சைவர்களின் வரப்பிரசாதம்

Spread the love

சைவர்களின் வரப்பிரசாதம்

பனீர் இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு விருப்பமான உணவுப் பொருட்களுள் பனீரும் ஒன்று. பனீர் பட்டர் மசாலா, பனீர் 65, பனீர் பலாக் என்று பல வகைகள் உள்ளன.

பார்ப்பதற்கு கெட்டியாகவும், வெள்ளை நிறத்திலும் அமுக்கினால் மிருதுவாகவும், மிகவும் லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும்.

சைவ உணவினை உண்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது அதிகளவு புரதத்தையும், கொழுப்பினையும் கொண்டுள்ளது. பெரும்பாலானோர் இதனை இன்றைக்கு வீடுகளில் தயார் செய்து உண்டு வருகின்றனர்.

பனீரானது தெற்காசியா நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

பனீர் தயாரிக்கும் முறை

பனீரினை தயார் செய்ய, முதலில் பாலை நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். மிதமான சூட்டில் உள்ள போது பாலில் எலுமிச்சை சாறு அல்லது தயிரை சேர்க்க வேண்டும்.

அப்போது பால் கட்டி கட்டியாக மாறி, பாலின் உள்ள திரவமானது தனியே பிரிந்து விடுகிறது. இதனை மெல்லிய துணியில் வடிகட்ட திடப்பொருள் மேலேயும், திரவமானது கீழேயும் வந்து விடும்.

திடப்பொருளை தனியே பிரித்து விட்டால்  பனீர் கிடைக்கிறது. கீழே விழும் திரவத்தை உணவுப் பொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சப்பாத்தி, பூரி மாவு பிசையும்போது இந்த திரவத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

பனீரினைத் தயார் செய்யப் பயன்படுத்தும் பாலினைப் பொறுத்து அதனுடைய தரம் இருக்கும். பனீரினைத் தயாரிக்கப் பசும்பாலையே   பயன்படுத்தலாம்.

ஊட்டச்சத்துக்கள்

பனீரில் விட்டமின் ஏ, பி2(ரிபோஃப்ளோவின்), பி5(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி12(கோபாலமைன்) போன்றவை உள்ளன. இதில் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், செலீனியம் ஆகியவை உள்ளன.

மருத்துவப் பண்புகள்

ஜிம்மிற்கு போகாமல் கட்டுடலை பெற

100 கிராம் பனீரில் 18 கிராம் புரதச்சத்து உள்ளது. ஜிம்மில் பயிற்சி பெற்று கட்டுடலைப் பெற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அதிக புரதச்சத்து தேவைப்படும்.

அதனால், அவர்கள் தினசரி உணவில் பனீரினைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இடைவேளை உணவாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.

இதனால் வயிறு நிரம்பி, பசி குறைய தொடங்கும். எனவே அதிக பயிற்சி செய்பவர்கள் பனீரினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உறுதியான பற்கள் மற்றும் எலும்புகளைப் பெற

பனீரில் உள்ள கால்சியமானது உறுதியான பற்கள் மற்றும் எலும்புகள் வளர்ச்சிக்கு அவசியமாகிறது. பனீரானது ஈறு சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பனீரானது குறைந்தளவு லாக்டோஸினைக் கொண்டு உள்ளதால் பற்சிதைவு ஏற்படும் வாய்ப்பு குறைவு. சீரான வளர்ச்சிதை மாற்றத்தினைப் பெற பனீரானது உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. அதே நேரத்தில் செரிமானத்தை சீராக்கி அதிக கொழுப்பினை உடலில் சேரவிடாமல் வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.

மேலும் இதில் அதிகளவு காணப்படும் லினோலியிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவுகிறது. இதனால் கொழுப்புக்கள் நரம்புகளில் சேகரமாவது தடுக்கப்படுகிறது. எனவே பனீரை சைவர்களின் வரப்பிரசாதம் என்று இதனைக் கூறுகிறோம்.

வலியைக் குறைக்க

பனீரானது உடல் வலியைக் குறைப்பதோடு கீழ்முதுகில் ஏற்படும் வலியினையும் குறைக்கிறது. இதில் காணப்படும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 அமிலங்கள் கீழ்வாதத்தால் நடக்க முடியாமல் அவதிப்படும் முதியவர்களுக்கு சரியான தீர்வினை தருகிறது.

பொதுவாக ஒமேகா 3 மற்றும் 6 அமிலங்கள் மீன்களில் காணப்படுகின்றன. சைவ உணவினை உண்பவர்கள் பனீரினை உண்டு ஒமேகா 3 மற்றும் 6-னைப் பெறலாம்.

பனீரானது ஒமேகா 3-னைக் கொண்டுள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் இதனை உண்டு தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திகொள்ளலாம்.

நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க

பனீரானது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து உடலினை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. குழந்தைகளில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

அறிவாற்றலை அதிகரிக்க

பனீரில் உள்ள பி தொகுப்பு விட்டமின்கள் குழந்தைகளில் குறுத்தெலும்பு வளர்ச்சியினை ஊக்குவிப்பதோடு வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரித்து, ஞாபத்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

சருமம் பளபளக்க

பனீரில் உள்ள விட்டமின்கள் மற்றும் செலீனியம் சருமத்தைப் பாதுகாத்து பளபளக்கச் செய்கிறது. ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பனீர் எச்சரிக்கை

பனீரானது அதிகளவு கொழுப்புச் சத்தினைக் கொண்டுள்ளதால் இதனை அளவோடு சாப்பிட வேண்டும். இதில் உள்ள சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.

தரமில்லாத பனீரினை உண்ணும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவாய்புள்ளது. சைவர்களின் வரப்பிரசாதமான பனீரினை அளவோடு உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்


Spread the love