வெற்றிலை

Spread the love

தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையுடன் கொடி போல் பின்னிக் கொண்டிருப்பது வெற்றிலை உபயோகிக்கும் பழக்கம். வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு சேர்ந்த தாம்பூலத்தை உண்ணுவது, மது, சிகரெட் போல் விட முடியா வழக்கம். தாம்பூலம் இல்லாமல் மங்கல நிகழ்ச்சிகள் இல்லை. விருந்தாளிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து உபசரிப்பது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவியுள்ள ஒரு நாகரிகம்.

வெற்றிலை உபயோகிப்பது 2000 வருடங்களுக்கு முன்பே தொடங்கிய பழக்கம் என்று சரித்திர ஆதாரங்கள் கூறுகின்றன. முதலில் மலேசியாவில் உருவாகி, மற்ற ஆசிய பகுதிகளில் பரவி, பிறகு மடகாஸ்கர், கிழக்கு ஆப்ரிக்காவிலும் வெற்றிலை பயிரிடுவது பரவியது. இந்தியாவில் தமிழ்நாடு மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசங்களில் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்டங்கள் வெற்றிலைக்கு புகழ்பெற்ற இடங்களாகும். இந்த ஊர்க்காரர்கள், தாம்பூலம்மென்ற சிவந்த வாயுடன் எப்போதுமே காட்சியளிப்பார்கள்! கலாச்சாரமே சங்கீத ரசனை மற்றும் தாம்பூல ரசனைதான்.

வெற்றிலை, மெல்லிய, வாசனையுடைய ஒரு கொடித்தாவரம். இதன் கிளைகள் கணுக்களில் தடித்திற்கும். பச்சையான இலைகள் இதயவடிவில், தடிமனான நடுக்காம்பு மற்றும் நடுக்காம்பிலிருந்து இலை நுனி வரை ஐந்தாறு மெல்லிய நரம்புகள் ஒட, பசுமையாக காணப்படும். வெற்றிலை கொடி, மற்ற சிறு மரங்களை முக்கியமாக அகத்திக்கீரைமரங்களை தழுவி பின்னிப் படரும். சிறுபூக்களும், ஒரே ஒரு விதையுடைய சிறு பழங்களும் காணப்படும்.

100 கிராம் வெற்றிலையில் இருக்கும் சத்துக்கள்

ஈரப்பசை – 85.4%, புரதம் – 3.1%, கொழுப்பு – 0.8%, தாதுப்பொருட்கள் – 2.3%, மாவுச்சத்து – 6.1%, நார்ச்சத்து – 2.3%

தவிர வெற்றிலையில் கால்சியம், காரோடின், தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் மற்றும் வைட்டமின் C இவை உள்ளன. 100 கிராம் வெற்றிலையில் 44 கலோரிகள் உள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் படி வெற்றிலையில் டானின் சர்க்கரை, டையாஸ்டேஸ், மற்றும் மஞ்சள் நிற, காரமான, வாசனையுள்ள எண்ணெய்யும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் டையாஸ்டேஸ் என்பது ஜீரண சக்திக்கு உதவும் ஒரு என்சைம் மஞ்சள் நிற எண்ணெய்யில் உள்ள பொருள். ஒரு ஆன்டி செப்டிக் நுண்கிருமிகளை அழிக்கும் சக்தி.

வெற்றிலை தனியாகவே பல மருத்துவ குணங்களுடையது. இத்துடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து தாம்பூலமாகும் போது இதன் பலன் மேலும் அதிகரிக்கும்.

வெற்றிலையின் பயன்கள்

வெற்றிலையில் உள்ள அமினோ அமிலங்கள், டையாஸ்டேஸ் இவற்றால் செரிமானத்திற்கு பெரிதும் உதவும். வாய்வுத்தொல்லையை போக்கும்.

வெற்றிலை சாறு பாம்புக்கடிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.

சிறுநீர் குறைந்தோ இல்லை தடைப்பட்டாலோ, வெற்றிலைச்சாறு, தண்ணீர் சேர்த்த பால், சிறிது சர்க்கரை சேர்த்து குடிக்க சிறுநீர் சரியாக போகும்.

குழந்தைகளில் வயிற்று வலிக்கு, விளக்கெண்ணெய் தடவி, சிறிது வாட்டப்பட்ட வெற்றிலை குழந்தையின் அடிவயிற்றில் வைத்தால் வலி குறையும். வெற்றிலை காம்பை, விளக்கெண்ணெய்யில் தோய்த்து, குழந்தையின் குதத்தில் சொருகினால் சுலபமாக மலம் கழியும். மலச்சிக்கல் மறையும்.

நரம்புத்தளர்ச்சிக்கு வெற்றிலை நல்லது. சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கொண்டால் நல்ல டானிக்ஆகும். இதை தினமும் 2 வேளை எடுத்துக் கொள்ளலாம்.

தலைவலிக்கு வெற்றிலை பற்று போடலாம்.

இதிலிருந்து எடுக்கும் எண்ணெய் நெஞ்சு, நுரையீரல் வியாதிகளுக்கு நல்லது.

கண்வலிக்கும், மாலைக்கண் நோய்க்கும் வெற்றிலைச்சாறு கண்ணில் விட குணமாகும்.

வெற்றிலைச்சாறு ஒரு நுண்ணுயிர் கொல்லி ஆன்டி செப்டிக், அது காயங்களை ஆற்றும்.

கட்டிகள் போக, வெற்றிலையை வாட்டி, விளக்கெண்ணெய் தடவி, கட்டிகள் மேல் வைத்து வரவும். 2 – 3 மணி நேரத்திற்கு ஓரு முறை, வெற்றிலையை மாற்றவும். சில தடவை இதை செய்தால், கட்டிகள் உடைந்து விடும்.

வெற்றிலை கொடியின் வேர் குழந்தை பெறுவதை தடுக்கும்.

வெற்றிலை சேர்ந்த தாம்பூலம்

தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு கலை. தாம்பூலத்தின் தலைவர் வெற்றிலை தான். வெற்றிலையில் “கும்பகோணம் வெற்றிலை” முதல் தரம். வெள்ளை வெற்றிலை இரண்டாம் தரம்.

தாம்பூலத்தின் அடிப்படையான கலவை இரண்டு வெற்றிலைகள், சிறிதளவு பாக்கு, சிறிது சுண்ணாம்பு சேர்ந்தது.

இதில் விருப்பப்படி கத்தக்காம்பு‘ (பாக்கை வேக வைப்பதால் கிடைப்பது) சேர்க்கலாம்.

தாம்பூலம் இன்னும் விஸ்தாரமாக, பசுமையான வெற்றிலை, வால்மிளகு, ஏலக்காய், கிராம்பு, பாக்கு, பச்சைக் கற்பூரம் (மிளகளவில்) மற்றும் சுண்ணாம்பு சேர்த்தும் தரிக்கலாம்.

தாம்பூலம் செய்யுமுன், வெற்றிலையை நன்றாக கழுவி முன்னும், பின்னும் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். காம்பு, இலைநுனி, நடுநரம்பு இவற்றை நீக்க வேண்டும். சுண்ணாம்பை வெற்றிலையின் பின்புறம் தடவ வேண்டும்.

இவ்வாறு சுத்தப்படுத்திய வெற்றிலையை சுவைத்து, பிறகு பாக்கு அதன் பிறகு சுண்ணாம்பு தடவிய வெற்றிலை இப்படியாக தாம்பூலம் தரிக்க வேண்டும்.

காலையில் பாக்கு அதிகமாகவும், பகலில் சுண்ணாம்பு அதிகமாகவும், இரவில் வெற்றிலை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

துவர்ப்பு, உப்பு, கசப்பு முதலிய சுவைகளை கொண்ட தாம்பூலத்தை தினசரி ஒரு வேளை தரிப்பதால் வாதநோய்கள் வராது என்று இராமலிங்க அடிகளார் கூறியிருக்கிறார்.

உணவிற்கு பின் தாம்பூலம் தரிப்பது நல்ல வழக்கம்.

தாம்பூலத்தின் நற்பயன்கள்

வெற்றிலை இரத்த விருத்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு கால்சியம்ஆனதால் எலும்புகள் வலிமை பெறும். பாக்கு குடலில் பூச்சிகள் தாக்காமல் தடுக்கும். ஏலக்காய், பச்சைக்கற்பூரம், வால் மிளகு சேர்த்துக் கொண்டால் கபம் சேர்வதை குறைக்கும்.

தாம்பூலம் வாய்க்கு புத்துணர்ச்சி உண்டாக்கி, துர்நாற்றத்தை போக்கும்.

தாம்பத்தய உறவை மேம்படுத்தும்.

வெற்றிலையில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியால் ஆஸ்துமா, காசநோய்கள் நீங்கும்.

செரிமானத்தை தூண்டும்.

பற்கள் உறுதியடையும்.

தாம்பூலம் நோய்தடுப்பு மருந்தாகும்.

பெண்கள் தாம்பூலம் தரித்தவுடனே, நன்றாக வாய், நாக்கு சிவந்தால் அவர்களுக்கு அமையும் கணவன் அந்தப் பெண் மீது பிரியமாக இருப்பான் என்று சொல்வதுண்டு.

ஆனால், ஒரு எச்சரிக்கை: தாம்பூலம் தரிப்பதுடன் தற்போது புகையிலையை சேர்ப்பது வழக்கமாகி வருகிறது. இது நிச்சயமாக வாய்புற்றுநோயை வரவழிக்கும் வழக்கம். தவிர வெற்றிலை பாக்கு போடுவதும் அளவுக்கு மேல் போகக்கூடாது.


Spread the love