மூலநோய் என்பது கொடிய நோயாகும். நோயாளியின் இயல்பினையே மாற்றி ‘எரிச்சலை’ உண்டாக்கி, மற்றவர்களின் வயிற்றெரிச்சலை உண்டுபண்ணக் கூடியது. மூலவாயு, மூலாக்கினி, மூலக்கிராணி, இரத்தமூலம், உள்மூலம், சீழ்மூலம், புறமூலம், நெளிமூலம், வறள் மூலம் என ஒன்பது. (இதை நவமூலம் என்று வடசொல்லில் கூறுவர்) இவ்வாறாக பகுத்துள்ளனர் நம்நாட்டு மருத்துவர்கள். நோய்க் காரணமும், அறிகுறிகளும் உட்கார்ந்தே இருக்கும் காரணத்தால், நாட்பட்ட மலச்சிக்கலாலும், மூலச்சூடு அதிகமாகி, ஆசன வளையங்களில் கிழங்கு முளைகளைப் போலும், வேர்களைப் போலும், மாமிச மூளைகளைப் பெற்று உண்டாகும். இது சிலருக்கு பரம்பரையாக வருவதுமுண்டு.
ஈரல் திசுக்கள் கருகி வரும் நோய்க்குப் பின் இந்த நோய் வருவதுண்டு. ஈரல் கருதுவதற்கு முதற் காரணம் சிகரெட் புகை. தொடக்கத்தில் பெருங்குடலின் நுனியில் சவ்வுக்கு அடியில் சிறு வீக்கங்கள் உண்டாகும். அப்போது மலங் கழிக்கும்போது, இரத்தம் போகும். இச்சிறு வீக்கங்கள் பருக்கும்போதும் மலங்கழிக்கும் சமயத்தில் அவை வெளியே பிதுங்கும். மலங்கழிப்பது முடிந்ததும் அவை தாமதமாகவே உள்ளே செல்லும். நாளாக, நாளாக சில நேரங்களில் அவை தாமாகவே உள்ளே செல்லாது. தள்ளிவிட வேண்டியதாக இருக்கும் இப்படியே விட்டுவிட்டால் நோய்முற்றி நிற்கும் போதும் நடக்கும் போதும் வெளியே வந்து துன்பம் தரக்கூடும். மேற்கூறியபடி ஆசன வளையங்களில் காணும் முளையானது ரத்தமூல முளைகளையும், ஆலந்தளிர் முகிழையும் ஒத்திருப்பதும் அன்றி, மலத்தினால் அடிபடுவதால் இரத்தமானது கசியும். கசிந்து ஒழுகும் இரத்தம் சூட்டைத் தந்து ஒழுகும். அழற்சியும், புண்ணும் உண்டாகி, மிகுந்த வலியைத் தந்து தொல்லைப்படுத்தும்.