இயற்கையின் நன்கொடை இளநீர்

Spread the love

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு தமிழக மக்களிடையே ஒரு சிறந்த விழிப்புணர்வு உருவாகி இருக்கிறது. அது அந்நிய குளிர்பானங்களை புறக்கணிப்பது என்பதுதான். வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று தமிழக வணிகர்களும் ஒட்டுமொத்தமாய் அறிவித்திருக்கிறார்கள். இதனால் விற்பனை படுத்துவிட்டது என்று வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் ‘குய்யோ முய்யோ’ என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள்.

கோக், பெப்ஸி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை. இது தெரிந்தும் விளம்பர கவர்ச்சியால் உந்தப்பட்டு பலர், வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். அதனால் பல உடல் நலக்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.

ஆனால். இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம். இயற்கை நமக்கு தந்த நன்கொடை. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று, பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது. இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..

பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

இளநீர்இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமான இளநீர் வெப்பத்தை தணித்து, ஜீரண சக்தியை அளிக்கும். இளநீர் குடித்தால் இரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.

கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

ஆனால், இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் தூங்கி எழுந்தவுடன் வயிறு சற்று சூடாக இருப்பதால், இளநீரில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்களை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே இளநீரை சாப்பிடவேண்டும். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதைவிட, உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைக் குடிப்பதே ஆரோக்கியத்திற்கு சிறந்த வழி.


Spread the love