மூட்டுவலிக்கு மருந்தாகும் எலுமிச்சைப்புல்

Spread the love

அன்றாடம் நமக்கு வெகு அருகில், எளிதாகவும், வீட்டிலும், சாலையோரங்களிலும் கிடைக்கக் கூடிய மூலிகை பொருட்களை கொண்டு பக்க விளைவுகளில்லாத மூலிகை மருந்துகள் எப்படித் தயாரிப்பது என்று பார்த்து வருகிறோம். அவ் வகையில் எலுமிச்சைபுல் எனப்படும் கற்பூரப்புல்லின் மருத்துவ குணங்களைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வாசனை மிகுந்த எலுமிச்சைபுல், நெஞ்சுச் சளியை அகற்றி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தடுக்கிறது. மேலும், மூட்டு வலிகள், தசைப் பிடிப்பு, மூட்டுகளின் ஜவ்வு தேய்வதால் வரும் எரிச்சல், கெட்ட கொழுப்புக்களை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பது, மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும் அற்புதமான உள் மருந்தாகவும் ஆகிறது.

வைட்டமின் C, பாஸ்பரஸ், மெக்னீஷியம், இரும்பு போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ள இந்த கற்பூரப் புல்லை, உள் மற்றும் வெளிமருந்தாக பயன்படுத்தலாம். இதை கையில் வைத்துக் கசக்கும் போது நறுமணத்தையும், உட்கொள்ளும் போது புளிப்பு சுவையாகவுமிருக்கும், தேநீராக உட்கொள்ளும்போது, வயிற்றில் உள்ள நுண்கிருமிகளை வெளியேற்றுகிறது. எலுமிச்சை புல்லைப் பயன்படுத்தி சளி, காய்ச்சல், இருமலை போக்கும் மருந்துகள் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

இடித்தஎலுமிச்சைபுல்-1தேக்கரண்டி,                                                           சுக்குப்பொடி-1/4தேக்கரண்டி                                                        

தேன்        –    ஒரு தேக்கரண்டி 

செய்முறை

இடித்த எலுமிச்சைப் புல்லுடன், 1/4 தேக்கரண்டி சுக்குப் பொடி சேர்த்து ஒரு கோப்பை நீரில் நன்கு கொதிக்க விட்டு அதை வடிகட்டி தேன் சேர்த்து தொடர்ந்து மூன்று, நான்கு நாட்கள் அருந்தி வர  காய்ச்சல் மற்றும், சளித் தொல்லைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இதை பயன்படுத்தி இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க செய்யும் மருந்து ஒன்றை தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

இடித்த எலுமிச்சை புல் ஒரு  தேக்கரண்டி, கருஞ்சீரகம் அரை தேக்கரண்டி, மற்றும் தேன்.

செய்முறை

இடித்த புல்லில் கருஞ்சீரகம் சேர்த்து ஒரு கோப்பை நீர் விட்டு கொதிக்கவிட்டு. தேன் சேர்த்து காலை வேளையில், வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இந்த தேநீரானது உடலில் சேருகின்ற கெட்ட கொழுப்புகள், மற்றும் இரத்த நாளங்களில் மெழுகு போல் படிந்து மாரடைப்பு ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புகளையும் கரைக்கிறது. மேலும், இரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரையின் அளவையும் மட்டுப்படுத்துகிறது. வாயு தொல்லையை சரிசெய்து, பசியை தூண்டுவதுடன்,  மாதவிடாயை சம்பந்தப்பட்ட தொல்லைகளையும் சீராக்குகிறது.

இதன் உதவியால் காளான் தொற்று, அரிப்பு, மற்றும் தோல் நோய்க்கு சிறந்த மேல்பூச்சு மருந்தை தயார் செய்யலாம்:

தேவையான பொருட்கள்:

நீர் விடாமல் நசுக்கிய எலுமிச்சை புல்

ஒரு தேக்கரண்டி   தேங்காய் எண்ணெய்.

செய்முறை

எலுமிச்சை புல்லுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் சூடுபடுத்தி,  வடிகட்டிக்கொள்ளவும். இதனை கை, கால் உடல் தசைகளில் வலி ஏற்படும் போதோ, காளானால் தோலில் தொற்று ஏற்படும்போதோ, சேற்று புண், விரல் இடுக்குகளில் தோன்றும் அரிப்பு உள்ளிட்டவைகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இது அரிப்பு தரும், தோல் நோய்களுக்கு அருமையான மருந்தாகவும், தசை பிடிப்புகளுக்கு சிறந்த மேல் பூச்சு மருந்தாகும். எழுபது சதவிகித  சத்துக்கள் நிறைந்த இந்த கற்பூரப்புல், வயிறு விட்டு விட்டு வலிப்பது, வயிற்றுக் கடுப்பு, மேல் வீக்கம் போன்றவற்றிற்க்கு மருந்தாகும்.


Spread the love