கரிசலாங்கண்ணி பொடி

Spread the love

கரிசலாங்கண்ணி பொடி பயன்கள்        

கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்றவை அடங்கியுள்ளது.

பற்கள் ஆரோக்கியத்திற்கு

கரிசலாங்கண்ணி பொடி 75%, அதனுடன் கடுக்காய், கருவேலம்பட்டை, சுக்கு, கிராம்பு, எலுமிச்சை பழம், இந்துப்பு, மாசிக்காய், ஆலம் விழுது ஆகியவை சிறிதளவு எடுத்துகொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மையாக அரைக்கவும்.

இந்த பொடியினை கொண்டு பல் துலக்கி வர பல்லில் உண்டாகும்  மஞ்சள் தன்மைகள் நீங்கி, பற்கள் உறுதியாகும். இது பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைத் தருகிறது.

விஷம் முறிய

கரிசலாங்கண்ணி பொடியை பாம்பு, தேள் கடித்த இடத்தில் பற்று போட விஷத்தன்மை முறிந்து வீக்கம் குறையும்.

யானைக்கால் நோய்க்கு

கரிசலாங்கண்ணி பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து யானைக்கால் நோய் உள்ளவர்களுக்கு மேல் பூச்சாக பூசலாம்.

கூந்தல் வளர்ச்சி மேம்பட

கூந்தலுக்கு பயன்படுத்தும் தைலங்களில் கரிசலாங்கண்ணி பொடி சேர்க்கலாம். இது சருமத்திற்கும், கூந்தலுக்கும் எவ்விதமான கேடும் விளைவிப்பதில்லை.

கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம்

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். கொதி வரும் சமயத்தில் கரிசலாங்கண்ணி பொடி 50 கிராம் அளவு சேர்த்து நன்கு கலந்து விட்டு சிறிது நேரத்தில் இறக்கவும். பின் இரண்டு நாட்கள் அப்படியே ஊறவிட்டு, வடிகட்டி தலைக்கு தேய்த்து வர தலைமுடி கருப்பாக, அடர்த்தியாக வளரும். பித்த நரைகள் நீங்கும்.

இளநரைக்கு

கரிசலாங்கண்ணி பொடியை மெல்லிய வெள்ளை நிற துணியில் கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். இதனை வெயிலில் காய வைக்கவும். எண்ணெய் கருப்பு நிறமாக மாறியதும் தொடர்ந்து தலையில் தடவி வரலாம். இவ்வாறு செய்வதால் இளநரை மாறி முடி கருப்பாக மாறி இருப்பதைக் காணலாம்.

கரிசலாங்கண்ணி பொடி சாப்பிடும் முறை

கரிசலாங்கண்ணி சூப்

ஒன்றரை தம்ளர் தண்ணீரில் கரிசலாங்கண்ணி பொடி சிறிதளவு சேர்த்து அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கரிசலாங்கண்ணி சூப் தயார். இதனுடன் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி சேர்க்கலாம். இது சுவையாக இருக்கும்.

ஞாபக சக்தி அதிகரிக்க

கரிசலாங்கண்ணி பொடி 50 கிராம், திரிபலா பொடி 50 கிராம், பிரம்மி பொடி 50 கிராம், கீழாநெல்லி பொடி 50 கிராம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாட்டிலில் சேகரித்து வைக்கவும். இதனுடன் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

கரிசலாங்கண்ணி இலை பொடி, மிளகு, ஏலக்காய் தூள் ஆகியவை சம அளவு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து மூலிகை தேநீராக பருகி வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது பருவ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

இரத்த சோகைக்கு

கரிசலாங்கண்ணி பொடியை காலை, மாலை இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். இது உடலிற்கு தேவையான இரும்புச்சத்தை பெற உதவுகிறது. இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

மஞ்சள் காமாலை

கரிசலாங்கண்ணி பொடியை சூடான பாலில் கலந்து வடிகட்டி அந்த பாலை காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குறையும்.

சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் வரை கொடுக்கலாம். பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் வரை கொடுக்கலாம். இந்த மருந்தை சாப்பிடும் போது உப்பில்லாமல் பத்தியம் இருப்பது அவசியமாகும். நோய் நீங்கியதும் அதிகமான அசைவ உணவை எடுத்துக் கொள்ளாமல், ஆறு மாதங்கள் வரை எளிதில் செரிக்கும் உணவினை மட்டும் சாப்பிடலாம்.

குறிப்பு

கரிசலாங்கண்ணி அதிக குளிர்ச்சி நிறைந்த மூலிகை என்பதினால் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி பொடியை அதிகளவில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

கரிசலாங்கண்ணியை நீண்ட நாட்களுக்கு மருந்தாக பயன்படுத்துவதாக இருப்பின் மருத்துவ ஆலோசனை அவசியம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!