இளைஞர்கள் மட்டுமன்றி முதியவர்களும் விளையாட்டில் முழுக்கவனம் செலுத்தலாம். முதியவர்கள் தங்கள் உடல் வளத்திற்கும். மன வளத்திற்கும் ஏற்ற தேகப் பயிற்சிகளைச் செய்து உடல்நலம் பேணுவதுடன் வருங்கால இளைஞர் சமுதாயத்திற்கும் எடுத்துக்காட்டாகத் திகழலாம்.
விளையாட்டு வினையாகி விட்டது என்ற பழமொழியை நாம் அறிவோம். சில பெற்றோர்கள் தங்களது பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தாவிட்டால் எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருக்கிறான். இவனைச் சற்று கண்டித்துத் திருத்துங்கள் என்று ஆசிரியரிடத்தில் புகார் கூறுவதுண்டு. ஆசிரியர் அவனிடம் புதைந்து கிடக்கும் விளையாட்டு உணர்வை வெளிக்கொண்டு வந்து நல்ல விளையாட்டு வீரனாக மாற்றி விடுவதும் உண்டு. இதனையே மேலே கூறப்பட்ட பழமொழி நினைவு கூறுகிறது.
விளையாட்டு விளையாட்டிற்காகவே என்ற கொள்கை மாறி இன்று விளையாட்டு ஒரு வாழ்க்கை முறையாக தொழிலாக ஏற்றம் பெற்றுள்ளது என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவரும் இக்காலச் சூழ்நிலையில் இளைஞர்கள் தங்களுடைய உள்ளத்தைத் தீய வழிகளில் செலுத்திப் பல்வேறு தீய நடத்தைகளுக்கு உட்படுகின்றனர். இவர்களுடைய உள்ளம் பண்பட வேண்டுமானால் விளையாட்டுத் துறையிலே கவனம் செலுத்துதல் வேண்டும். அத்தகைய செயலினால் நற்பண்புகள் வளரும். மனம் ஒரு முகப்படும். உடல் வலுப்பெறும். தன்னம்பிக்கை வளரும். ஒற்றுமை உணர்வு மேலோங்கும். ஒழுக்கநெறி சிறக்கும். வாழ்வு வளம் பெறும்.
நோயற்ற வாழ்விற்கு விளையாட்டு அடிப்படையாகின்றது. உடல் நலம் பற்றிய அறிவை ஒவ்வொரு மனிதனுக்கும் விளையாட்டு கற்பிக்கின்றது. உடல் நலம் பெற்றால், உள்ளத்தில் நம்பிக்கை எழும். வாழ்வு வளம் பெறும்.
தங்கள் நலன் கருதி,
ஆயுர்வேதம் எஸ். செந்தில் குமார்.
