தாமரை பூத்த தடாகம்

Spread the love

மலர்களின் அரசி ரோஜாவானால் அரசன் தாமரை, இந்தியாவின் எல்லா மொழி இலக்கியங்களில் தாமரையை பெண்களின் வதனத்திற்கும், இறைவனின் கண்களுக்கும் ஒப்பிட்டிருப்பதை காணலாம். இந்த பூவில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படுவதால், தாமரை மிகவும் மதிக்கப்படுகிறது.

தாமரை ஒரு நீர்த் தாவரம். இந்தியா முழுவதும், குறிப்பாக உஷ்ணமுள்ள பிரதேசங்களின் குளம், குட்டைகளில் செழித்து வளர்கிறது.

தாமரையின் தாவிரவியல் பெயர்: Nelumbium Speciosum / Nelumbo Mucifera   குடும்பம்: Nymphaeacea

ஆங்கிலப்பெயர்: Sacred Lotus

சமஸ்கிருதம்: கமலா, பங்கஜா, இந்தி: கன்வல் இதரபெயர்கள்: அரவிந்தம், புண்டரீகம், பதுமம், கமலம், பங்கசம். நறுமணமுள்ள தாமரை, அதன் நிறவேற்றுமைப்படி, வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்று நான்கு இனங்களாக பிரித்து சொல்லப்படுகிறது.

பயன்படும் பாகங்கள் – பூ, விதை, பூத்தாள், கிழங்கு.

தாமரையின் பொதுக் குணங்கள் – குளிர்ச்சி உண்டாக்கும். கோழையை அகற்றும். மனதை சாந்தப்படுத்தும். சத்துள்ள டானிக். தாமரைப்பூ உடல் வெப்பத்தை குறைக்கும். தாமரைப்பூவின் மகரந்த பொடியுடன், சர்க்கரையும், தேனும் சேர்த்து விடியற் காலையில் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு, காது கேளாமை இவை நீங்கும் என்கிறது சித்தர்களின் பாடல் ஒன்று.

வெண் தாமரைப்பூ

1.       வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், போன்ற கண் நோய்களுக்கு தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால் 100 மில்லி, சுத்தமான தண்ணீர் 100 மி.லி. சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சவும். நன்றாக காய்ந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, வரும் ஆவியை பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி செய்ய வேண்டும். இதை காலை, மாலை, இருவேளை செய்து வந்தால் கண்குறைபாடுகள் நீங்கும். இதற்கு செந்தாமரை பூவையும் பயன்படுத்தலாம்.

தாமரைப்பூ அதன் இலை, தண்டு கிழங்கு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து, அரைத்து (வகைக்கு 100மில்லி அளவு) சாறுகளை சேகரித்து கொள்ளவும். இத்துடன் சுத்தமான நல்லெண்ணை (750 கிராம்) கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். எண்ணை கொதித்து காய்ந்தபிறகு, சிவப்பு நிறமடையும். நல்ல நறுமணம், எண்ணையிலிருந்து எழும். இந்த பக்குவ நிலையில் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து வடிகட்டி, பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்த தைலத்தை எண்ணை ஸ்நானத்திற்கு, தலையில் தடவி வாரம் ஒரு முறை குளித்து வந்தால் கண் பார்வை சீராகும்.

2.       சித்தவைத்தியம் சொல்கிறது – வெண் தாமரை பூவால் ஈரலின் வெப்பமும், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தாமரை விதை ஆண்மையை பெருக்கும். கிழங்கு கண் ஒளி, குளிர்ச்சி இவற்றைத் தரும் விதைகளை பொடித்து 1 – 2 கிராம் எடை உள்ளுக்கு கொடுத்து வர உடலுக்கு வலிமை தரும். விதைகளை தேன் விட்டரைத்து நாக்கில் தடவ, வாந்தி, விக்கல், நிற்கும்.

3.       வெண் தாமரைப்பூ ஒன்றின் இதழ்களை, பழைய மண் பாண்டத்தில் போட்டு அதில் 200 மி.லி. நீரை ஊற்றவும். அடுப்பில் வைத்து, நீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பிறகு இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். இந்த குடிநீரை வேளைக்கு 3 அவுன்ஸ் வீதம் தினமும் 3 வேளை குடித்து வந்தால் மூளை பலம் பெறும். அதன் செயல்பாடு சிறப்பாகும்.

4.       மேற்சொன்னது போல், தயாரித்த தாமரை குடிநீரில் பால், சர்க்கரை சேர்த்து, பருக, இருதய நோய்கள் அகலும். தினம் இருவேளை 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். ஜுரத்திற்கும் இந்த தாமரை குடிநீர் நல்லது.

செந்தாமரைப்பூ

வெண் தாமரைப்பூவை பயன்படுத்துவது போலவே, செந்தாமரைப்பூவையும் பயன்படுத்தலாம். செந்தாமரைப்பூ லேகியம் கண்ணுக்கும், மூளைக்கும் சிறந்த டானிக். செந்தாமரைப்பூ இதழ்கள், சீந்தில் கொடி, நெல்லிமுள்ளி, காசினி கீரை, சுக்கு, திப்பிலி இவற்றை பாலில் கொதிக்கவைத்து நெய் சேர்த்து செய்யப்படுகிறது. இந்த லேகியம்.

ஆசியாவின் பல தேசங்களில் தாமரை தண்டு காய்கறியாக பயனாகிறது. ஸ்டார்சாக அரைக்கப்படுகிறது. விதைகள் கூட ஸ்டார்ச், நிறைந்து இருப்பதால், ஸ்டார்ச் தயாரிக்க பயனாகிறது. இலைகளும் வேகவைத்து காய்கறியாக பயனாகின்றன.

தாமரை குளத்து நீர் இரத்தக் கொதிப்பை தணிக்கும். கண் எரிச்சலை போக்கும். கண் எரிச்சலுடையவர்கள் காலை மாலை தாமரைக் குளத்து நீரை பருகி வரலாம்.


Spread the love