வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்கு செயல்படும் மற்றும் கணக்கு நன்கு வரும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயை பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடலாம்.
வெண்டைக்காய் “மால்வேசி” என்ற குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகையாகும், வெண்டைக்காயின் அறிவியல் பெயர் “ஆபெல்மொஸ்சஸ் எஸ்குலெந்தஸ்” என்பதாகும். இதன் தாயகம் எத்தோபியா. இது எத்தோபியாவிலிருந்து நைல் நதி மூலம் அரேபியாவிற்கு வந்து பின் இந்தியாவை அடைந்தது. அடிமை வியாபாரம் ஆரம்பித்தபோது ஆப்பிரிக்க அடிமைகளின் மூலம் இக்காய் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளை எட்டியதாக வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது..
வெண்டையானது செடி வகைத் தாவரமாகும். வெண்டைச் செடியானது வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் செழித்து வளரும் இயல்பினை உடையது. மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களுடன் கூடிய பூவினை கொண்டது. இப்பூக்களிலிருந்து ஐந்து முதல் பதினைந்து செ.மீ நீளமுள்ள காய்கள் தோன்றுகின்றன. இதை நறுக்கும் போது கொழகொழப்பான பசை போன்ற திரவம் வெளிப்படும். இதன் காரணமாக இது பலரால் வெறுக்கப்படுகிறது. நன்கு முற்றிய வெண்டை விதையிலிருந்து சமையலுக்கான எண்ணை எடுக்கப்படுகிறது. வெண்டையின் வேர் மற்றும் தண்டிலிருந்து காகிதக்கூழ் மற்றும் காகிதம் தயார் செய்யப்படுகிறது.
வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வெண்டைக்காயில் வைட்டமின்ஏ, சி, கே, H1 (தையமின்), H6 (பைரிடாக்ஸின்), மற்றும் ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது வைட்டமின் H2 (ரிபோஃப்ளோவின்), H3 (நியாசின்), H5 (பான்டாதெனிக் அமிலம்) ஆகியவை உள்ளன. இவை தவிர, இதில் தாதுக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்சத்து, குறைந்தளவு எரிசக்தி போன்றவை உள்ளன. இதில் பைட்டோ நியூட்ரியன்களான பீட்டா கரோடீன், பீட்டா கிரிப்டோசாக்தின், லுடீன் ஸீஸாத்தைன் ஆகியவையும் அடங்கியுள்ளது.
வெண்டையின் மருத்துவப்பண்புகள்
வெண்டைக்காயில் உள்ள வழவழப்பான திரவம் போன்ற நார்சத்து செரிமானப்பாதையில் உணவுப்பொருட்களை மொத்தமாகச் சேர்த்து நகர்த்த உதவுகிறது. நார்சத்தானது நமது உடலில் உள்ள குடலின் இயக்கங்கள் சீராக நடைபெற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், வாயுத் தொந்தரவுகள் உள்ளிட்ட சீரண பிரச்சினைகள் சரி செய்யப்படுகிறது. மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெண்டைக்காயில் உள்ள நார்சத்து நீக்குகிறது. வைட்டமின் ஏ – வானது சருமப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ப்ரீ – ரேடிக்கல்களின் செயல்பாட்டிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும் சருமச்சுருக்கம், வடுக்கள், முகப்பருக்கள் ஏற்படாமல் சருமத்தை வெண்டைக்காய் பாதுகாக்கிறது.
வெண்டைக்காயில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
இதிலுள்ள வைட்டமின் “சி” -யானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நம் உடலை நோய் தொற்றுக்கிருமிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் இதை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம். மேலும், இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது உடலில் உள்ள சோடியத்தின் அளவினை சரிசெய்கிறது. இதனால் இரத்தத்தின் அழுத்தமானது சீராகி இதயப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், வெண்டைக்காயில் உள்ள “பெக்டின்” என்ற திரவம், நம்முடைய இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.
எலும்புகளின் நலத்திற்கு
வெண்டைக்காயில் காணப்படும் வைட்டமின் கே-யானது, எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்றவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு எலும்புகளை வலிமையாக்குகிறது.
வெண்டைக்காயினை வாங்கும் போது
வெண்டைக்காயை வாங்கும்போது புதிதான இளமையான சீரான பச்சை நிறத்தினை உடையவற்றை வாங்க வேண்டும். முதிர்ந்த, வெட்டு காயங்கள் உடைய விறைப்பில்லாத காயினைத் தவிர்த்து விடவேண்டும். இதை வாங்கிய உடனேயே பயன்படுத்திவிடுவது மிகவும் நல்லது. வெண்டைக்காயினை குளிர்பதனப் பெட்டியில் ஓரிரு நாட்கள் வைத்திருந்தும் பயன்படுத்தலாம். இதை முழு காயாக இருக்கும்போது தண்ணீரில் அலசி சுத்தம் செய்து சிறிது நேரம் உலரவிட்டு (அதில் உள்ள ஈரம் போகுமாறு செய்தபின் ) சிறுதுண்டுகளாக்கி பயன்படுத்தலாம். (நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் உலரவிட்டால் வழுவழுப்புத் தன்மை குறையும்.) மேலும், வெண்டைக்காயை அதிக நேரம் வேக விடக்கூடாது. அதிக நேரம் வேகவைக்கும் போது காயில் உள்ள சத்துக்கள் வீணாகிவீடும்.