முளைகட்டிய தானியங்கள்!

Spread the love

முளைகட்டிய தானியங்களை காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் சாப்பிடலாம். ஆனால், ஏதாவது ஒருவேளைதான் சாப்பிட வேண்டும். காலை உணவு எனில், 50 &- 65 கிராம், மதிய உணவு எனில்  70 &- 80 கிராம், இரவு உணவு எனில்  70 -& 75 கிராம் என்கிற அளவில் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உணவில் 50-:50, அதாவது பாதி அளவு சாப்பாடு, பாதி அளவு முளைகட்டிய தானியம் இருக்குமாறு சாப்பிடலாம். இந்த அளவுகள் குறையலாம்… அதிகமாகக் கூடாது. மதியம், இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களைச் சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது பாதி அளவு வேகவைக்காமலும், பாதி அளவு வேகவைத்தும் சாப்பிடலாம்.

தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டச் செய்வதால், அவற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, வைட்டமின் சி சத்து அதிகமாகி இருக்கும். பொதுவாகவே, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அமிலம் அதிகமாகச் சுரக்கும். அப்போது முளைகட்டிய தானியத்தைச் சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனவே, இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதேனும் ஒரு உணவுடன் வேகவைக்காத முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடலாம். ஒருவேளை காலையில் முளைகட்டிய தானியங்களை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை வேகவைத்துச் சாப்பிடுவதே நல்லது.

முளைகட்டிய தானியங்களை மட்டுமே முழு உணவாகக் கருதக் கூடாது. ஏனெனில், முளைகட்டிய தானியத்தில் புரோட்டீன், வைட்டமின் சத்துகள் கிடைத்தாலும், நம் உடலுக்கு அவை மட்டுமே போதாது. கார்போ ஹைட்ரேட், மினரல் போன்ற சத்துகளும் சமச்சீர் உணவுக்கு அவசியம். முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அதனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதைத் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5&10 வயதுக் குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். 8 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லா வகை முளைகட்டிய தானியங்களையும் சாப்பிடலாம்.

தினமும் ஒரே வகை முளைகட்டிய தானியத்தை சாப்பிடுவது தவறு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானிய வகை உட்கொள்வதே சிறந்தது. நான்கைந்து தானியங்களை ஒன்றாக முளை கட்டச் செய்து சாப்பிடுவதும் நன்று. குறிப்பாக முளைகட்டிய தானியங்களை இட்லி, தோசை செய்யும்போது மாவில் கலக்கலாம். அதேபோல் சாதத்தில், குழம்பில், பொரியலில் கலந்தும் சாப்பிடலாம். அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் ஆகியோர் முளைகட்டிய தானியங்களை வேகவைத்துதான் சாப்பிட வேண்டும்.

வைட்டமின் சி, வைட்டமின் டி சத்துகள் அதிகமாகக் கிடைக்கும் முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். இரும்பு, கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகளும் கிடைக்கும்.


Spread the love
error: Content is protected !!