பயன்மிகத் தரும் பழச்சாறுகள்

Spread the love

பொதுவாகப் பழச்சாறு அருந்துகின்ற பலரும் அதில் சர்க்கரையும், ஐஸ் கட்டிகளும் கலந்தே அருந்துகின்றனர். இது தவறு. பழச்சாறு அருந்துகின்ற முறை இதுவல்ல.
பழச்சாறுகள் நல்ல பலன் தரவேண்டுமானால் சர்க்கரை சேர்க்காமல் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். மாறாக வயிறு நிரம்ப வயிறு நிரம்ப உணவு இருக்கின்ற போது அருந்தினால் மிக எளிதாக செரிக்கக்கூடிய பழச்சாறும் உணவுகளோடு சேர்ந்து பல மணி நேரம் வயிற்றில் இருக்க நேரிடும். உணவு புளிப்படைந்து தீமை உண்டாக்கும். அமிலங்களும், வாயுவும் தோன்றக் காரணமாகும். உணவு கொள்வதற்கு சிறிது நேரம் முன்னதாகவே பழச்சாறு அருந்தினால் நீங்கள் உண்ணத் தொடங்குகின்ற போது பாதிக்கு மேற்பட்ட பழச்சாறு உடலினுள் சுவர்ந்து விடும்.

சரியான முறையில் அருந்தப்படுகின்ற பழச்சாறும், பசைக் காய்கறிச் சாறும் அற்புதங்களை நிகழ்த்திவிட்டாலும் உடலுக்கு வலிவும், பொலிவும் தரவல்லவை. பழச்சாறுகளில் (Yin) இன் என்னும் சக்தி மிகுந்திருப்பதால் அவற்றை அளவோடு மட்டுமே அருந்த வேண்டும்.

ஆப்பிள்சாறு

ஆப்பிள்சாற்றில் விட்டமின்கள் ஓரளவு இருந்தபோதிலும் பொட்டாஷியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அது உடலுக்கு வலுவூட்டி, இரத்தத்தைத் தூய்மைப் படுத்த வல்லது. ஆப்பிளில் காணப்படும் மாலிக் அமிலமும் டானிக் அமிலமும் செரிவுறுப்புக்களைத் தூய்மைப்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கிறது. சருமத்திற்குப் பளபளப்புத் தருகிறது.

காரட் சாறு

காரட் சாற்றில் பீட்டா கரோட்டினும் விட்டமின் சியும் மிகுந்த அளவில் காணப்படுகிறது, இது வாய்வேக்காடு, குடல் புண் போன்றவற்றை ஆற்றுகிறது. பற்களையும் எலும்புகளையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. பசியைத் தூண்டி செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அரைலிட்டர் காரட் சாறு 25 கால்ஷியம் மாத்திரைகளுக்கு இணை என்கிறார் நார்மன் வாக்கர் தன்னுடைய Raw Vegetable Juice என்னும் தமது புத்தகத்தில்.

காரட் சாறு தாய்ப்பால் சுரப்பையும் தரத்தையும் அதிகரிக்கிறது. கண், தொண்டை, மூச்சுக் குழல் நோய்கள் வரவொட்டாது தடுக்கிறது. காரட் ஒரு அற்புத உணவு என்கிறார் ஜீன் கார்ப்பர் தன்னுடைய The Food Pharmacy என்னும் நூலில்.

கொய்யாச்சாறு

மற்றெல்லாப் பழங்களையும் விட அதிகமான விட்டமின் சி கொய்யா பழத்தில் உள்ளது. பசியை அதிகரிக்கிறது. குடற்புழுக்களை அகற்றுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது.

எலுமிச்சைச் சாறு

ஒரு சிறந்த உடற்தூய்மை தரும் சாறு. இயற்கை உணவுக் காரர்களால் பெரிதும் பாராட்டப்படும் சாறு இது. Herbal Medicine என்னும் நூலில் டயான் புஷ்மன் என்னும் பெண்மணி எலுமிச்சை சாறு உடலுக்குத் தெம்பும் குளிர்ச்சியம் தரக்கூடியது.

எவ்வகையான காய்ச்சலின் போதும் அழற்சியின் போதும் இதை அருந்தலாம் என்கிறார். சருமத்தில் உண்டாகும் கொப்பளங்கள் கட்டிகள் போன்றவை நீக்கி சருமத்திற்குப் பளபளப்புத் தருகிறது. சளியை வெளிக் கொணர்கிறது. வாந்தியையும் குமட்டலையும் போக்குகிறது.

எலுமிச்சைச் சாற்றை அப்படியே அருந்துவது பற்களுக்கு கேடு விளைவிக்கும். அதனுடன் வேண்டிய அளவு நீர் கலந்து நீரானமாக்கியே பருக வேண்டும். எலுமிச்சம் சாற்றில் அமிலம் மிகுந்திருந்த போதிலும் செரிமானம் ஆன பின்னர் காரத்தையே தருகிறது. எனவே இது உடலின் அமிலக் கோளாறுகளையும் நிவர்த்தியாக்கும்.

கிச்சிலிப்பழம்

(Orange) ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடிப் பழச்சாறுகள் தாம் பெரும்பாலான மக்களால் பருகப்படுகிறது. ஆரஞ்சுச்சாறு நல்லதுதான். விட்டமின் சி நிறைந்ததுதான் என்றாலும் பிறவகைப் பழச்சாறுகள் போல அவ்வளவு சிறந்தது என்று சொல்ல முடியாது. ஆரஞ்சுப் பழத்தில் பெருமளவு இருப்பதாகக் கருதப்படும் பயோஃப்ளேவினாய்ட்ஸ் (CBioflavinoides) அதன் தோலிலேயே காணப்படுகிறது.

அன்னாசிப் பழச்சாறு

அன்னாசிப் பழத்தில் செரிமான நொதிகள், குறிப்பாக ப்ரோமெலெய்ன் (Bromelain) போன்ற நொதிகள் பெருமளவில் உள்ளன. இது தொண்டைக் கட்டையும் ப்ராங்க் அழற்சியையும் போக்கும். சளியைக் கரைக்கும். சிறந்த சிறுநீர்ப்பெருக்கியுமாகும். சிறுநீரக்கத்தின் செயல்பாட்டைச் சீராக்கும். பழுக்காத அன்னாசிப் பழச்சாற்றை கருவுற்ற பெண்கள் அருந்தக்கூடாது. அன்னாசிச் சாறு வெறும் வயிற்றிலும் அருந்தப்படக்கூடாது.

பப்பாளிச்சாறு

வாக்கரது Book on Vegetable என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பழம் பப்பாளி. இது அவ்வளவு சக்தி மிக்கது. நலம் தருவதாகும். இதிலுள்ள பப்பெயின் (Papain) என்னும் நொதிப் பொருள் செரிமானத்தைத் தூண்டி விரைவுபடுத்த வல்லது. புரத செரிமானத்தில் இது முதலிடம் வகிக்கிறது. இது தவிர ஃபைரின் (Fibrin) என்னும் நொதியும் பப்பாளிச் சாற்றில் காணப்படுகிறது. இது காயங்கள் புண்கள் போன்றவை எளிதில் குணமாக்குகிறது.

வெள்ளரி/ முலாம் பழம்

தர்பூஸ்

இப்பழங்களின் சாறுகள் குளுமை பொருந்தியவை. சிறுநீரைப் பெருக்கக்கூடியவை. மலச்சிக்கலைப் போக்கவல்லவை. இவற்றை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்துப் பருக உடலில் உள்ள மிக யூரிக் அமிலம் எளிதா வெளியேறிவிடும்.

தக்காளி

பச்சைத் தக்காளி மற்றும் புளிப்புத் தக்காளிச் சாற்றில் பெறப்படும் பயன்கள் அதிகமில்லை. நன்கு பருத்து, திரண்டு, சிவந்த நிறம் கொண்ட புளிப்பற்ற தக்காளியில் தான் விட்டமின் சத்தும் மணிச்சத்தும் மிகுந்துள்ளது. நீரழிவுக் காரர்களுக்கு ஏற்றது தக்காளிச் சாறு. சமைத்த தக்காளியை உண்பதால் அதிக பலனை எதிர்பார்க்க முடியாது. பச்சைத் தக்காளியே சிறந்தது.

பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் (Canned / Bottled) உணவுச் சந்தையில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் பலவும் நிறைந்த அளவில் சர்க்கரை, சிட்ரிக் அமிலம், பதனச் சரக்குகள், வண்ணப்பொடிகள், நுரைப்பிகள் போன்ற வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இவ்வகைப் பழச்சாறுகளை அருந்துவதால் தெம்பைவிடத் தீமைகளே அதிகம் விளையக்கூடும். எனவே இவற்றை ஒதுக்கி இயற்கையான பழச்சாறுகளையே அருந்த முயல வேண்டும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!