துளசியின் குடும்பத்தை சேர்ந்த திருநீற்றுப்பச்சை, துளசியை போலவே, நம் நாட்டிலும், ஐரோப்பாவின் சில தேசங்களிலும் வணங்கப்படும் புனிதமான செடி.
இதன் தாவரவியல் பெயர் – Ocimum Bacilicum
குடும்பம் – Labiatae
இந்தி – சப்ஜா, பாபு துளசி, சமஸ்கிருதம் – மன்ஜருக்கி, ஆங்கிலம் – Sweet Basil
தமிழில் இதர பெயர்கள் – உருத்திரச்சடை, பச்சை சப்ஜா
தாவர விவரங்கள்
இந்த தாவரம் பிறந்தது இந்தியா, தென்கிழக்கு ஆசியா, வடகிழக்கு ஆப்ரிக்கா மற்றும் சூடான் தேசங்களாகும். தற்போது இந்தியா முழுவதும் பயிராகிறது.
திருநீற்றுப் பச்சை 50 செ.மீ. உயரம் வரை வளரும். சதுரமான தண்டுடன் செடியின் மேல் பாகத்தில் கிளைகளுடன் இருக்கும். பளிச்சென்று இருக்கும் பச்சை நிற இலைகள், நறுமணமுடையவை. பூக்கள் நீண்ட கதிரில் சுற்றி சுற்றி வட்டமான அடுக்குகள் போன்று அமைந்திருக்கும்.
பயன்படும் பாகங்கள்
செடியின் எல்லா பாகங்களும் (சமூலம்)
குணங்கள் / பயன்கள்
1. இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயிலிருந்து கிடைக்கும் கற்பூரம் போன்ற பொருள் ஒரு நல்ல ஆன்டி – செப்டிக். இலைகளை நசுக்கி காயங்களுக்கு போடலாம். இதன் அடிப்படை எண்ணெய் சர்ம வியாதிகளுக்கு நல்லது. தோலில் தடவ, எக்சிமா, தோலரிப்பு குறையும்.
2. இதன் விதைகளை, தண்ணீருடன் சேர்த்து எடுக்கப்படும் சாறு ரத்தத்தை சுத்திகரிக்கும். சிறு அளவில் ஒரு வாரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளான சூதக கட்டு (Amenorrhoea), வலியுள்ள மாதவிடாய் (Dysmennorhoea) இதன் இலைகளின் சாற்றை குடித்து வர கோளாறுகள் குறையும்.
4. துரிதஸ்தலிதத்திற்கு – திருநீற்றுப் பச்சையின் விதைகளை ஒரு கிராம் அளவில் படுக்கு முன் எடுத்துக் கொண்டால், உடலுறவின் போது ஏற்படும் “விந்து முந்துதல்” (Pre – mature ejaculation) கோளாறை தவிர்க்கலாம்.
5. தேள், பாம்பு கடிகளுக்கு – இதன் வேர்களை நீரில் அரைத்து கடிவாயில் தடவ, குணம் தெரியும்.
6. வயிற்றை சேர்ந்த நோய்கள், சீதபேதி, மேக நோய்கள் தீரும்.