வலிமை தரும் வேர்க்கடலை

Spread the love

உஷ்ணப் பிரதேசங்களில் விளையும் பயிர்களில் முக்கியமான “பணம் தரும்” பயிர்களில் ஒன்று வேர்க்கடலை. மக்களால் வெகுவும் விரும்பப்படும் எளிமையான உணவுப்பொருள். இந்தியாவின் முக்கியமான வியாபார ஆகாரம் பொருள். வேர்க்கடலையின் தாவரவியல் பெயர் Arachis Hypogaea.

இதர மொழிப் பெயர்கள்:- சமஸ்கிருதம் – புசானக்கா, இந்தி – முங்ஃபன்னி, ஆங்கிலம் – Earth nut, Ground Nut, Pea – nut.

சரித்திரம்:-

வேர்க்கடலை தென் அமெரிக்காவில் தோன்றியிருக்கலாம். இதை “வீட்டுச் செடியாக” கற்காலத்திலிருந்தே, அதாவது 7600 ஆண்டுகளுக்கு முன்பே, பெருவில் பயிரிடப்பட்டிருக்கலாம். ஐரோப்பிய வியாபாரிகள் இதை உலகெங்கும் பரப்பினார்கள். “காலணிகளை” (Cononies) தேடி அடைந்த போர்ச்சுக்கீயர்கள், இந்தப் பயிரை ஆப்ரிக்காவில் அறிமுகப்படுத்தினர்.

சீனாவில், 1600 ல் வேர்க்கடலையை அறிமுகப்படுத்தியவர்கள் போர்ச்சுக்கீயர்களே. இப்போது உலகிலேயே அதிக அளவு வேர்க்கடலையை உற்பத்தி செய்வது சீனா. அடுத்தபடி வருகிறது இந்தியா. ஆனால் இந்த இரண்டு தேசங்களும், உலக வியாபாரத்தில் வேர்க்கடலையை 4% தான் ஏற்றுமதி செய்கின்றனர். ஏனென்றால் இங்கு விளையும் கடலை உள்நாட்டு உபயோகத்திற்காக சரியாகி விடுகின்றது. அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், சூடான், செனிகல், இந்த தேசங்கள் அதிகமாக வேர்க்கடலையை ஏற்றுமதி செய்கின்றனர். இவைகளின் ஏற்றுமதி, உலகின் மொத்த ஏற்றுமதியில் 70% ஆகும். ஏழை தேசமான செனிகலின் பொருளாதாரம் வேர்க்கடலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை நம்பியே இருக்கிறது. அதிக அளவு இறக்குமதி செய்து கொள்ளும் நாடுகள் ஐரோப்பிய தேசங்கள், கனடா மற்றும் ஜப்பான்.

தாவர விவரங்கள்:-

வேர்க்கடலை, அதன் பெயருக்கேற்ப பூமிக்கு அடியில் விளையும். வேர்களில், கடலையை தாங்கிய விதைப் பைகள் முளைக்கும். செடி நிமிர்ந்து, பூமிக்கு மேல் 50 – 90 செ.மீ. உயரம் வளரும். சில ரகங்கள் தரையில் படர்ந்து தண்டுகளின் முடிச்சு, பூமியில் இறங்கும். இலைகள் ஜோடியாக நீண்ட இலைக் காம்புகளில் (Petiole) அமைந்திருக்கும். பூக்கள் மஞ்சள் வண்ணமுடையவை. சுய மகரந்த சேர்க்கை செய்து கொள்பவை. மகரந்த சேர்க்கைக்குப் பின் பூக்களை தாங்கும் காம்பு நீண்டு, விதைப்பையை (Pod) பூமிக்குள் அழுத்தும். விதைகளால் பயிரிடப்படும் வேர்க்கடலையை 4-5 மாதங்கள் அறுவடை செய்யலாம். நிலக்கடலை பயிருக்கு, சூடான, லகுவான மண், மற்றும் ஈரப்பசை உள்ள காற்று வெளி நல்லது. உஷ்ணம் குறைந்த பகுதிகளிலும் வேர்க்கடலை வளருகிறது. லகுவான (Light) மண், அறுவடையை சுலபமாக்கும். நிலக்கடலை பயிருக்கு 4-5 மாதம் நல்ல சூர்ய ஒளியும், 500-1000 மி.மீ. மழையும் (வருடத்தில்) தேவை. அறுவடை தகுந்த சமயத்தில் செய்ய வேண்டும். சிறிது முன்பு செய்தால் விதைகள் முதிர்ச்சி அடைந்திருக்காது. தாமதமாக செய்தால் விதைப்பைகள் செடியிலிருந்து கழன்று பூமியில் தண்டு விடும்! சுருங்கிய முகம் போன்ற தோலுடைய விதைப்பையில் 2 லிருநது 4 விதைகள் (கொட்டைகள்) இருக்கும். அறுவடை செய்த விதைப் பைகளை பத்திரமாக சேமித்து வைப்பது அவசியம். இல்லாவிடில் ஃபங்கஸ் (Fungus) தாக்கி விடும்.

100 கிராம் வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள்:-

கார்போஹைடிரேட்ஸ் – 21 கிராம், (நார்ச்சத்து – 9 கிராம்) கொழுப்பு – 48 கிராம், புரதம் – 25 கிராம், விட்டமின் பி1 – 0.6 மி.கி., விட்டமின் பி2 – 0.3 மி.கி., விட்டமின் பி3 – 12.9 மி.கி., விட்டமின் பி5 – 1.8 மி.கி. இவை தவிர  விட்டமின் பி6, விட்டமின் பி9, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஸிங்க் (Zinc) இவையும் உள்ளன.

பயன்கள்:-

1.       வேர்க்கடலை புரதமும் எண்ணெய்யும் செறிந்து இருப்பதால் ஓர் சத்து நிறைந்த உணவு. இதில் விட்டமின்களும் உள்ளன.

2.       சமையலில் பல வித உபயோகங்கள் உள்ளது வேர்க்கடலை. அதை சமைக்காமலேயே பச்சையாக தோலூரித்து உண்ணலாம். இல்லை வறுத்து உப்புடன் சாப்பிடலாம். இல்லை வேக வைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். வேர்க்கடலையை ஏற்கெனவே சமைத்த உணவுப் பொருளுடன் சேர்த்தால் அவற்றின் சுவை கூடும்.

3.       வேர்க்கடலையில் லைசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்தப் புரதம் முட்டை மற்றும் மாமிசத்தில் இருந்து கிடைக்கும் புரதத்திற்கு சமனானது. அதனால் வேர்க்கடலை வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது.

4.       வேர்க்கடலையில் விட்டமின் பி3 (நியாசின்) அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது.

5.       சமீபத்திய ஆராய்ச்சிகளின் மூலம், வேர்க்கடலையில் ரெஸ்வேராட்ரால் (Resveratrol) என்ற பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பொருள் புற்றுநோய்க்கு எதிரி. தவிர இதயத்திற்கு நல்லது. இந்தப் பொருள் சிகப்பு திராட்சையில் அதிகம் உள்ளது. இந்த திராட்சையை ஒயினாக அதிகம் உட்கொள்ளும் பிரான்ஸ் தேசத்து மக்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படுவது குறைவு. இந்த சிகப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வேராட்ரால் அளவு வேர்க்கடலையிலும் உள்ளது.

6.       அதே போல சமீபத்திய ஆராய்ச்சிகள் வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti – Oxidant) நிறைந்திருப்பதை தெரிவிக்கின்றன. இதன் தரம் ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட்டிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்க்கு சமமானது.

7.       வேர்க்கடலை சிற்றூண்டிகள், வெல்லத்தோடு சேர்த்து செய்யப்படும் இனிப்புகள் எல்லோராலும் விரும்பப்படுகிறது. இவை ஆண்மையை பெருக்கும்.

8.       கடலை எண்ணெய் – வேர்க்கடலையின் அடுத்த முக்கியமான பயன் அதிலிருந்து கிடைக்கும் சமையல் எண்ணெய் தான். இந்த கடலை எண்ணெய் இந்தியாவில் சமையலில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை ரீபைன்ட் ஆயில் (ஸிமீயீவீஸீமீபீ ளிவீறீ) என்று குறிப்பிடுகின்றோம். இந்த எண்ணெய்யை எடுத்த பின் கிடைக்கும் புண்ணாக்கு மாடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. மற்றும் பெயிண்ட், சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

9.       தோலூரித்து, வறுக்கப்பட்ட வேர்க்கடலையிலிருந்து வேர்க்கடலை வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதை நம்நாட்டை விட மேல் நாட்டவர்கள் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

10.     விதைப்பைகளின் தோல் பிளாஸ்டிக், செல்லூலோஸ் மற்றும் ஒட்டும் பிசின்கள் தயாரிப்பில் உபயோகிக்கப்படுகிறது.

எச்சரிக்கை:-

1.       அதிகமாக வேர்க்கடலை உண்பது பித்தத்தை அதிகரிக்கும். இதனால் கல்லீரல் பாதிக்கப்படலாம். வேர்க்கடலை வாதத்ததையும் அதிகரிக்கும்.

2.       அதே போல கடலை எண்ணெயில் அதிகமாக உபயோகிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.


Spread the love