ஆயுர்வேதம், யுனானி மருந்துவங்களில் பயன்படும் கருஞ்சீரகம் ஒரு தொன்மையான உணவுப் பொருள். பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய வைத்தியத்தின் தந்தையான ஹிப்போகிராடிஸ் (Hippocrates) மற்றும் டியோஸ்கோரைடீஸ் (Dioscorides) பிளினி (Pliny) இவர்களாலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தாவரவியல்
- தாவிரவியல் பெயர் – Nigella Sativa Linn. குடும்பம் – Ranwnculaceae
- சம்ஸ்கிருத பெயர்கள் – உபகுஞ்சிகா, கிருஷ்ண ஜீரகா, குஞ்சிகா, உபகுஞ்சீரகா,
- ஆங்கிலம் – Black, Cumin, Nutmeg flower, Small Fennel
- இந்தி – காலாஜீரா, கலோன்ஜி
தாவிர விவரங்கள்
அழகான செடி, 30லிருந்து 60செ.மீ உயரம் வளரும். இலைகள்: ஈட்டி போல் குவிந்த அமைப்பு, 2.5லிருந்து 5செ.மீ. நீளமுடையவை. பூக்கள்: 2 லிருந்து 2.5 செ.மீ குறுக்களவு, ஒரு தனி நீண்ட காம்பில் (மஞ்சள் தண்டு), வெளி இதழ் கோள வடிவு, தேன்(மது) உடையவை. சூலுறைகள் 5 (அ) 7, உப்பியவை, விதைகள்: மூன்று மூலை வடிவம், கருநிறம்
கருஞ்சீரகச்செடி காட்டுச்செடியாகவும் வளரும் விவசாயத்தில் களையாகவும் காணப்படும்.
பயன்படும் பாகம்: விதைகள்
பயிராகும் விவரங்கள்: இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பயிராகும். உலர்ந்த மண் கருஞ்சீரகம் பயிரிட ஏற்றது. விதைகள் 24 மணி நேரம் நீரில் நனைக்கப்படும். 10 (அ) 15 நாட்கள் விதைகள் முளைத்துவிடும். முளைத்து, உப்பி, உடைத்து, முளை வேர் பூமியில் நுழையும். 2 (அ) 3 செ.மீ வளர்ந்தவுடன் இளைகள் தோன்றும்.
விதைகளின் தன்மை:- கைப்பு சுவை, வாசனையுடையது.
செயல்பாடு:- வாய்வகற்றி (Carminative), சிறுநீர் பெருக்கி, பெண்களில் மாதவிடாய் உண்டாக்கும், தாய்ப்பால் சுரக்க தூண்டும், க்ருமி, பூச்சி, நாசினி, பசியை தூண்டும்.
பயன்கள்
· கருஞ்சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து தடவ, சர்மநோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் – இவற்றுக்கும் நல்ல மருந்து
· இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பாக்டீரியாக்களை அழிக்கும். Micrococcus Pyrogenes, Escherichia Coli இவற்றை நீக்கும்.
· லேசான ஜீரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம்.
· இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
· ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர், இதன் விதைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து, பாம்பு, தேள்கடிகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
· யுனானி மருத்துவத்தில், நுரையீரல் கோளாறுகள், இருமல், காமாலை, கண்நோய்கள், ஜீரம், மகளிரை பூப்படைய செய்வதற்கு முதலியவற்றுக்கு, கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
· சித்தவைத்திய பாடல் ஒன்று சொல்வது –
“கருஞ்சீரகத்தான் கரப்பனோடு புண்ணும்
வருஞ்சிராய் பீநசமு மாற்றும் – அருந்தினால்
காய்ச்சல் தலைவலியுங் கண் வலியும் போமுலகில்
வாய்ச்ச மருந்தெனவே வை”
· குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும்.
· இதன் பொடியை வைத்தியரின் அறுவுரைப்படி 3 (அ) 7 நாட்கள் உபயோகிக்க வெறிநாய் கடியின் நஞ்சு தீரும்.
· உணவுக்கு பயனாகும் எண்ணைகளின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணை ஒரு நிலை நிறுத்தும் பொருளாக Stabilizing agent) பயனாகிறது.
· பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.
மார்க்கெட்டில் கிடைக்கும் கருஞ்சீரகத்தில், பிரம்ம தண்டு விதைகள் (Argemone mexicana) கலப்படம் செய்யப்படுகிறது. எனவே நம்பகமான கடைகளில் வாங்க வேண்டும்.