பனை மரத்தைப் போலத்தான் நண்பன் அமைய வேண்டும் என்பார்கள். தானாக விளைந்து, தன்னையே மற்றவர்களுக்கு பயனாகத் தரக் கூடியது பனை மரம். அதைப் போல எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், சுயநலமில்லாமல் இருக்கும் நண்பன் அமைவது மிகவும் அரிதாகும். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் மரம் பனை மரம்.
பனை மரம் என்று அழைத்தாலும் இது மர வகையைச் சார்ந்தது அல்ல. பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. கூந்தல் பனை, கரும்பனை என இரண்டு வகை உண்டு. இதில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும்.
நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் என பனைமரத்தின் அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியவை. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
கோடைகாலத்தில் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தணிக்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்துகிறது. உடல் சோர்வை போக்குகிறது. வியர்குரு, அரிப்பு போன்றவற்றை சரிசெய்கிறது. நுங்கை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்கும் சர்பத் தயாரித்து சாப்பிடலாம். இளம் நுங்கை சாப்பிட்டுவர வயிற்று புண் சரியாகும்.
அற்புதமான மருந்தாக விளங்கும் நுங்கு, உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. தோல் மீது ஏற்படும் கொப்புளங்களை மறைய செய்கிறது. மோருடன் இளம் நுங்கு, உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படும் வெள்ளைப்போக்கு சரியாகும்.
பனங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம், தாகம் போன்றவை நீங்கும். பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும். பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. ஆனால், பித்தம் ஏற்படுத்தும். பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் போக்குகிறது.