உடலுக்கு வலுவும் திறனும் அளிக்கின்ற பல இயற்கைத் தாவரங்களில் ஒன்று சோயாபீன்ஸ். இதை ஒரு “எலும்பில்லாத புலால் உணவு” என்று சில ஆசிய நாடுகளில் அழைக்கின்றனர்.அந்த அளவு புரதம் செறிந்தது சோயா பீன்ஸ். இதில் 50 சதவிகிதம் புரதமும் 25 சதவிகிதம் மாவுச்சத்தும் 25 சதவிகிதம் கொழுப்புச் சத்தும் உள்ளது.தாவர உணவை முதன்மையாகக் கொண்டுள்ள நம் நாட்டில் சோயா பீன்ஸை எத்தனையோ வழிகளில் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.
இது இளையவர்க்கும் முதியவர்க்கும் ஏற்ற உணவு.இதய நோய்க்காரருக்குக் கூட இதமான உணவு.ஒரு கிலோ சோயா பீன்ஸிலிருந்து 10 கிலோ சோயா பால் பெற முடியும். இது உடலுக்கு ஊட்டமளித்து புத்துணர்ச்சி தரக்கூடியது.பச்சை சோயா பயறிலிருந்து எடுக்கும் பால் தூய்மையானது. சத்து நிரம்பியது.இதை அப்படியே குடித்தால் செரிமானக் குறைபாடுகள் உண்டாகலாம்.எனவே இதில் சரி பங்கு தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.
சோயா பாலில் விட்டமின் ஏ, பி மற்றும் டி உள்ளன. முளைவிட்ட சோயாவில் விட்டமின் சி உள்ளது. மேலும் இதில் பல தரப்பட்ட அமினோ அமிலங்களும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் அதிகமான பாஸ்பேட்டுகள் காணப்படுவதால் இதை நரம்புகள் தொடர்புடைய நோய் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம் என்கின்றனர்.100 கிராம் சோயாவில் 460 கலோரி சக்தி உள்ளது.100 கிராம் கோதுமை நமக்குத் தருவது 365 கலோரி மட்டுமே.
நிலக்கடலைப் பால்
சுமார் 40லிருந்து 45 சதவிகிதம் வரை கொழுப்புச் சத்து கொண்ட நிலக்கடலை, ஒரு சிறந்த உணவுப் பொருளாகும்.இதில் 26 சதவிகிதம் மாவுச்சத்தும் 25 சதவிகிதம் புரதமும் இருக்கிறது.தவிர விட்டமின் ஏ யும், பி யும் நிறைந்திருக்கிறது. நிலக்கடலையை முளைவிட வைத்தோ அல்லது தண்ணீரில் ஊற வைத்தோ பால் தயாரிக்கலாம். 100 கிராம் கடலையில் இருந்து சுமார் 1 லிட்டர் பால் பெற முடியும்.புரதச் சத்து மிகுந்த நிலக்கடலைப் பால் எல்லோருக்கும் எளிதாகச் சேரக் கூடியது.பசும்பாலைப் போல் இதைச் சுட வைக்கத் தேவையில்லை. தண்ணீர் கலந்து இந்தப் பாலை அப்படியே பயன்படுத்தலாம்.
கோதுமைப் பால்
சுத்தமான கோதுமையை எடுத்து 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்திருந்து, பின்னர் 48 மணி நேரம் ஈரத்துணியில் கட்டி வைத்தால் கோதுமை முளைவிட்டு வெளியே வரும். மூன்றாவது நாள் முளைத்து விடும்.இதை எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துத் துணியில் பிழிந்தால் கெட்டியான கோதுமைப்பால் கிடைக்கும்.ஒரு கைப்பிடி கோதுமை முளையிலிருந்து எடுத்த பால், ஒருவேளை உணவிற்குப் போதுமானது.சுவையை விரும்புவோர் சிறிது தேனோ, நாட்டுச்சர்க்கரையோ சேர்த்துக் கொள்ளலாம்.இதே போன்று நெல் பாலும் தயாரிக்கலாம்.
தேங்காய்ப் பால்
தேங்காய்ப்பால் ஒரு சத்து நிறைந்த உணவு. அரை மூடி தேங்காயைத் துருவி எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து விழுது போல் எடுக்கவும்.ஏறக்குறைய 1 லிட்டர் அளவுக்கு பால் வருமாறு தண்ணீர் விட்டுக் கலந்து எடுக்கவும்.தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளலாம்.இந்தப் பால் பசும்பால் அளவிற்குக் கெட்டியாக இருக்கும்.இதைச் சூடு செய்யாமல் அப்படியே பயன்படுத்தலாம்.ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றில் ஊற்றிச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.வளரும் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் இது சத்துமிக்க உணவாகும்.
தேங்காய் பாலில் கொழுப்பு அதிகம் இருக்கிறதென்று கூறப்படுவதால் 30 வயதுக்கு மேற்பட்டோர் இதைத் தவிர்ப்பது நல்லது. ஒரு நாளுக்கு ஒரு கப் பால் போதுமானது. பொதுவாக தேங்காய்ப்பால் குடிப்பதை விட தேங்காய் தின்பது நல்லது.
சத்யா