ஆரஞ்சு தோல் பொடி

Spread the love

ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள்

ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், தயாமின், பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளது. இது சருமத்தின் அழகை மேம்படுத்தி சருமத்தை மென்மையாக, பொலிவுடன் வைக்க உதவுகிறது.

ஆரஞ்சு தோலில் உள்ள ஆக்சிஜனேற்றம் சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கும், சருமம் தளராமல் இருக்க எலாஸ்டின் உற்பத்திக்கும் பெரிதும் உதவுகிறது. இதனால் வயதான தோற்றம் காலதாமதமாகிறது.

ஆரஞ்சு கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்று தன்மைகளை கொண்டுள்ளதால் எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல மாற்றத்தை கொடுத்து சருமத்தை வெள்ளையாக்க உதவுகிறது. இதனை தினசரி பராமரிப்பில் எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

ஆரஞ்சு தோல் பொடி உபயோகிக்கும் முறை

இறந்த செல்கள் நீங்க

சருமத்தில் தங்கியிருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்க ஆரஞ்சு பொடி சிறந்ததாகும்.

ஆரஞ்சு பொடி ஒரு டீஸ்பூன், அரிசி மாவு ஒரு டீஸ்பூன், காய்ச்சாத பால் 3 டீஸ்பூன், மஞ்சள் சிட்டிகை அளவு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் வட்ட வடிவில் தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரம் 2 முறை செய்யலாம். தொடர்ந்து செய்வதன் மூலம் இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் நீங்குவதற்கு ஆரஞ்சு தோல் பொடியுடன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தின் இறந்த செல்களை நீக்கி எக்ஸ்போலியேட் செய்கிறது.

தலையில் ஏற்படும் அரிப்பு நீங்க

ஆரஞ்சு தோல் பொடி 100 கிராம், பிஞ்சு கடுக்காய் 10 கிராம், வால் மிளகு 10 கிராம், பச்சை பயறு கால் கிலோ இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து சேகரித்து வைக்கவும். இதனை வாரம் இரு முறை தலையில் தேய்த்து நன்கு குளித்து வர தலையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

சரும பொலிவிற்கு

ஆரஞ்சு தோல் பொடி 2 டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு தேவையான அளவு இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வரவும்.

இவ்வாறாக தொடர்ந்து  நான்கு முறை செய்து வந்ததும் சருமம் பொலிவுடன் இருப்பதைக் காணலாம்.

ஆரஞ்சு தோல் பொடியினை ஃபேஸ்பேக்காக தயாரித்து வாரத்திற்கு ஒரு முறை உபயோகித்து வரலாம். இது முகத்தை பொலிவுடன் வைக்க உதவுகிறது.

ஆரஞ்சு தோல் பொடி, முல்தானிமட்டி, சந்தனம் இவற்றை சம அளவு எடுத்து தயிருடன் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்த பின் கழுவவும். இவ்வாறாக வாரம் ஒரு முறை செய்து வரலாம்.  இதில் தயிருக்கு பதில் ஆரஞ்சு சாறு பயன்படுத்தலாம்.

முக அழகு மேம்பட

ஆரஞ்சு தோல் பொடி கால் டீஸ்பூன், சந்தன பவுடர் 2 டீஸ்பூன் எடுத்து கெட்டியான விழுதாக்கவும். இதனை இரவு தூங்கும் முன் பருக்கள் வந்த இடத்தில் தடவி, நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதால் பருக்கள் மற்றும் வடு மறைந்து முக அழகு மேம்படும்.

2 டீஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் சுழற்சி முறையில் நன்கு மசாஜ் செய்யவும். சிறிது நேரம் உலர வைத்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர சரும அழகு மேம்படும்.

பருக்கள் நீங்க

ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் வேப்ப இலை பவுடர் சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது நம் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் பருக்களை எளிதில் வெளியேற்ற உதவுகிறது.

கழுத்து பகுதியில் உள்ள கருமை நீங்க

ஆரஞ்சு தோல் பொடி கால் டீஸ்பூன், கசகசா விழுது ஒரு டீஸ்பூன், சந்தனப் பவுடர் 2 டீஸ்பூன் இவற்றை கெட்டியாக கலந்து தினமும் இரவு தூங்கும் முன் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை மற்றும் தழும்புகள் மீது தடவி மசாஜ் செய்து காய்ந்ததும் சுத்தமான நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முகத்தில் ஏற்படும் பள்ளங்கள் நீங்க

ஆரஞ்சு தோல் பொடி 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் இவற்றை பால் அல்லது பால் கிரீமில் கலந்து முகத்தில் தடவி  நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவி வர சருமம் மென்மையாகும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் புத்துணர்வாக வைக்க உதவுகிறது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love