பிஸ்கட் தயாரிப்பு

Spread the love

பிஸ்கட் என்ற வார்த்தை “இரு தடவை சமைத்தது” என்ற பொருளுள்ள ஃப்ரெஞ்சு வார்த்தையான ‘பிஸ்கட்’ என்பதிலிருந்து வந்தது. உண்மையிலேயே பிஸ்கட்டுகள் பழங்காலத்தில் இருமுறை சமைக்கப்பட்டன. அந்த காலங்களில் நீண்ட கடல் பயணத்தின் போது, மாலுமிகளின் தினசரி சிற்றூண்டிக்காக சிறிய, கெட்டியான கேக்குகள் எடுத்துச் செல்லப்பட்டன. இவை கெடாமலிருப்பதற்காக கப்பலில் ஏற்று முன் சமைக்கப்பட்டன. இவற்றை உண்பதற்கு முன், கெட்டித்தன்மையை மிருதுவாக்க, மறுபடியும் சமைக்கப்பட்டன. இப்பொழுதெல்லாம் பிஸ்கட்டுகள் ஒரு முறை தான் சமைக்கப்படுகின்றன. அவை தயாரிக்க அவன் (சூளை போன்ற) அடுப்பு தேவை. பிஸ்கட் தயாரிக்க சில டிப்ஸ்

“அவன்” அடுப்பில் இரு தட்டுகள் இருந்தால் அவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். பாதி வெந்தவுடன் தட்டுகளின் வரிசையை மாற்றவும். இதனால் தட்டிலிலுள்ள பிஸ்கட்டுகள் சீராக வேகும்.

கம்பியால் ஆன தட்டுக்களில் பிஸ்கட்டுகளை ஆறவிடவும். அவன் தட்டுக்களிலிருந்து எடுத்தவுடன் கம்பித்தட்டில் போடவும். சிரப்பு, தேன் கலந்த பிஸ்கட்டுகளை மாத்திரம் சிறிது நேரம் அவனிலேயே இருக்கட்டும்.

சாக்லேட், ஆரஞ்சு பிஸ்கட்டுகள்

தேவை

            வெண்ணெய் –                         85 கி

            கேஸ்டர் சர்க்கரை –    6 டே.ஸ்பூன்

            முட்டை –                     3

            பால் –                          1 டே.ஸ்பூன்

            மாவு (மைதா) –                        225 கி

            கோகோ பவுடர் –                    2 டே.ஸ்பூன்

            ஐசிங் சர்க்கரை –                     175 கி

            ஆரஞ்சு ஜுஸ் –                       3 டே.ஸ்பூன்

            உருக்கிய கறுப்பு

            சாக்லேட் –                   சிறிதளவு

செய்முறை

இரண்டு பேகிங் தட்டை எடுத்து அவற்றை பேகிங் பேப்பரால் லைனிங் செய்யவும்.

வெண்ணெய்யையும், சர்க்கரையையும் கலந்து நுரை வரும் வரை அடிக்கவும். முட்டையையும், பாலையும் கலந்து நன்கு அடிக்கவும். சலித்த மாவையும், கோகோ பவுடரையும் கலந்து மேலும் அடிக்கவும். கைகளால் பிசைந்து மிருதுவாக்கவும்.

பிசைந்த மாவை 1/2 இன்ச் தடிமனாக ரொட்டி போல் உருட்டிக் கொள்ளவும்.

இரண்டு அங்குல வட்டங்களாக ஒரு கட்டரின் உதவியால் வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய வட்டங்களை பேகிங் தட்டுகளில் வைத்து, முன்பே சூடுபத்திய அவனில் வைத்து 350 டிகிரி எஃப் சூட்டில் 12 நிமிடங்கள் அல்லது பிஸ்கட்டுகள் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்.

பேக்கிங் தட்டுகளிலேயே பிஸ்கட்டுகளை சில நிமிடங்கள் ஆறவிடவும். பிறகு ஒரு கம்பித் தட்டில் பிஸ்கட்டுகளை மாற்றி முழுமையாக ஆறவிடவும்.

ஐசிங் செய்யும் முறை

ஒரு கிண்ணத்தில் ஐசிங் சர்க்கரையை போட்டு ஆரஞ்சு ஜுஸை ஊற்றிக் கலக்கவும். ஒவ்வொரு டீஸ்பூனாக எடுத்து ஒவ்வொரு பிஸ்கட்டுகளின் மேல் வைத்து கெட்டியாகும் வரை விடவும். மேலே உருக்கிய சாக்லேட்டை கம்பிப் போல் இழுத்து அலங்கரிக்கவும். உருக்கிய சாக்லேட் கெட்டியாகும் வரை வைக்கவும்.

பாதாம் பிஸ்கட்

தேவை

            தோலுரிக்கப்படாத

            பாதாம் பருப்புகள் –     150 கி

            வெண்ணெய் –             225 கி

            ஐசிங் சர்க்கரை –         6 டே.ஸ்பூன்

            மைதா மாவு –              275 கி

            வெண்ணிலா எஸன்ஸ் – 2 டீஸ்பூன்

            பாதாம் எஸன்ஸ் –      1/2 டீஸ்பூன்

செய்முறை

இரண்டு பேகிங் தட்டை எடுத்து அவற்றை பேகிங் பேப்பரால் லைனிங் செய்யவும்.

பாதாம் பருப்புகளை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும். பருப்புகள் களிம்பாகவிடக் கூடாது.

ஒரு கிண்ணத்தில் வெண்ணெய்யை போட்டு ஐசிங் சர்க்கரையும் (சலித்தது) போட்டு நன்றாகக் அடிக்கவும்.

கிண்ணத்தில் சலித்த மாவை சேர்க்கவும். இரண்டு எஸன்ஸைகளையும் சேர்க்கவும். மிருதுவாக மாவை நன்றாகப் பிசையவும். நறுக்கிய பாதாம் பருப்புகளையும் சேர்க்கவும்.

ஒரு கரண்டியின் உதவியால் ஒரு அக்ரூட் கொட்டை அளவுக்கு 32 பந்துகளாக பிசைந்த மாவை உருட்டவும். இந்த பந்துக்களை பேகிங் தட்டுக்களில் இடைவெளி விட்டு வைக்கவும்.

முன்பே சூடுபடுத்திய அவனி ல் வைத்து 350 டிகிரி எஃப் சூட்டில் 25 நிமிடங்கள் அல்லது பிஸ்கட்டுகள் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்.

பேக்கிங் தட்டுகளிலேயே பிஸ்கட்டுகளை இரண்டு நிமிடங்கள் ஆறவிடவும். பிறகு ஒரு கம்பித் தட்டில் பிஸ்கட்டுகளை மாற்றி முழுமையாக ஆறவிடவும்.

ஐசிங் சர்க்கரையை பிஸ்கட்டுகளின் மேல் இலேசாக தூவவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பாதுகாக்கவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.


Spread the love