நோயற்ற வாழ்வுக்கு விளையாட்டு! – 1

Spread the love

வாழ்க்கை வாழ்வதற்கே! எனும் முழக்கம் கேட்கிறது. ஆனால் எத்தகைய வாழ்க்கை வாழ்வதற்கு? எனும் கேள்வியை கேட்போமானால், பலர் வளமாக வாழ்வதற்கெனப் பதில் கூறுவர். ஆயினும் நலமாக வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். எத்தனை வளம் இருந்தாலும் உடல் நலம் இல்லையென்றால் என்ன பயன்? நோயுடைய ஒருவன் எவ்வளவு செல்வத்தைப் பெற்றிருந்து தான் என்ன பயன்? எனவே, நலமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வளமான வாழ்வை அமைத்தால் பெரும் பயன் கிடைக்குமல்லவா?
மனிதன் உடல், உள்ளம், உயிர் எனும் ஆன்மா ஆகிய மூன்றினால் உருவாக்கப்பட்டுள்ளான். உடல் நலம் மனிதனுக்கு முதல் தேவை. அடுத்தது மனநலம். மன நிறைவே மனநலமாகும். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்னும் திருமந்திரத்தால் இந்த உண்மையை அறியலாம்.
கொடிது கொடிது இளமையில் வறுமை என்பர். வறுமை என்ற சொல், பொருள் வறுமையைக் குறித்து நிற்காமல் உடல் வறுமை, உள்ள வறுமை, எண்ண வறுமை, செயல் வறுமை, நடத்தையில் வறுமை இவற்றையே குறிக்கின்றது. மனிதன் புறச் சூழல்களால் தாக்கப்பட்டு, மனக் கலக்கம் அடையும் பொழுதுதான் மேற்கூறப்பட்ட வறுமைகள் வந்தடைகின்றன.
இத்தகைய கலக்கம் மனத்தைக் கலக்காமல் இருக்கச் சிந்தனையில், சிரத்தையுடன் செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த பண்பட்ட உள்ளம், நேர்மையான ஒழுக்க நெறிகள் ஊக்க உணர்வு, ஒற்றுமை, சுறுசுறுப்பு, தெளிவான நினைவாற்றல் முதலிய பலவகைப்பட்ட நெறிகளுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய செயலுக்கு விளையாட்டு பெரிதும் பயன்படுகிறது.
ஓடி விளையாடு பாப்பா என்று பாரதி கூறியதற்கு முன்பே நமது சிற்றிலக்கியங்கள் விளையாட்டிற்கு பருவங்களைக் கண்டு மகிழ்ந்தன. சிற்றில், சிறுதேர், சிறுபறை, அம்மானை, கழங்கு, ஊசல் என்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தின. இத்தகைய விளையாட்டுக்கள் காலத்தின் மாற்றத்தினால் பல்வேறு வடிவில் உருக்கொண்டு வளர்ந்தன. ஏறுதழுவுதல் என்ற வீர விளையாட்டு இல்லற நெறிக்கும் காதல் உணர்வுக்கும் வழிகாட்டி நின்றது. ஒழுக்க நெறிக்கு உரம் இட்டது எனலாம்.


Spread the love
error: Content is protected !!