சிலரின் உடல் எப்பொழுதும் “சூடாக”வே இருக்கும். இவர்களை தொட்டால் சூட்டை உணரலாம். அவர்களின் உடல் சூட்டை தர்மாமீட்டரில் பார்த்தால் ‘நார்மலாக’ இருக்கும். ஆனால் தொட்டால் சுரம் அடிப்பதுபோல் இருக்கும்.
இந்த உடல்சூடு, புதுமண தம்பதிகளுக்கு ஒருவகை பிரச்சனைதான்.
நமது உடல், வெளிப்புற தட்ப, வெப்பத்திற்கு ஏற்ப, உடல் உஷ்ண நிலையை ஓரளவு கூட்டி, குறைக்கும். மனிதன் உஷ்ண ரத்தப் பிராணி. குளிர் ரத்த பிராணிகளான பாம்பு போன்றவற்றுக்கு, மனிதன் உடலிலிருப்பது போன்ற தெர்மோ – ஸ்டாட் (Thermostat) அமைப்பு இல்லை. இவைகளுக்கு தங்கள் உடல் சூட்டை சரியான அளவில் ஏற்ற, குறைக்க வெளி உதவி தேவை. எனவே தான் வெயிற் காலத்தில் தன் உடல் வெப்பத்தை குறைக்க, பாம்பு நிழலை தேடி, வீட்டில் நுழைந்து, தண்ணீர் இருக்கும் மண்பாண்டத்தை சுற்றி கொண்டிருக்கும். இல்லை குளிர்ச்சியான குளிப்பறையை நாடும்.
நம் உடல் வெப்பம் குறிப்பாக, வளர்சிதை மாற்றத்தாலும், உடல் உழைப்பினாலும் உண்டாகிறது. சூட்டு உற்பத்தியையும் சூடு இழப்பையும் நம் உடல் சீராக்குகிறது. வெளிச்சூடு உடலை தாக்கி, உடல் உஷ்ணமானால், வியர்வை சுரப்பிகள் தூண்டப்பட்டு வியர்வை அதிகமாக வெளியேறி, சூட்டை குறைக்கும். வெளிப்புற சீதோஷ்ணத்தில், ஈரப்பசை அதிகமானால், வியர்வை ஆவியாக வெளியேறுவது நிதானமடையும். இதனால் புழுக்கம் ஏற்பட்டு தவிக்கிறோம். அதுவும் வெயில் காலத்தில், கடற்கரை ஓர நகரங்களில் இதன் பாதிப்பு தெரியும். வியர்வை தோலின் மேல் வந்தவுடன் ஆவியாகி, காயாவிட்டால், பல சரும வியாதிகள் தோன்றலாம். முடிப்பாதிப்பு ஏற்படும். இளமையில் தலை நரைப்பதின் முக்கிய காரணம் உடற்காங்கை.
தைராயிடு சுரப்பியின் அதிக செயல்பாடு, ஜுரம், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, உடலுழைப்பு, கொக்கேன் (Cocaine) போன்ற மருந்துகள் இவற்றாலும் உடல்சூடு அதிகமாகும். இவை தவிர மன உணர்ச்சிகள் – கோபம், தாபம், இவற்றாலும் உடற்சூடு – காங்கை அதிகமாகும். இந் காங்கையை உள்ளங்கை, உள்ளங்கால், விலா, தலை, நெற்றி இவற்றை தொட்டுப் பார்த்தால் சூடு தெரியும்.
இந் காங்கை தோலின் அருகே அதிகமாக இருப்பதால், முடிக்கால்கள் அழற்ச்சி அடைந்து விடுகின்றன. பொடுகு, அரிப்பு இவை உண்டாகின்றன. ரத்த ஓட்டம் குறைந்து விடுவதால் தோல் பாதிக்கப்பட்டு, கேசமும் வெறுத்துப் போகிறது. இளநரை ஏற்படுகிறது.
உடல் காங்கையை தனித்தாலே, கேச பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆயுர்வேதம், கேச பாதிப்பு மட்டுமல்ல, வேறு பல நோய்களுக்கும், உடற்காங்கைதான் காரணம் என்கிறது. மலச்சிக்கலும் உடல்காங்கை அதிகமாக காரணம். குடலிலேயே மலம் தங்கிவிட்டால் சூடும், அழற்ச்சியும் அதிகமாகும். மலச்சிக்கலை போக்கும் வழிகளை கடைபிடிக்கவும்.
எண்ணெய்க் குளி உடல் உஷ்ணத்தை குறைக்கும். நெல்லிக்காய் தைலம், சந்தன தைலம், பொன்னாங்கண்ணி தைலம், மஹா பிருங்காமலா தைலம் போன்ற மூலிகை தைலங்கள் உடல்சூட்டை குறைத்து, கேச பராமரிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவும்.
வெந்தயம் ஒரு தேக்கரண்டி எடுத்து, இரவில், தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவும். இதை 2, 3 நாட்கள் செய்யவும். தினமும் 2-3 நெல்லிக்காய்களை (3 நாட்களுக்கு) உண்டு வரவும். இளநீர், வெள்ளரிக்காய் ஜுஸ், கேரட் ஜுஸ் இவைகளும் உடலுக்கு குளிர்ச்சி தரும். கேச வளர்ச்சிக்கும், இளநரை, முடிஉதிர்தல் இவற்றை தவிர்க்க, முதலில் உடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டும்.
உடற்சூட்டினால் உதிரும் முடிப் பிரச்சனைக்கு முடி வேர் சிகிச்சை தேவை. கரிய பவளம், கடுக்காய் இந்த சிகிச்சைக்கு பயன்படும். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
ஆயுர்வேதம்.காம்