உடல் பலம் பெற பிராணாயாமம்

Spread the love

பிராணாயாமத்தின் அனுகூலங்கள்

1. பிராணாயாமத்தால் அதிக ‘பிராணனை’ (ஆக்சிஜன்) காற்று மண்டலத்திலிருந்து உடலுக்குள் கொண்டு வர முடியும். இந்த பிராண சக்தியை மூளையிலும், இதர நரம்பு மண்டல பாகங்களிலும் சேமித்து வைத்து கொள்வதால் உடல் பலம் கூடும்.

2. பிராணாயாமத்தால் பிராணனை கட்டுப் படுத்தும் போது, மனமும் கட்டுப்படுத்த ப்படுகிறது. மனம், பிராணன், விந்து இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பிரமச்சரியத்தால் விந்து சக்தி கட்டுப்படுத்தப் பட்டால், மனமும், பிராணனும், கூடவே கட்டுக்குள் வரும்.

3. பிராணாயாமத்தால் நாடிகள் (நரம்பு நாளங்கள்) ஆக்சிஜனால் சுத்தமாகின்றன. உடல், கண்கள் தேஜஸ்ஸுடன் பிரகாசிக்கும்.

4. ஜீரண சக்தி மேம்படுகிறது.

5. உடலின் எல்லா பாகங்களுக்கும் பிராணவாயு நன்கு சேர்வதால் உடல் அவயங்கள் திறமையாக செயல்படுகின்றன.

6. தொடர்ந்து பிராணாயாமம் செய்பவர்களை வியாதிகள் அண்டாது. நல்ல தூக்கம் வரும். பிராணாயாமம் பல வியாதிகளை குணப்படுத்தும் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நுரையீரல் வியாதிகள் குணமாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாகும். ஈசினோஃபீலியா குறையும்.

பிராணாயாமம் செய்யும் முன் செய்ய வேண்டியவை

1. காற்றோட்டமுள்ள, பிறரால் தொந்தரவில்லாத இடத்தை தேர்ந்தெடுக்கவும்.

2. பத்மாசனம் (அ) வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்ய வேண்டும்.

3. வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். எனவே காலை நேரம் (காலை உணவுக்கு முன்) சிறந்தது. மாலையில் செய்வதாக இருந்தால் சாப்பிட்ட பின் 5 மணி நேரம் கழித்து செய்யவும்.

4. யோகா செய்பவர்கள் தவறாமல் தியானம் செய்ய வேண்டும். அதிகாலையில் எழுந்தவுடன், முதலில் தியானம் செய்து, பிறகு யோகாசனங்களை முடித்து அதன் பிறகு பிராணாயமம் செய்ய வேண்டும். தியானம் செய்ய, 15 நிமிடங்களுக்கு மேல் நேரமில்லாத வர்கள், முதலில் யோகாசனங்கள், பிராணாயமம், கடைசியில் தியானம் என்ற வரிசையில் செய்யலாம். பிராணாயமம், தியானம் இவற்றுக்கு பிறகு நரம்புகள் சமன் அடைந்திருக்கும். எனவே இவற்றுக்கு பின் யோகாசனங்களை செய்ய வேண்டாம்.

5. குறைந்த பட்சம் 15 நிமிடமாவது தினமும் பிராணாயாமம் செய்ய வேண்டும்.

6. எவ்வளவு நேரம் மூச்சை அடக்குவது (அ) உள்ளிழுப்பது (அ) வெளியிடுவது என்பதை குரு விளக்குவார். அந்த நேரத்தை சரியாக கணிக்க கடிகாரம் (அ) எண்ணுவது போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.

7. கடைசியாக ஆனால் முக்கியமான அறிவுரை – பிராணாயாமத்தை நல்ல யோகா குருவிடம் கற்ற பின்னரே செய்ய வேண்டும்.

இரு உதாரண பிராணாயாம முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. உங்கள்

யோகா குருவின் அனுமதியுடன் இவற்றை செய்யவும்.

பிராணாயாமம்

செய்முறை

பத்மாசனம் அல்லது முதுகுத் தண்டு நேராக அமையும் ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி, இடது நாசியினால் மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின் வலது மோதிர விரலாலும், சுண்டு விரலாலும் இடது நாசியை அடைத்து வலது நாசியைத் திறந்து மெதுவாக மூச்சை வெளியே விடவும். இது போல் வலது நாசியில் மூச்சை விட்ட உடனே, அதே நாசியினால் மூச்சை உள்ளே இழுத்து, வலது நாசியை மூடி, இடது நாசியினால் மூச்சை வெளியே மெதுவாக விடவும்.

பிரம்மரி பிராணாயாமம்

செய்முறை

பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு கண்களை மூடி இரு கைகளை பக்கவாட்டில் தோள்பட்டைக்கு இணையாய் உயர்த்தி அந்தந்த பக்க காதுகளை ஆள்காட்டி விரல்களால் அடைத்து; இரு மூக்காலும் மெதுவாய் மூச்சை உள்ளே இழுத்து (தொண்டைக் குழியில் ‘ம்’ என்ற ஒலி எழுமாறு) அதே சமயம் விசுத்தி சக்கரத்தை நினைத்து உள்ளே இழுத்தது போல் மெதுவாக மூச்சை வெளியே விடவும். இது ஓர் சுற்றாகும். அல்லது ஓர் முறை ஆகும். இதே போல் 10 முறை வரை செய்யலாம். இச்சப்தம் தேனீக்கள் ரீங்கரிப்பது போல் இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.


Spread the love