கற்பக மூலிகை கரிசலாங்கண்ணி!

Spread the love

மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் காமதேனு தான் கற்பக மூலிகைகள், உடலை நோய் அணுகாதபடி காத்து என்றும் இளமையுடனும், புத்துணர்வுடனும் திளைக்கச் செய்யும் மூலிகைகள் இவையே இந்த மூலிகைகளுள் கரிசலாங்கண்ணிக்கு சிறப்பிடம் உண்டு.

கரிசலாங்கண்ணிக்கு கரிசாலை, கைகேசி, கையாந்தரை, தேகராசம் எனப் பல பெயர்கள் உண்டு. இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என இரு வகை உண்டு. வெள்ளை கரிசலாங்கண்ணி இரும்புச்சத்து அதிகம் கொண்டவை. மஞ்சள் கரிசலாங்கண்ணி தாமிரச் சத்து அதிகம் கொண்டவை. தமிழ் மருத்துவத்தில் வெள்ளை கரிசலாங்கண்ணியே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இரத்த சோகை நீங்க

உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து போகும். இதனால் உடல் சோர்வடையும். இரத்த சோகை மனிதர்களை ஆட்டிப் படைக்கும் ஒரு கொடிய நோயாகும். இந்த இரத்த சோகை மற்ற நோய்களுக்கு நுழைவு வாசலாகவும் அமையும்.

இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங்கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இரு வேளைகளில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இதனால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்த சோகை நீங்கும்.

கல்லீரலை பலப்படுத்த

உடலின் செயல்பாடுகளை தூண்டுவதும், செயல்படுத்துவதும் கல்லீரலின் முக்கிய பணியாகும். கல்லீரல் நன்கு செயல்பட்டால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் எளிதில் பாதிப்பு அடையும். இதனால் இவர்களின் கண்கள், மூளை, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்பால் உடலில் பித்தம் சுரந்து இரத்தத்தில் கலந்து விடுவதால் காமாலை நோய் உண்டாகிறது. கல்லீரல் பாதிப்பே உடலின் பாதிப்பாகும். கல்லீரலைப் பலப்படுத்த கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.

கரிசலாங்கண்ணியின் சமூலத்தை (இலை, வேர், காய், பூ) நிழலில் உலர்த்தி பொடித்து அதனை கஷாயம் செய்தோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதிப்பு குறையும். தற்போது சித்த, ஆயுர்வேத மருந்துக்கடைகளில் கரிசலாங்கண்ணி மாத்திரை கிடைக்கிறது. பல ஆங்கில மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கின்றனர்.


Spread the love