எலும்புக்குக் கேழ்வரகு கண்ணுக்கு திணை!

Spread the love

“என்ன பாட்டி இது கலர் கலரா தோசை பண்ணுவேனு பார்த்தா, கருப்பு கலர்ல இருக்கு. இதை எப்படி சாப்பிடுவது?

“இது கம்பு சோள தோசை! அம்புட்டும் ஆரோக்கியம் பொண்ணு”.

இப்படியே எதையாவது சொல்லிச் சாப்பிட வைச்சிடு”

அம்மாடி அரிசியைக் காட்டிலும் கம்பு தானியத்தில் இரும்பும் கால்சியமும் பலமடங்கு அதிகம். நார்ச்சத்தும் இருக்கு வைட்டமின், மினரல் டானிக்கும் கூட இருக்கு. பாட்டி சத்தானதாத்தான் தருவேன்னு உனக்குத் தெரியும்ல!”

“அது தெரியும்… நீ கம்பு மட்டும் சொல்லலியே… கூட ஏதோ சோளமும் சொன்னியே?”

“சோளம் சேர்த்துச் செய்யறப்போ என்னை விடாமலேயே தோசை மொறு மொறுவென்று வரும். அதோட, சோளத்தில் உள்ள புரதம், சாதா தோசையவே ஊட்ட தோசையா மாற்றிவிடும்.”

நான்தான் அடிக்கடி பீச்ல சுட்ட சோளம் சாப்பிடுகிறேனே…”.

அடியே அறிவாளி.. அது மக்காச்சோளம். வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து விற்கிறார்கள். நான் சொல்லுறது வெள்ளைச் சிறு சோளம். இப்பல்லாம் யாரு அதைச் சாப்பிடறா? மாட்டுத் தீவனத்துக்குதான் வாங்குறதே?

அதுதான் எனக்கு தோசை பண்ணிக் கொடுத்து இருக்கியா?”

“உன் நக்கல் இருக்கு பாரு… சோளம் கம்பு எல்லாமே வரம் இல்லாமல், பூச்சிக்கொல்லி விஷம் இல்லாமல் விளையக்கூடியது. ஆர்கானிக்னு சொல்லி வாங்குறீங்கல்ல… இதெல்லாம் தான் முழு ஆர்கானிக்”.

“சரி பாட்டி, டென்ஷன் ஆகாத. நான் சாப்பிடுறேன். கம்பு சோளத்தை தோசையா மட்டும் தான் சாப்பிடனுமா. வெரைட்டியா வேற எதுவும் பண்ண முடியாதா?”

“அதெல்லாம் அருமையாய் பண்ணலாம். சோளப் பணியாரமும், கம்பங்கூழும் தான் நாளைக்கு காலையில உனக்கு டிபன் ஓகே வா..?

“கூழா… சும்மா கேட்டா உடனே ஆப்பு வைக்கிற பாரு”.

“போன வாரம் ஹோட்டல்ல சாப்பிடுறதுக்கு முன்னாடி சப்புக் கொட்டி குடிச்சியே, “ஸ்வீட்கார்ன் சூப்” அந்த இங்கிலீஷ் கூழ் இறங்கும்.. தமிழ்க் கூழ் அலுக்குதாக்கும்?”

“வரிக்கு வரி என்னை அடிச்சா எப்படி? ரைட் விடு.. கூழுக்கு வடகம் பொரிச்சுத் தருவியா?”

“வடகம்லாம் கிடையாது, பிரண்டைத் துவையல் தான். எலும்புக்கு வலிமையான பிரண்டை, வயிற்றுப்புண்ணையும் போக்கும்.!“ ஏதோ டேஸ்டா கொடுத்தா சரிதான்” டேஸ்ட் இல்லாம எப்படி?

பிரண்டையை வதக்கி கொஞ்சமாய் உப்பு, புளி, வரமிளகாய் சேர்த்து அரைத்து கூழுக்கும் மோர்சோறுக்கும் சாப்பிட்டுப்பாரு. பிரண்டைக்கு பிரண்ட் ஆயிடுவே.”

“எவ்வளவு நேரம் வெறும் தோசையை சாப்பிட? தொட்டுக்க ஏதாவது குடு பாட்டி”.

“இந்த பக்கத்தில் தான் கடலை சட்னி வச்சிருக்கேன் பாரு. எடுத்துக்கோ”..

“ஓ இதுதானா? இதை எப்படி பண்றது பாட்டி?”

“நிலக்கடலையை வறுத்து புளி சேர்த்து, கொஞ்சம் தேங்காயும், வரமிளகாயும் வறுத்து சட்னி அரைச்சு சாப்பிட்டா.. அத்தனை டேஸ்ட். இந்த சட்னி மெலிந்த உடல் பருக்க உதவும். சின்னப் பிள்ளைகளுக்கு நல்லது. பிரண்டை, கடலை மாதிரியே வல்லாரை, தூதுவளை இதையெல்லாம் வதக்கி சட்னி செய்து சாப்பிடலாம்”.

“சிறு தானியங்களிலே கம்பு, சோளம் தவிர என்னல்லாம் காலை உணவுக்கு நல்லது பாட்டி?

“கேழ்வரகு தோசை, ரொட்டி, தினை அரிசி வெண்பொங்கல் பண்ணலாம். கேழ்வரகு எலும்புக்கும் திணை அரிசி கண்ணுக்கும் நல்லது. தினை மஞ்சளா இருப்பதற்கு காரணம், அதுல இருக்கிற பீட்டா கரோட்டின்கள் தான். கூடவே பொங்கலில் சேர்க்கிற மஞ்சளும், மிளகும் நோய் எதிர்ப்பாற்றலைத் தரக்கூடியது. சிறுதானியங்களை காலையில் சாப்பிடுவது. ரொம்ப நேரம் பசியை காக்கும். இட்லியையும் புட்டையும் வெள்ளை அரிசியில் செய்யாமல், பாலிஷ் போடாத சிறுதானியத்தில் சாப்பிடனும்.

“சரி என்ன கையில் இஞ்சித்துண்டை வெச்சிருக்க?”

“காலையில் ரெண்டு துண்டு, இஞ்சி, மத்தியானம் இரண்டு டீஸ்பூன் சுக்குத்தூள், சாயங்காலம் அரை டீஸ்பூன் கடுக்காய்த்தூள் தொடர்ந்து சாப்பிட்டா, மலச்சிக்கல் தொந்தரவு இருக்காது.  நேரத்துக்குப் பசிக்கும். காலை பித்தக் கிறுகிறுப்பு வராது. இளமையாக, நோய் வராமல் இருக்கலாம்”.

அடுத்தது என்ன தெரிந்து கொள்ளலாம். காத்திருந்து படியுங்கள்.

-தொடரும்…

ராஜேஸ்வரி ஸ்ரீதர்


Spread the love