சீந்தில் கொடி

Spread the love

டினோஸ்போரா கார்டிபோலியா

டினோஸ்போரியா என்பது வில் போல வளைதல் என்று கிரேக்க மொழியில் பொருள் தருகிறது. கார்டிபோலியா என்பது இதயம் வடிவமைப்பில் உள்ள இலை என்று அர்த்தமாகும். இந்தியாவில் பரவலாகக் காணப்படும் நூல் போல வளரும் கொடி வகையைச் சார்ந்தது சீந்தில் கொடி. சீந்தில் கொடி கற்ப மூலிகைகளில் ஒன்று. மனிதன் நீண்ட நாட்கள் உயிர் வாழ உதவும் மூலிகைகள் என்று நெல்லி மற்றும் பொன்னாங்கண்ணியினைச் சொல்லலாம்.

குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க சீந்தில் கொடியினை சிறு துண்டு அளவு எடுத்துக் கொண்டு எண்ணெயில் பொரித்து, ஆறிய பின்னர் அந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவார்கள். முற்றிய சீந்தில் கொடியில் இருந்து சீந்தில் சூரணம் எனும் மருந்தைத் தயாரிக்கிறார்கள். கீழ்வாத மூட்டு வலிக்கு இதன் சாறு மருந்தாகப் பயன்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் காய்ச்சல், மஞ்சள் காமாலை மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் தடைகளை குணப்படுத்துகிறது.

சீந்தில் கொடியின் வேர், தண்டு ,இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கசாயமானது தயாரிக்கப்படுகிறது. சிறுநீரகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு இது மருந்தாகிறது. சீந்தில் கொடியானது இனிப்பு, கசப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதன் வேர் மற்றும் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் சூரணம் நீண்ட கால வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள பழங்குடி மற்றும் ஆதிவாசியினர் கையாளும் மருத்துவ மூலிகையாகும்.

ஆகாசக் கருடன், ஆகாச வல்லி, அமிர்த வல்லி, அமுதை, அமிர்தை, அமரை, சீந்தில், சிவேதை, குணலி, குண்டலி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் ஆதிவாசியினர் மற்றும் பழங்குடியினர் சீந்தில் கொடியின் மூலம் பல்வேறு நோய்களுக்கு பலன் பெறுகின்றனர்.

சீந்தில் கொடியின் தண்டு மற்றும் பட்கடியாவின் வேரையும் பயன்ப்டுத்தி மை போல அரைக்கப்பட்ட மருந்தை உத்திரபிரதேச மாநிலத்தில், வாரணாசி அருகே வசிக்கும் பைகா என்ற பழங்குடியினர் தொடர்ந்து மூன்று நாட்கள் உட்கொண்டு காய்ச்சலை குணப்படுத்துகின்றனர். மும்பை மற்றும் அதன் அருகில் உள்ள கடற்கரைப் பகுதி மீனவர்களும் சீந்தில் கொடியினால் செய்யப்படும் மருந்தின் மூலம் நீண்ட நாள் மலப்போக்கு, மலக் கடுப்பு, மஞ்சள் காமாலை மற்றும் காய்ச்சலுக்கு குணம் பெறுகின்றனர்.

வடக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள கேத் பிரம்மா பகுதியில் உள்ள மலை வாழ் மக்கள், சீந்தில் கொடியினை தங்கள் அன்றாட உணவாகவோ, மருந்தாகவோ உட்கொள்கின்றனர். அவர்கள் சீந்தில் கொடி வேர் மற்றும் தண்டுகளை உலர்த்தி பொடி செய்து, அதனை பசுவின் பால் கலந்து உட்கொள்கிறார்கள். இதன் மூலம் புற்று நோயைக் குணப்படுத்த இயலுகிறது. இதன் வேரினைப் பயன்படுத்தித் தயாரிக்கும் கஷாயம் மலக் கடுப்பு மற்றும் மலப்போக்கு இரண்டையும் குணப்படுத்துகிறது.

வயதில் முதிர்ந்த சீந்தில் கொடியின் தண்டுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கஷாயம் நாள்பட்ட காய்ச்சலைக் குணப்படுத்துகிறது. இதே போல ஜம்மு காஷ்மிர் மற்றும் இராஜஸ்தான் பகுதிகளில் பிக்வாடா மக்கள் கஷாயத்தை காய்ச்சல் போக்க  உள்மருந்தாக பயன்படுத்துகின்றனர். வேரின் சாறை எடுத்து காய்ச்சலைக் குணப்படுத்த ஒரிசா மாநில புவனேஸ்வரம் நகரின் பூர்வீக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

மகாராஷ்ட்டிர மாநில தாகானு மலைப் பிரதேச பழங்குடி மக்கள் இதன் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயத்தை மூன்று அல்லது நான்கு கிராம் அளவு எடுத்து குளிர்ந்த தண்ணீரில் அல்லது சூடான நீருடன் கலந்து வெறும் வயிற்று உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சியினைப் போக்கும் டானிக்காக அருந்துகின்றனர்.

உடல் எரிச்சலைக் குணப்படுத்த சீந்தில் கொடி மற்றும் ப்ராஸிக்கா கேம்பஸ்ட்ரிஸ் மூலிகை இலைகளின் சாறு எடுத்து அல்லது இலைகளை அரைத்த அதன் கலவையைப் பயன்படுத்துகின்றனர். கடுக்காய், சீந்தில் பொடி, ஓமம் சம அளவு எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து தினசரி காலை வெறும் வயிற்றில் அருந்த சளி, இருமல் குணமாகிறது.

மேற்கூறிய மூன்று மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட கஷாயமானது சுமார் அரை லிட்டர் அளவு எடுத்து சளி, இருமலைக் குணப்படுத்த ஹரியானா மாநில பழங்குடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது. காது வலிக்கு இரண்டு சொட்டு சீந்தில் கொடியின் இலைச் சாறு இரண்டு காதுகளிலும் இட குணம் கிடைக்கிறது.


Spread the love