து வருவது உடலிற்கு நலம் பயக்கும்.
நீர்ப்பிரமி இலையுடன் மணத்தக்காளி கீரையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் நீங்கும்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளில் நீர்ப்பிரமி இலையின் சாற்றை சேர்த்துக் கொள்ள மருந்தின் தரம் அதிகரிக்கும்.
செரிமானத்தை துரிதப்படுத்த இஞ்சி சாற்றில் நீர்ப்பிரமி இலை சாற்றைக் கலந்து பருகலாம்.
நெஞ்சில் கோழைக்கட்டி சுவாசம் கடுமையாகும் சமயத்தில் நீர்ப்பிரமி வேரை அரைத்து நெஞ்சில் பூசலாம்.
மூட்டுவலி நீங்க நீர்ப்பிரமி இலைகளை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் ஒத்தடமிட்டோ அல்லது கட்டி வர வீக்கங்கள் குறையும்.
மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நீர்ப்பிரமி, கொத்தமல்லி விதைகள், செம்பருத்தி இதழ்கள், கரிசாலை ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து குடிநீராக காய்ச்சி குடிக்க கொடுக்கலாம்.
நரம்பு தளர்வுகள் நீங்க
மனித செயல்பாட்டிற்கு முக்கிய காரணமான நரம்புகள் பலமாக இருக்கும் போதுதான் உடலும் உற்சாகமாக இருக்கும். இந்த மெல்லிய நரம்புகள் மன அழுத்தம், வெயிலில் வேலை செய்வது மற்றும் கோபம் காரணமாக ஆங்காங்கே நீர் கோர்த்து காணப்படும். இதனை சரிசெய்ய நீர்ப்பிரமி இலைகளை உலர்த்தி கசாயமாக காய்த்து குடிக்கலாம்.
குரல் வளம் மேம்பட
நீர்ப்பிரமி இலைகளை வெண்ணெய் ஊற்றி வதக்கி உண்டு வர தொண்டை கம்மல் நீங்கி குரல் வளம் மேம்படும்.
தெளிவாக பேசாத குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.
மலச்சிக்கல் நீங்க
சிலர் எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிட்டாலும் மலம் எளிதில் வெளியேறுவதில்லை. இத்தகைய பிரச்சனை உள்ளோர் நீர்ப்பிரமி இலைகளை உலர்த்தி கஷாயம் செய்து அருந்தி வர மலச்சிக்கல் நீங்கும்.
மேலும் இதனை கீரையாக சமைத்து உண்டு வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி, உடல் மற்றும் மனம் உற்சாகமடையும்.
உடல் குளிர்ச்சியடைய
நீர்ப்பிரமி இலையின் பொடி, அமுக்ராப் பொடி இவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சியடையும்.
மேலும் வெப்ப காலங்களில் இதன் இலையை சாறு பிழிந்து பசும்பாலில் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சியடையும்.
சிறுநீர் பெருக
மனிதனின் உடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் 3 லிட்டர் என்ற அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். அவற்றில் தினமும் ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை சிறுநீராக வெளியேற வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறுகிறது.
சிறுநீர் சரிவர வெளியேறாத போது பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. சிலருக்கு சிறுநீர் வெளியேறாமல் நீர் எரிச்சல் உண்டாகும். இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுவோர் நீர்ப்பிரமி இலைகளை கஷாயம் செய்து அருந்தி வரலாம். சிறுநீர் நன்கு பிரியும்.
பிரமி கஷாயம்
தேவையான பொருட்கள்
பிரமி இலை – ஒரு கைப்பிடி
தண்ணீர் – ஒரு டம்ளர்
செய்முறை
நீர்ப்பிரமி இலையை வெயிலில் நன்கு உலர்த்தவும். பின் தேவையான அளவு இலையை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி அரை தம்ளர் அளவிற்கு வற்றும் வரை சிம்மில் வைத்து நன்கு காய்ச்சவும். நீர்ப்பிரமி கஷாயம் தயார்.
நினைவாற்றல் அதிகரிக்க
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்குமே ஞாபக மறதி என்பது ஒரு தொற்றாகவே இருந்து வருகிறது. நினைவாற்றல் பெருக நீர்ப்பிரமி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை உண்டு வரலாம்.
நீர்ப்பிரமி இலை சாற்றிலிருந்து எடுக்கப்படும் பிரமி நெய் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. பிரமி நெய்யை சிறிது சாதத்துடன் பிசைந்து உண்ணலாம். பிரமி நெய் சித்த மருத்துவத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது.
இது மூளையில் அமைலாய்ட் திட்டுக்கள் படிவதை தடுத்து, அல்சைமர் நோய் ஏற்படாதவாறு தடுக்கிறது.
பிரமி நெய்
தேவையான பொருட்கள்
பிரமி இலைச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
வசம்பு – சிறு துண்டு
பசு நெய் – 50 ml
செய்முறை
பிரமி இலையை வெயிலில் உலர்த்தி பொடி செய்து நீரில் கரைத்து சாறு எடுக்கவும் அல்லது கடையில் பிரமி இலை பொடி வாங்கி நீரில் கரைத்து வைக்கவும்.
பின் வசம்பை நெருப்பில் நன்கு சூடுபடுத்தி கருப்பு நிறமாக மாறியதும் ஆற வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் பிரமி இலைச்சாறு மற்றும் பசு நெய் சேர்க்கவும். இவை கொதித்ததும் இஞ்சி சாறு சேர்க்கவும். பின் தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு வற்றியதும் அதனை ஆறவைத்து, நெருப்பில் வாட்டிய வசம்பு சேர்த்து கலக்கவும். ஆரோக்கியமான பிரமி நெய் தயார்.
“பூவினுள் மறைந்திருக்கும் தேன்துளிகள் மட்டுமின்றி நீர்நிலையில் படர்ந்திருக்கும் நீர்ப்பிரமியும் இயற்கையின் அதிசயமே!“