வெற்றிலை குடும்பத்தைச் சார்ந்த வெற்றிலையின் உறவினர்கள் மிளகு, வால் மிளகு ஆகும். இந்த மற்ற செடிகள் எல்லாம் அவற்றின் காய்களுக்காக பயிரிடப்படுகின்றன. ஆனால் வெற்றிலைக் கொடி அதன் இலைக்களுக்காக மட்டும் தான் வளர்க்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை இப்பயிர்கள் விளைவதற்கு ஏற்ப சீதோஷண சூழ்நிலையை கொண்டுருப்பது இதன் சிறப்பு விறுவிறுப்பான நறுமணச் சுவையூட்டும் பொருள்களாக வெற்றிலை மிளகு, வால் மிளகு அடங்கியுள்ளன.
வெற்றிலைக்கொடியின் அமைப்பு:
வெற்றிலைக் கொடி மிக நளினமானது. முதிர்ந்த கொடியின் தண்டும், கிளைகளும் விரல் பருமன் அளவு அல்லது அதற்கு மேலே இருக்கும். இலைகள் அடிப்பாகத்தில் இதய வடிவமாக, இருக்கும், மேலே செல்லச் செல்ல அவை நெருங்கி முனையாகவும் நீளும் இவைகளின் நீளம் மூன்று அங்குலத்தில் இருந்து ஒன்பது அங்குலம் வரை தோராயமாக அமையும் இலையின் அடிப்பாகத்தில் தண்டுடன் காம்பு சேருமிடத்தில், மிகச் சிறிய இரண்டு உறுப்புகள் முளைகளைப் போல் தென்படும். இதனை ‘ஸ்டிபியுல்’ என்று அழைப்பார்கள். இலைக்காம்புகள் அரை முதல் ஒரு அங்குலம் வரை நீளம் காணப்படும்.
வெற்றிலைக் கொடி பூக்குமா?
வெற்றிலைக் கொடிக்குப் ‘பூ’ உண்டு இப்பூக்கள் கொத்துக்கொத்தாய் நீண்ட உருளை வடிவத்தில், மிக அழகாகக் தொங்கும். மிளகுக் கொடியின் பூங்கொத்துக்களும்¢ இப்படித்தான் இருக்கும் இக்கொத்துக்களை தாவரவியல் வல்லுநர்கள் ‘காட்க்கீன்’ என்று கூறுவர் பூங்கொத்துக்களில் ஆண், பெண் என்று இருபாலின பூக்கள் உண்டு பெண் பூக்களின் தொகை, ஆண் பூக்களின் எண்ணிக்கையை விட சற்று அதிகமாக இருக்கும் பெண் பூக்களின் நீளமும் சற்று அதிமாக இருக்கும் பெண் பூக்களின் சூல்பை இருந்தாலும், வள்ர்வதோ, காயாக முதிர்வதோ இல்லை.
தோட்டத்தில் பயிரிட:
வெற்றிலைக் கொடியைப் பயிட விதைகள் தேவையில்லை கொடியின் துண்டுகளை மண்ணில் கட்டி நீருற்றி வளர்த்து விடலாம். வெற்றிலையில் பலரகங்கள் உண்டு. வெற்றிலையின் அமைப்பிலும் பல வடிவம், நிறம் உண்டு பொதுவாக வெற்றிலையின் வடிவம் நீட்டிய கூரான இதய வடிவம் ஆகும். ஆனால் சில ரக வெற்றிலைகள் வட்டவடிவம் உள்ளவை கற்பூரக்கொடி ரகமானது கற்பூரவாசனை கொண்டது. இலை வெண்மை கலந்த பச்சையாக நீளவட்டமாக பளிச்சென்று, ஒரு கவர்ச்சியுடன் காணப்படும்.
கல்லாஸ் ரக வெற்றிலை கற்பூர ரக வெற்றிலையைவிட பெரியது. காரம் அதிகமாக இருக்கும். புகையிலையுடன் சேர்த்¢து போடுபவர்களுக்கு ஏற்ற ரகமாகும். கேரள மாநிலத்தில் புகையிலை போடும் பழக்கம் உண்டு. அங்கு கல்லாஸ் ரகத்தின் ஒரு இனமே பயிடப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து வரும் வெற்றிலை சித்துக் கொடி ரகமாகும் மதுரை மாவட்டம் திருபுவனம், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி இலைகள் உயர்தரமானவை ஆடிமாதம் அகத்தி விதையை இரண்டு அடி இடைவெளி விட்டுவிட்டு, நான்கு, ஐந்து விதைகளாக நடுவார்கள் அகத்தியுடன் ஆங்காங்கே முருங்கை, புளிச்சக்கீரை விதைகளையும் நடுவார்கள்.
முருங்கையும், அகத்தியைப் போலவே வெற்றிலைக் கொடி படர உதவுகிறது புளிச்சக்கீரை வளர்ந்ததும், அதை வெட்டி ஊற வைத்து நார் உரித்து கயிறு திரித்து வைத்துக் கொள்வார்கள் இடையிடையே வாழைக்கன்றை நடுவார்கள் வாழைநார், வாழைப்பட்டை கொடியைக் கட்டவும், வெற்றிலையை அடுக்கடுகாக கட்டி சந்தைக்கு அனுப்பவும் உபயோகப்படும்.
விதைகளையெல்லாம் நட்டியபின் நன்றாக, தாராளமாக நீர் பாய்ச்சி வடியச் செய்து விட வேண்டும். முளைகள் வெளிக் கிளம்பியபின், இன்னொரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். அதன் பின்புள்ள வள்ர்ச்சி பருவமழையின் கையில் தான் உள்ளது. பக்கவாட்டில் கிளம்பும் சிறு கிளைகளை வெட்டி விட வேண்டும். இதனால் அகத்தி செங்குத்தாக வளரும். இப்படி வெற்றிலைக்கு முன் அகத்தி வளரும் பொழுது தோட்டத்தைச் சடைக்கால் என்று குறிப்பிடுவார்கள்.
ஐப்பசி மாதம் வெற்றிலை நடுவதற்குரிய காலமாகும் வெற்றிலையை நடுவதற்கு முன்பு, வாய்க்காலில் நீர் பாய்ச்சி, அகத்திச் செடிகளின் அடியில் மண்ணனக் கொத்தி விடுவார்கள். இவ்வாறு தயார்படுத்தப்பட்ட நிலத்தில் வெற்றிலைக் கொடித் துண்டுகளை அகத்தியின் கீழே நடுவார்கள்.
வெற்றிலையில் இருக்கும் ரசாயனம் வெடிப்பு:
வெற்றிலையில் பொட்டாசியம் நைட்ரேட் என்னும் உப்பு உண்டு. இதனைத்தான் வெடி உப்பு என்கிறோம் ஒன்றிரண்டு கட்டு வெற்றிலைகளை இடித்துக் கசக்கிச் சாறு பிழிந்து வடிகட்டின சாற்றை ஒர் அகலமான, ஆழமில்லாத தட்டில் இட்டு வெயிலில் காய வைத்தால் நீர் எல்லாம் வற்றி உப்பு மட்டும் காணப்படும் வெற்றிலையில் இவ்வுப்பு 0.75 சதவிதம் உள்ளது. ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இவ்வுப்பு, வியர்வையை அதிகரிக்கச் செய்யும். சிறுநீர் சுலபமாக வெளியேறச் செய்யும் குணம் உண்டு. ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அதனைத் தணிக்க இதைக் கலந்து மருந்துகளுடன் தருவார்கள் வெற்றிலை போட்டதும் ஒரு சிலருக்கு அதிக வியர்வை ஏற்படுவது இதனால்தான்.
வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துப் போட்டுக் கொள்வது தான் நமது மக்களின் வழக்கம் ஆனால் இவைகளுடன் கத்தைக் காம்பு, தென்னை மரத்து வேர் என்றும் பொருள்களையும் சேர்த்து தாய்லாந்து வாசிகள் சுவைக்கிறார்கள். தென்னை வேர்களை அறுத்-து, வெயிலில் உலர்த்தி, சிறிது வறுத்துப் பொடி செய்து வெற்றிலைப் பாக்குடன் சேர்த்துக் கொள்கிறார்கள் இவ்வாறு தயாரான தென்னை வேர்ப்பொடிக்கு, ஒரு துவர்ப்பு ருசியும் மண-மும் உண்டு. இதை உபயோகிப்பதால், ஈறுகள் கெட்டிப்பட்டு பற்களுக்கு வலிமை ஏற்படுகிறது என்று தாய்லாந்து வாசிகள் நம்புகிறார்கள். இதைவிட சுவாரசியமான செய்தி வடதாய்லாந்து நாட்டில் உண்டு. அங்கே மலைப்பிரதேசங்கள் மற்றும் காடுகளிலும் தேயிலைச் செடியின் ஒரு ரகம் தன்னிச்சையாக அதிகம் வளருகிறது. சுமார் 20 முதல் 25 அடி உயரம் கொண்ட மரமாகும். அதன் இலைகளைப் பறித்து, பதப்படுத்தி, தேயிலைத் துண்டுகளை ஒரு வெற்றிலையில் சுற்றி சிறு பொட்டலங்களாகக் கட்டி, வைப்பார்கள். இதற்கு ‘மியாங்க’ என்று பெயர் இப்பொட்டலங்கள் நம் நாட்டில் விற்கப்படும் பீடாக்களைப்போல விற்பனை செய்யபடுகிறது. பீடாக்களை உண்பவர்களுக்கு என்ன ஒரு சுகம் கிடைக்குமோ அதுபோல, மீயாங்க் பொட்டலத்திலும் உட்கொள்ளும் பொழுது கிடைக்கும். இப்பழக்கம் இல்லாதவர்கள் மீயாங்க்கை முதன் -முதலாக உபயோகிக்கும் பொழுது மயக்கமும் தலைச் சுற்றலும் ஏற்படும்
மாலத்தீவில் வெற்றிலையை பயிரிடுவதற்குரிய நில வளம் இல்லை, குளிர் வெப்பநிலை இல்லை எனினும் அங்குள்ள மக்கள், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வெற்றிலைக் கொடியை நட்டு, அதிலிருந்து கிடைக்கும் வெற்றிலைகளை தங்கள் உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது போல, வெற்றிலைக் கொடியை படரவிட, முருங்கை மரத்தையே பயன்படுத்துகிறார்கள்.
வெற்றிலையைச் சிறப்பிக்கும் நாடோடிப் பாடல் கன்று வெற்றிலை போட்டு நாக்கு சிவந்ததைக் கொண்டு, ஒரு இளைஞன் தனது காதலியிடம் உள்ள உண்மையான அண்பைக் கூறுகிறான். ஆனால் அவளோ, அவன் நடத்தையில் சந்தேகம் கொள்கிறாள். அதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்து விட்டு, கொழுந்து வெற்றிலையின் கவர்ச்சியைக் கொண்டு அவளை ஆறுதல் படுத்துகிறான.¢
ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பாம் வெத்திலையாம்
போட்டாச் சிவக்குதடி…
போயிவாரேன் பொன்னுரங்கம்
போட்டாச் சிவக்குதுன்னு
பசபசப்பு என்னாத்துக்கு
வட்டாரச் சிறுக்கியவள்
தருவதென்ன அருமை மச்சான்?
காத்தோட கரணைவச்ச
கரும்புக் கொல்லை பாத்துவாரேன்
வெத்திலையைக் கொழுந்தாக
கிள்ளிவையு பொன்னுரங்கம்…
இதில் கரனை என்பது, பயிர் செய்யும் பொருட்டு, நறுக்கி நிலத்தில் நட்ட கரும்பு வெட்டுத்துண்டு ஆகும்.
வெற்றிலை எண்ணெய்:
வெற்றிலையில் எளிதில் ஆவியாகக் கூடிய பல எண்ணெய்கள் இருக்கின்றன. இவைகள் தான் இலைக்குக் காரத்தையும் பிரத்தியேகமான மணத்தையும் அளிக்கின்றன. இவற்றின் அளவு ஒவ்வொரு வெற்றிலை ரகத்திற்கும் வேறுபாடு உள்ளது. மொத்தமாக இந்த எண்ணெய்களுக்கு யூஜினால் (Eugenol) என்று பெயராகும். யூஜினால் தவிர, வெற்றிலையில் பைப்பெரிக் அமிலம், என்ற அமிலம் உள்ளது. யூஜினால் மற்றும் பைப்பரிக் அமிலமும் தான் வெற்றிலைக்குச் செரிமான சக்தியை அளிக்கின்றன. பதம் செய்யப்பட்ட பழுப்பு இலையில், சாதாரண இலையைவிட யூஜினால், மாலை சர்க்கரையாக்கும் ‘டயாஸ்டேஸ்’ என்னும் பொருளும் அதிகமாக இருப்பதால், பதம் செய்யப்பட்ட பழுப்பு வெற்றிலைக்கு அதிக கிராக்கியுள்ளது. பழுப்பு வெற்றிலை பல மாதங்கள் கெடுவதில்லை. பழுப்பு வெற்றிலைப் போட்டுப் பழகிய மாணவர்கள் சாதாரண வெற்றிலையை விரும்ப மாட்டார்கள். இதனால் சாதரண இலையைவிட பழுப்பு வெற்றிலையின் விலையும் இரண்டு மூன்று மடங்குகள் அதிகமாக உள்ளது.
தாம்பூலம்:
நாம் வெளிவிருந்துகள்/ திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது, அங்கு நாம் அருந்தும் குடிநீர் மாற்றம் காரணமாக, தொண்டை சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. இதனைத் தவிர்க்கவும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் வெற்றிலை குதப்புவது பயன்படுகிறது. தாம்பூலம் தரிப்பவர்களுக்கு எலும்பு முறிவு சார்ந்த பிரச்சனை பொதுவாக நேரிடாது. காரணம் என்னவெனில், அவர்களின் தாம்பூலம் தரிப்பதன் காரணமாக, குறிப்பிட்ட அளவு சுண்ணாம்புச் சத்து அவர்களது உடம்பிற்கு நேராக, தேவையான அளவுக்கு சென்று விடும் போது, எலும்புகள் வலுவடைகின்றது.
தாம்பூலம் தரித்தல் என்பது, புகையிலை சேர்க்காத, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து வாயிலிட்டு மென்று சுவைத்து விழுங்குவது ஆகும்.
வெற்றிலையில் உள்ள காம்பு, நரம்புத்தண்டு, நடுத்தண்டை நீக்கி விட்டு, முதலில் வெற்றிலையை மென்று தின்று பின்னர் முறைப்படி பாக்கு, வெற்றிலைகளை உட்கொள்ள வேண்டும். தாம்பூலத்தை மென்றபின் முதலில் வரும் உமிழ்நீரையும், இரண்டாம்முறை வரும் உமிழ்நீரையும் நச்சுத்தன்மை கொண்டதால், அவற்றை வெளியே உமிழ்ந்து விடுதல் அவசியம். தாம்பூலம் தரிப்பதால், அதிகப்படியான உமிழ்நீர் சுரக்கப்பட்டு முறையாக செரிமானம் செயல்பட உதவும்.
தாம்பூலம் வேளைகளில் வித்தியாசம் உண்டு:
தாம்பூலம் தரிப்பது காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்க்கும் அளவு மாறுபடுகிறது. இதனை நமது மூதாதையர்கள், மருத்துவர்கள் விளக்கி கூறியுள்ளனர். காலை உணவிற்குப் பின்பு உட்கொள்ளும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருப்பது அவசியம். இதன் மூலம் மதிய நேரத்தில் வரும் பொழுது வெப்பம் அதிகமாகும். வெப்பம் அதிகமாகும் பொழுது உடம்பில் பித்தம் அதிகரிப்பதை இது தடுக்கும் மதிய உணவிற்குப் பின்பு உட்கொள்ளும் தாம்பூலத்தில் சுண்ணாம்பு அதிகம் இருத்தல் அவசியம். இதற்கு காரணம் அது உணவில் உள்ள வாதம் அதாவது வாயுவைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது. இரவு உணவுக்குப் பின்னர் உட்கொள்ளும் தாம்பூலத்தில் வெற்றிலையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நெஞ்சில் கபம்/சளி கட்டாது இந்த அளவுகளைத் தெரிந்து கொள்ளாது அல்லது மீறும் பொழுது தான் பிரச்சனைகள் உருவாகின்றன.