இயற்கை பொக்கிஷம்! ஆரஞ்சு!

Spread the love

ஆரஞ்சுப் பழங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியா கண்டத்தில் சீனாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையே தோன்றியதாக கருதப்படுகின்றது. அங்கு தோன்றி பின்னர் அது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. 9 ஆம் நூற்றாண்டில் தான் ஆரஞ்சு ஐரோப்பிய நாடுகளுக்குள் போர்த்துகீசியர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தீவுகளில் 15 ஆம் நூற்றாண்டில் ‘கொலம்பஸ்’ தான் முதல் முறையாக ஆரஞ்சு மரங்களை விதை மூலமாக உண்டாக்கியுள்ளார். அவை பின்னர் பலராலும் அமெரிக்க முழுவதும் பயிரிடப்பட்டுள்ளது. பின்னர் அமெரிக்க மாநிலங்களை ஃப்ளோரிடாவிலும் கலிபோர்னியாவிலும் பயிரப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த இரு மாநிலங்களும் அதன் ஆரஞ்சிற்கு புகழ் பெற்றுத் திகழ்கின்றது.

19 ஆம் நூற்றாண்டு வரை ஆரஞ்சுப் பழங்கள் செல்வ வளம் படைத்தவர்களின் பழமாகவே விளங்கியிருக்கின்றது. செல்வந்தர்களின் வீட்டுத் திருமணங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களில் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டில் தான், மரங்களாகப் பயிரிடப்பட்டதன் விளைவாக எளியோரும் உண்ணும் வண்ணம் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இன்று அமெரிக்கா, பிரேஸில், மெக்சிகோ, ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் சைனா போன்ற நாடுகள் உளகளவில் அதிக ஆரஞ்சுப் பழங்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனைக்கு விடுகின்றன.

ஆரஞ்சுப் பழங்கள் தற்பொழுது உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கர்களின் வாழ்வில் நீக்கமற கலந்து உள்ளன. அமெரிக்கர்கள் ஆரஞ்சு தான் சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவு எனவும் காலை சிற்றூண்டிக்கு பெரும்பாலும் ஏற்றது என நம்புகின்றனர்.

உடல் ஆரோக்கியம் பேணிட ஆரஞ்சு ஒன்றே போதும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். எனவே, தான் அவர்கள் ஆரஞ்சு பழங்களை அனேக உணவு தயாரிப்பில் பழமாக ஜுஸாக உபயோகிக்கின்றனர். கேக், ஸாலெட், கீரிம்ஸ், ஜாம், ஜெல்லி என அனைத்திலும் நீங்க முடியாத இடத்தையும் நற்பெயரையும் அமெரிக்கர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

ஆரஞ்சுப் பழம் வட்ட வடிவமாக உள்ளும் புறமும் ஒரே ஆரஞ்சு நிறத்தில் 2 – 4 அங்குல சுற்றளவு கொண்டவை. ஆரஞ்சு மரங்களில் கொத்துக் கொத்தாக காய்க்கக் கூடிய பழ வகையாகும். ஆரஞ்சுகள் பொதுவாக இரண்டு வகை உண்டு. ஒன்று இனித்திடும் வகை – Sweet oranges, மற்றது கசப்பு சுவையுடையவை Citrus Sinensis என்று தாவரவியல் பெயர் கொண்டவை. இவை பல, பல ரகங்களில் கிடைக்கின்றன. ஜாஃபா, நேவல் லாவன்சா என பெயர் கொண்டவை. இவை சிறிய ரகமாகவும் அதிக வாசனையுடைய தோல்களை உடையவையாக இருக்கும். உள்ளே சுளை சுளையாக எளிதாக பிரிக்க முடியும். நல்ல சுவையும் அதிக பழ சாறும் கொண்டவை.

இரண்டாம் வகையான கசப்பு ஆரஞ்சுகள் தாவரவியலில் Citrus Aurantium என பெயர் கொண்டவை இவை ஜாம் மார்மலேட் போன்றவை தயாரிப்பிலும், மதுபானங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. இவை, சற்றே கசப்பாக இருப்பதால் பழங்களை தனியாக உண்ண உகந்தவையல்ல. இவற்றை நார்த்தை என நாம் அழைக்கின்றோம்.

நார்த்தம் பழங்கள் அதிக தடியான தோல்களைக் கொண்ட ரகமும் உள்ளன. மெல்லிய தோல்களைக் கொண்ட ரகங்களும் உள்ளன. இவை பெரிய நிறுவனங்களின் ஜுஸ், ஜாம் போன்ற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதனை நாம் வீடுகளில் ஊறுகாய் போன்றும் செய்து பயன்படுத்துகிறோம்.

வைட்டமின் சி யை உடல் சேமித்து வைத்து பயன்படுத்திட முடியாது. நோய் எதிர்ப்பு சக்தி நல்ல வண்ணம் இருக்க வைட்டமின் சி இன்றியமையாதது.

எனவே, அன்றாடம் வைட்டமின் சி அதிகம் அடங்கிய பழங்களையும் காய்கறிகளையும் உண்பது அத்தியாவசியமானது. அப்பொழுது தான் உடல் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும். ஆரஞ்சுப் பழங்களை அன்றாட உணவில் ஒரு பகுதியாக்கிக் கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறும் பிற உடல் கோளாறுகளான இரத்த அழுத்தம், இதயதாக்கு, இதய படபடப்பு போன்றவை குறையும். இவற்றால், வரும் மரணமும் சம்பவிக்காது தவிர்த்திட முடியும்.

எந்த வகை உணவாக பழமாக இருப்பினும் சிலருக்கு அது ஒவ்வாமை எனும் அலர்ஜியை ஏற்படுத்திடும். அதே போல ஆரஞ்சுப் பழங்களும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். மீன், நண்டு, இரால், பன்றி இறைச்சி, கோழி, முட்டை, பால், சோளம், நிலகடலை, ஸ்ட்ராபெரி எவ்வாறு அனைவருக்கும் ஒத்துக் கொள்கின்றது. ஆனால், அவையே சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுகின்றது. அதே போலதான் சிலருக்கு ஆரஞ்சும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. ஆரஞ்சு ஏற்படுத்தும் ஒவ்வாமை உணர்வுகள் கண் அரிப்பு, மூக்கு ஒழுகுதல், அரிப்பு, தும்மல், இளைப்பு, வயிற்று உபாதைகள், சோர்வு போன்றவையாகும்.

இவை எங்கோ ஒருவருக்கு எப்போதோ ஏற்படலாம். அவருக்கே இது சில காலம் கழித்து சரியாகி ஒவ்வாமையை ஏற்படுத்தாமலும் போகலாம்.

ஆரஞ்சுப் பழங்கள் குறுக்கு வாட்டில் அல்லது நீளவாட்டில் வெட்டி பின்னர் உரித்தால் தோலை எளிதாக நீக்கிட முடியும். பிற பழங்களைப் போல் ஆரஞ்சையும் சிறிது சூடுபடுத்தி பிழிந்தால் அதிக சாற்றை தரும். எனவே, லேசாக சுடுநீரில் போட்டு பிழிவது நற்பயனை தரும். பிற உணவுகளிலும் உணவு தயாரிப்பிலும் ஆரஞ்சு பழசாறை பயன்படுத்திட நல்ல சுவையையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிடும்.

ஆரஞ்சுப் பழங்கள் விளையும் இடங்களைப் பொறுத்தும் தன்மையைப் பொறுத்தும் பல பல சுவைகளில் நிறங்களில் தன்மையில் கிடைக்கின்றன. சீன ரகங்களான க்ளெமென்டைன் – Clementine, மான்டரின் – Mandarine எனவும், ஜப்பானிய ரகம் சத்சுமா Satsuma எனவும் இந்திய ரகம் – நாக்பூர்  Nagpur எனவும் தமிழக ரகம் கொடை Kodai எனவும் அழைக்கப்படுகின்றது.

நன்மைகள்:-

ஆரஞ்சு பழச்சாறில் உள்ள சுண்ணாம்பு Calcium சத்து பாலில் இருப்பதை விட அதிகம். ஒரு 8 அவுன்ஸ் கிளாஸ் பாலில் 293 மி.கிராமும் அதே அளவு ஆரஞ்சு சாறில் 350 மி.கிராமும் உள்ளது. இவற்றில் உடல் 91 மி.கி சுண்ணாம்பு சத்தை மட்டுமே பாலிலிருந்து ஈர்த்துக் கொள்கின்றது. அதே சமயம் 130 மி.கி. சுண்ணாம்புச் சத்தை ஆரஞ்சுச் சாறிலிருந்து ஈர்த்துக் கொள்கின்றது. ஆரஞ்சு பழத்தில் 50 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது உடலின் ஒரு நாள் தேவையில் மூன்றில் இரண்டு பங்காகும்.

ஆரஞ்சு பழ சாறில் எப்பொழுதும் செயற்கை நிறமிகள் Colour பயன்படுத்தப்படுவதில்லை. ஆரஞ்சுகளில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது.

எனவே, அவை உடலின் நச்சுத் தன்மையை வெளியேற்றிட உதவுகின்றது. ஆரஞ்சுப் பழச்சாற்றை குளிர்ச்சியூட்டும் பொழுது அதிக ஆரஞ்சு நிறமாக மாறுகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் மனோரம்மியமாக இருக்கும்.

இத்தகைய பெருமைகளையும், பயன்களையும் கொண்ட ஆரஞ்சுப் பழங்களை நாமும் அன்றாட உணவில் ஓர் அங்கமாக்கிக் கொண்டால் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும், பிற நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் உதவிடும்.


Spread the love