உடலுக்கு உற்ற தானியம் கேழ்வரகு

Spread the love

சென்ற நூற்றாண்டு வரை, அதாவது இந்தியா சுதந்திரமடைந்து 25, 30 ஆண்டுகள் வரை பெரும்பலான கிராம மக்களின் முக்கிய உணவாக கேழ்வரகு, கம்பு இருந்து வந்துள்ளது. உடலுக்குச் சிறந்த ஆரோக்கியம் தருவது மட்டுமின்றி, கிராமத்து மக்களின் குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்களில் அவர்கள் ஈடுபடும் பொழுது உடல் வலி, அசதியைப் போக்குவதில் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றும் கூட இந்தியாவில் வளர்ச்சியடையாத கிராமங்களில், மலைவாழ் மக்களின் முக்கியமான உணவு கேழ்வரகும், கம்பும் தான். இத்தகைய அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமான கேழ்வரகு, இன்று அரிதாக கிடைப்பதாகவும், விலை அதிகமாகவும் உள்ள ஒன்றாக அமைந்துள்ளது. அரிசியை விட அதிக சத்தும், சிறு தானியங்களிலேயே அதிக கால்சியமும், பாஸ்பரஸ் சத்துக்களும் கேழ்வரகில் தான் உள்ளது.

கேழ்வரகில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதச் சத்து, நார்ச்சத்து மற்றும் இதர தாதுப் பொருட்களும் உள்ளன. முதியவர்களுக்கு முதுமைக் காலத்தில் ஏற்படும் கால்சியம் சத்துக் குறைபாட்டை, மாதவிடாய் காலம் நின்ற பின்பு பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் தீவிரமடைவதைத் தடுக்கவும், இரத்தத்தில் கால்சியம் அளவினை தக்க வைத்துக் கொள்ளவும் கால்சியம் சத்து அவசியமாகிறது. இதனை கேழ்வரகு மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளை சேர்த்துக் கொள்வதால் சரி செய்யலாம். கேழ்வரகில் குறைந்த அளவு கொழுப்புச் சத்து மற்றும் அன்சாட்டுரேடட் கொழுப்பு என்ற நிறைவுறா கொழுப்புச் சத்தும் குறைந்த அளவில் உள்ளது.

கேழ்வரகை யார் சாப்பிடலாம்?

கேழ்வரகு மிகவும் சத்துக்கள் அடங்கிய உணவாக இருந்தாலும் சிறுநீரகப் பாதிப்பு, கல் அடைப்பு உள்ளவர்கள் மட்டும் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது. கேழ்வரகை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் அதிக அளவில் உற்பத்தியாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு

நீரிழிவு நோயளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த செரிமானத்தைக் குறைக்கப் பயன்படும் தாவரவகை இரசாயனக் கலவைகள் அதிகம் உள்ளன. இதனால் நீரிழிவு நோயாளிகள் உணவில் கேழ்வரகை அதிகம் பயன்படுத்தலாம்.

இரத்த அழுத்தம், இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு

கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோய் குணமாகும். கேழ்வரகில் லெசித்தின், மெத்தியோனைன் என்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இவை கல்லீரலில் காணப்படும் அதிகப் படியான கொழுப்பை வெளியேற்றி விடுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. நல்ல கொழுப்பின் அளவைச் சரி செய்வதால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் விகிதம் சமநிலைப்படுத்த உதவுகிறது.

உடல் பருமன் நோயாளிகளுக்குச் சிறந்த உணவு

கேழ்வரகில் நார்ச்சத்து, டிரிப்டோஃபைன் மற்றும் சில அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. இவை பசி உணர்வைக் குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க, உடல் பருமன் குறைய உதவுகிறது. மெதுவாக செரிமானம் ஆகும் தன்மை உள்ளதால் அதிக கலோரிகள் உள்ள உணவை தடுக்க இயலுகிறது. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து சிறிதளவு உணவு உட்கொண்டாலும், வயிறு நிரம்பிய உணர்வை, திருப்தியைத் தந்து விடுவதால் உணவு அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து உடல் பருமன் குறைய உதவுகிறது.

தாய்மார்களின் சிறப்பு உணவு கேழ்வரகு

தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த பின்பு சரியாக பால் சுரக்கவில்லையெனில், அவர்கள் தங்கள் உணவுப் பட்டியலில் கேழ்வரகை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறுமாத குழந்தை முதல் கேழ்வரகை மாவாக்கி கூழ் செய்து கொடுக்க இயலும். கேழ்வரகில் உள்ள ‘H’ காம்ப்ளெக்ஸ், வைட்டமின்கள், தாது உப்புகள் அனைத்தும் காணப்படுவதால் எளிதில் செரிமானம் அடையக் கூடிய குழந்தைகள் உணவாகவும் உள்ளது. வயதானவர்களும், செரிமானக் கோளாறு உள்ளவர்களும் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறு குழந்தைகளுக்கு கேழ்வரகு உணவு தயாரித்து வழங்குவதற்கு கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தலாம். சிறு கற்கள், மண், கசடுகளின்றி சுத்தம் செய்யப்பட்ட கேழ்வரகை நீர்விட்டு ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். பிறகு இதனை சிறிது தண்ணீர் விட்டும் அரைத்துக் கொண்டு, மெல்லிய பருத்தித் துணி ஒன்றின் உதவியால் பாலாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்த பாலை அடுப்பில் வைத்து காய்ச்சி கூழ் பதத்தில் எடுத்து குழந்தைகளுக்கு (சுமார் 6 மாதம் முஹ்டல் 3 வயது வரை) தினசரி ஓரிரு வேளை உட்கொள்ளச் செய்யலாம். இதே முறையில் வாந்தி, பேதி, அலர்ஜி உள்ளவர்களும் கூழ் தயார் செய்து சாப்பிடலாம். கோதுமையில் இருக்கும் க்ளூட்டன் என்னும் பசை போன்ற புரதமானது கேழ்வரகில் இல்லை என்பதால் க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகு உணவை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், சில சிறப்பு அம்சங்கள்

1.உடலை ஓய்வு பெறச் செய்கிறது.

2.கவலை, மன அழுத்தம், மன இறுக்கம் மற்றும் தூக்கம் வராமல், ஒரு பக்கத் தலைவலியினால் அவதிப் படுபவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது.

3.இதில் உள்ள இரும்புச் சத்தின் காரணமாக, இரத்தச் சோகை நோயாளிகளும் பயன்படுத்தலாம்.

4.உடல் செயல்பாடுகள் சிரமமின்றி நடைபெறவும், சேதமடைந்த திசுக்கள், தசை நார்களை சரி செய்யவும் பயன்படுகிறது.

கேழ்வரகினால் செய்யப்படும் சத்துமிக்க மாலை நேரப் பலகாரம்

கேழ்வரகு-வெந்தயக் கீரை பக்கோடா

தேவையான பொருட்கள்

கேழ்வரகு – ஒரு கோப்பை

வெந்தயக் கீரை – ஒரு கோப்பை

பெரிய வெங்காயம் – 1

(வெந்தயக் கீரைக்கு பதிலாக முருங்கைக் கீரையும் பயன்படுத்தலாம். சிறிய வெங்காயமும் பயன்படுத்தலாம். சிறிய வெங்காயம் எனில் 5 முதல் 10 வரை)

இஞ்சி – சிறு துண்டு:

பெருஞ்சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு – தேவைக்கு

கடலை எண்ணெய் – பொரிப்பதற்கு ஏற்ற அளவு

செய்முறை

வெந்தயக் கீரையை நீர் விட்டு நன்றாக அலசி நீரை வெளியேற்றி விடவும். வெந்தயக் கீரை அதிக கசப்புத் தன்மை தரும் என்பதால், கீரையை பொடிதாக நறுக்காமல் முழுதாகவே பகோடா தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிய/பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அது போல இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையும் நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் கேழ்வரகு, வெந்தயக் கீரை மற்றும் இதர அனைத்தையும் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு பிசைந்து கொள்ளவும். மேற்கூறிய பிசைந்த மாவானது, மாவைக் கிள்ளிப் போட ஏதுவாக இருக்கும் வண்ணம் கெட்டியாக இருந்தால் போதுமானது.

அடுப்பில் வாணலிச் சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் மேற்கூறிய மாவுக் கலவையை கிள்ளிப் போட்டு எண்ணெயில் விட வேண்டும். சல்லடைக் கரண்டி ஒன்றின் மூலம் இரண்டு முறை திருப்பிப் போட்டு, வெந்தவுடன் எடுத்து எண்ணெயினை வடிகட்டிக் கொள்ளவும்.

மேற்கூறிய பக்கோடா மாலை வேளையில் நொறுக்குத் தீவனமாக சாப்பிடுவதற்கும், சத்தான உணவு கொண்டதாகவும் அமையும்.


Spread the love