பக்தி பரவசம்

Spread the love

பக்தியின் வெளிப்பாடுகள் பல. இறைவனை தந்தையாக, தாயாக, சேயாக, காதலனாக, சேவகனாக உருவகப்படுத்தி பல பக்திமான்கள் தங்களின் பக்தி பரவசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வகையில் வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களின் ஒருவரான பெரியாழ்வாரின் பக்தி பாசுரம் அலாதியானது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் “பல்லாண்டு வாழ்க” என்று வாழ்த்திக் கொள்வார்கள். ஆனால் பெரியாழ்வாரோ ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை “பல்லாண்டு வாழ்க” என வாழ்த்துகிறார்! நாலாயிர திவ்யபிரபந்தத்தின் இந்த பாசுரம் இது தான் –

                பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

                                பலகோடி நூறாயிரம்,

                மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்

                                சேவடி செவ்வி திருக்காப்பு.

                அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி

                                ஆயிரம் பல்லாண்டு;

                வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற

                                மங்கையும் பல்லாண்டு;

                வடிவார்சோதி வலத்துறையும் சுடர்

                                ஆழியும் பல்லாண்டு;

                படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச

                                சன்னியமும் பல்லாண்டே.

                இதன் பொருள் – முஷ்டிகன், சாணூரன் ஆகிய மல்லர்களைக் கொன்று உன்திருத்தோள்களின் பலத்தை நிறுவிய பகவானே! உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன் சிவந்த திருவடியின் அழகுக்குப் பல்லாண்டு. மனிதக் கணக்கின் படியான பல்லாண்டுகளும் பல பிரமன்களுடைய பல நூறாயிரம் வருடங்களும் நீ குறைவில்லாத பாதுகாப்புடன் வாழ்க!

                அடியவர்களுக்கும் உனக்கும் உள்ள பிரிவில்லாத தொடர்பு ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கட்டும். உன் வலதிருமார்பில் வாழ்கின்ற மஹாலஷ்மி உன்னுடன் நித்தியமாகக் கூடி இருக்க வேண்டும். பகவானே! உன் வலக்கரத்தில் விளங்கும் ஒளி கூடிய சக்கரம் பல்லாண்டுகள் நிலைக்கட்டும். யுத்தத்தில் புகுந்து முழங்கும் உன் பாஞ்சசன்னிய ஆயுதமும் பல்லாண்டு நிலைக்கட்டும்.

                அவரது பக்தி பரவசத்தில் பெருக்கெடுத்த இந்த வாழ்த்து இறைவனை பல்லாண்டு வாழச் சொல்வதால், மனிதர்களின் இறை உணர்வும் பல்லாண்டுகள் வாழும் என்ற வேண்டுகோளாகும். இறைவனுக்கு வயதென்பதில்லை என்று அறியாதவரா பெரியாழ்வார்? நமக்காக, நமது நன்மைக்காக, நாம் நம்பி வழிபட, இறையுணர்வு நீடித்திருக்க, இந்த பாசுரத்தை அருளியிருக்கிறார்.

உங்கள் நலன் கருதி

ஆயுர்வேதம்   Dr. S. செந்தில் குமார்


Spread the love