பொதுவாக நாற்பத்தைந்தை (45) வயதைத் தொடும்பொழுது மனித எலும்புகள் தனது வலுவை இழக்கத் தொடங்கிவிடுகின்றன. இதற்கு மருத்துவ உலகம் எலும்புத் தேய்மானம் என்று பொதுவாக விளக்கம் கொடுக்கிறார்கள். இது பொதுவாக இருந்தாலும் பெண்களை மிகவும் அவதிக்குள்ளாக்குகிறது. பெண்களில் நாற்பது (40) வயது முதல் இந்த நோய் தாக்கத்தொடங்கி, வயது கூடக்கூட நோயின் தீவிரம் அதிகரித்து, தீவிரமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
எலும்புகளுக்குத் தேவையான முக்கியமான தாதுப்பு கால்சியமாகும். இது நாம் உண்ணும் உணவின் மூலமாக எலும்புகளுக்குச் சேர்கிறது. பொதுவாக, முதுமை நெருங்கும் போது கால்சியம் குறையும் போது எலும்புகளுக்குள் தேய்மானம் ஏற்படுகிறது.
அதாவது முக்கியமாக பெண்களின் உதிரப்போக்கு நின்று போகும் காலக்கட்டத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடு மற்றும் மாறுபாடுகளின் காரணமாக கால்சியத்தை சேமிக்கும் திறன் குறைவதால் இக்குறைபாடு ஏற்படுகிறது.
பெண்களின் மாதவிடய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரொஜன் உடலில் குறைந்துவிடுவதால் இது பெண்களை மிகவும் பாதிக்கிறது. முக்கியமாக பெண்களின்” மெனோபாஸ் “ எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகள் கால்சியத்தை சேகரிக்கும் தன்மையை இழக்கிறது.
அதிலும் குறிப்பாக மேனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் “ ஆஸ்டியோ பொரோஸிஸ்” ஏற்படக் காரணமாகிறது.
இதன் பக்கவிளைவுகள்
எலும்பு முறிவு, மூட்டுவலி, மூட்டு வாதம், கழுத்து மற்றும் முதுகெலும்புத் தேய்மானம், முதுகுவலி, உடல்சோர்வு, அசதி, முதுகெலும்பு வளைந்து கூண் விழுதல், நடையில் தளர்வு போன்ற பக்கவிளைவுகளால் பெண்கள் தமது நாற்பது வயது முதல் மிகுந்த சிரமத்திற்கு ஆட்படுகிறார்கள். நோய்களை குணப் படுத்துவதை விட அதை தடுப்பது எளிதானது என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.
எப்படித் தடுப்பது?
எலும்புகளின் தன்மையை அதன் உறுதியைப் பாதுகாக்க தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமான தடுப்பு முறையாகும்.
வலி வந்துவிடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள், இது மிகவும் தவறானது. இது நோயின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதாவது, குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு நடைபயிற்சி செய்வது மிக முக்கியம்.
நடைப்பயிற்சி செய்வதை முறையாக செய்யவேண்டும், சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் வலி,வாதம் இவற்றைத் தவிர்க்கலாம்.மிகவும் வயதானவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கொரு முறை படுக்கையிலிருந்து எழுந்து நிற்க வேண்டும்.
குறைந்தது 15 நிமிடங்களாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம். இதன்மூலம் எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் “டி” உடலுக்கு கிடைக்கும்.
கால்சியம் அதிகமுள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியம். இது, எலும்புகளை வலுப்படுத்தும்.
பச்சைக்காய்களில் கால்சியம் அதிகமாக உள்ளதால் அதை விரும்பி உண்ணுங்கள். சோயாவில் அதிகம் கால்சியம் உள்ளதால் அதை உணவில் சேர்த்துக்கொள்ளவும். அதிகமாக காஃபி பருகுவதை தவிர்த்தல் நல்லது. இது உடலிலுள்ள கால்சியத்தை அதிகமாக வெளியேற்றும்.
மீன் உணவுகளை தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவதால் உடலிலுள்ள கால்சியத்தின் அளவு குறைய வாய்ப்புகள் அதிகம்.
இரவில் பாலை அதிகம் சாப்பிடுவதை விட காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டால் தூக்கம் தடைபடுவதை தவிர்க்கலாம்.
கால்சியம் மாத்திரை வடிவில் கிடைப்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம்.
முதுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. மேற்குறிப்பிட்ட ஆலொசனைகளை செயல்படுத்துவதன் மூலம் எலும்புத் தேய்மானத்தை தவிர்க்கலாம்.
ராஜேஸ்வரி ஸ்ரீதர்.
மேலும் தெரிந்து கொள்ள…