நேர்மறை எண்ணங்கள் வளர

Spread the love

‘வாழ்க்கையில பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க பாசிட்டிவாகவே முடியும்‘. இது நமக்கு பலரும் சொல்கின்ற அறிவுரை.  நேர்மறை சிந்தனை இருந்தால் போதும் நீங்கள் எப்படிப்பட்ட துன்பத்திலிருந்தும் வெளியில் வந்து விட முடியும். எந்த ஒரு விஷயத்தையும் எதிர்மறையாக சிந்திப்பதை விட்டு, நேர்மறையாக சிந்தித்து பாருங்கள். உங்கள் உடலிலும், உணர்விலும் புத்துணர்வு பிறக்கும். உற்சாகம் சுரக்கும்.  நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்…

நல்ல தொடர்பு

உங்கள் குடும்பத்திலும் சரி, உங்களை சுற்றியிருப்பவர்களிலும் சரி நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களோடு அதிகமாக பழகுங்கள். எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக பேசுவோரிடம் இருந்து சற்று விலகியிருங்கள். உங்களுக்கு தேவைப்படும் சமயங்களில் பல  நல்ல அறிவுரைகளை தருவதுடன், நீங்கள் கூறும் கருத்துக்களை கேட்டறிந்து, பொறுமையோடு நல்வழிப்படுத்துகின்றவர்களை அன்றாடமும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கருத்துக்களை காது கொடுத்து பொறுமையுடன் கேட்பவராக இருப்பவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும்.

சிந்தனை

முதலில் நீங்கள் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு உதாரணத்திற்கு ‘இதை என்னால் செய்ய முடியாது. இந்த விஷயம் எனக்கு தெரியாது என்று நீங்கள் உதட்டளவில் அல்ல மனதளவில் கூட சொல்லிப்பழகாதீர்கள்.இதை என்னால் செய்ய முடியும், இதை புதிய கோணத்தில் செய்து முடிப்பேன் என்று உள்ளத்தில் சொல்லிப்பழகுங்கள். எதைப் பற்றி சிந்தித்தாலும், நேர்மறையாகவே இருக்கட்டும்.

நகைச்சுவை உணர்வு

நகைச்சுவை உணர்வுடன் இருந்தாலே வாழ்வில் பெரும்பாலான மனச்சிக்கல்களில் இருந்து விடுபடலாம். நீங்கள் அன்றாடமும் ஏதாவதொரு விஷயத்திற்காக போராடுகிறீர்கள் என்றால், அதில் சாதகமும் வரலாம். பாதகமும் வரலாம். ஆனால், அதை நகைச்சுவை உணர்வுடன் ஏற்றுக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே சிந்தித்து பாருங்கள். உங்கள் மன அழுத்தம் குறைந்து அடுத்த வேலை செய்யும் போது, மனம் உற்சாகத்துடன், நேர்மை எண்ணத்துடன் தயாராக இருக்கும்.

மற்றவர்களுக்கு உதவுங்கள்

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையே நேர்மறையாக சிந்திப்பதன் விளைவு தான். பிறருக்கு உதவி செய்யும் போது, உங்களுக்குள் ஏற்பட்டுள்ள எதிர்மறை சிந்தனைகள் வெளியே பறந்து விடும். நீங்கள் பிறருக்கு உதவி செய்வீர்களல்லவா அவர்கள் உங்களிடம் நன்றி கூறும் போது, மனதிருப்தியும், உங்ளையறியாமல் நேர்மறை சிந்தனையை வந்து விடும்.

நேர்மறையான மேற்கோள்கள்

நீங்கள் புத்தகங்கள் படிக்கும் போது நேர்மறையான மேற்கோள்கள் உங்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கும். உங்களுக்குள் உற்சாகத்தை ஊட்டி, உட்கார்ந்த இடத்தில் எழுந்திருக்க செய்திருக்கும். அப்படிப்பட்ட நேர்மறையான மேற்கோள்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி, உங்களது வீட்டின் முக்கிய இடங்களில், ஒட்டி வைத்துக் கொள்ளலாம. அந்த வாசகங்களை படிப்பதன் மூலம், நல்ல எண்ணங்கள் மனதில் விளையும்.

உங்கள் எண்ணம் போல் வாழ்வு என்று பெரியவர்கள் சும்மாவா சென்னார்கள்.


Spread the love