புலால் உணவுகளிலிருந்து பெறப்படும் புரதத்திற்கு இணையாக அல்லது தக்கதொரு மாற்றாகக் காளான்கள் அமையக் கூடும் என்று உணவு மற்றும் விவசாயக் கழகத்தினரும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் பரிந்துரை செய்துள்ளன. பச்சைப் பட்டாணி, இறைச்சி வகைகள், மீன், முட்டை இவற்றைப் போல் காய்கறி வகைகளைச் சார்ந்த காளான்களாலும் புரதச் சத்தைத் தர முடியும். மேலும் காளான்களின் தனித்தன்மை என்னவென்றால் மேற்கூறிய உணவு வகைகளைக் காட்டிலும் விரைந்து செரிக்கக் கூடிய உணவாகும். புரதத்தைத் தரக்கூடிய அதே சமயத்தில் உடலியக்கத்தில் இன்றியமையாதனவாகக் கருதப்படும். சிஸ்டீன் ஹிஸ்டிடின் லைசின் அஸ்பார்டிக் அமிலம் செரீன் கிளைசின் மெதியோனின் எனப்படும் அமினோ அமிலங்கள் காளான்களில் செறிவுற்றுள்ளன.
காளான்களில் அதிகமான பொட்டாஷியமும் குறைவான சோடியமும் உள்ளதால் இரத்த அழுத்தம் உயர்ந்துள்ளவர்களுக்கு இது ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது. புரதச் சத்து அதிகமாகவும் கொழுப்புச் சத்தும் மாவுச்சத்தும் குறைவாக உள்ளதால் வயதானவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது நல்ல உணவாகும்.
வட இந்தியாவில் வருடத்திற்கு 550 டன் காளான்கள் அதிலும் குறிப்பாக தில்லியில் மட்டும் 150 டன் காளான்கள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. மிக அதிகமான காரம், உப்பு, வாசனைச் சாமான்கள், சேர்க்காமல் எளிய முறையில் சமைத்து உண்ணப்படும் போது காளான்கள் சிறந்த இயற்கை உணவாவதுடன் உடலுக்கும் வலுவைத் தருகின்றன.