மூலிகைகளில் ஒன்றாக கருதப்படும் கல்யாண முருங்கை அதிகளவில் மருத்துவக் குணங்கள் கொண்டது. இதற்கு, முள்ளு முருங்கை என்று வேறு பெயரும் உள்ளது.
கல்யாண முருங்கை சுமார் 80 முதல் 90 அடி வரை வளரக் கூடிய முட்கள் உடைய மர வகையாகும். இத்தாவரம் மிக அரிதாகத் தான் பூப் பூக்கின்றது. தென் ஆப்ரிக்காவைத் தாயகமாக கொண்ட இத்தாவரம் இந்தியாவில் பரவலாக பயிரிடப்பட்டாலும் கல்கத்தாவில் காணப்படும் மரங்களே அதிகமாக பூப் பூக்கின்றன. பெரும்பாலும் அழகிற்காகவே இம்மரங்கள் வளர்க்கப்பட்டாலும் இது மருத்துவ பயன்கள் பல கொண்ட மரமாகும்.
கல்யாண முருங்கையின் மருத்துவப் பயன்கள்:
பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலிகளுக்கு உகந்த மருந்தாக கல்யாண முருங்கை உள்ளது. குறிப்பாக, இளம் பெண்களின் மாதவிடாய் சமய வலிகள் மற்றும் மாதவிடாய் காலத்திற்கு முன்பு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் வலிக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும்.
கல்யாண முருங்கை, இலைகளை இடித்து 10 மி.லி அளவு சாறு எடுத்து அதனை மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பாக தினசரி காலை வெறும் வயிற்றில் குடித்து வர மாதவிடாய் எளிதாக வெளியேறும்.
கல்யாண முருங்கை இலைச் சாற்றை ,காது வலிக்கு பயன்படுத்தலாம். காது வலியுள்ள சமயத்தில் ஓரிரு சொட்டு இலைச்சாற்றை காதுகளில் விட்டு வர காது வலி குணமாகும்.