சிறு செடி வகையாக வளரும். உயரம் சுமார் ஒன்று முதல் ஒன்றரை அடி வரை வளரக்கூடிய இசப்கோலின் இலை மற்றும் விதையின் மேல் உள்ள தோல் (உமி) மருத்துவத்தில் பயனபடுகிறது. மலச்சிக்கல், குடல் புண், வயிற்றுப் போக்கு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் நீரிழிவிற்கு மருந்தாக பயன்படுகிறது. இசப்கோலின் தாவரப் பெயர் ‘பிளாண்டகோ ஓவடா’, தாவரக் குடும்பப் பெயர் பிளாண்டனேசி, ஆனிலத்டில் சிலியம் என்று அழைப்பார்கள்.
எங்கு வளர்க்கலாம்? வளர்க்கும் முறை என்ன?
இசப்கோல் குறுகிய கால பயிராகும். விதைத்து இரண்டு மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும் அதன் பின்பு 4 மாதங்கள் கழித்து அறுவடை செய்ய வேண்டும். இசப்கோல் வளருவதற்கு மண்பாங்கான, களிமண் இடங்களில் பயிரிடலாம். மண்ணின் கார, அமில நிலை 7 முதல் 8 வரை இருக்க வேண்டும். நிலத்தைப் பண்படுத்தி, உரமிட்டு, பாத்திகள் அமைக்க வேண்டும். பயிரின் வளர்ச்சி மற்றும் பூக்கும் தருணத்தில் குளிர்ச்சியான சூழலும், குறைவான காற்றின் ஈரப்பதமும் இருக்கும் இடங்களில் நன்கு வளரும்.
அதிக அளவு காற்றின் ஈரத் தன்மை இருக்கும் பொழுது விதைகள் உதிர்ந்து உற்பத்திக் குறைவு ஏற்படும். ஐப்பசி மாதக் கடைசியில் மழைக்காலம் விதைத்து தண்ணீர் சற்று பாய்ச்ச வேண்டும். ஒரு செண்ட் 436 சதுர அடி நிலத்தில் வீட்டுத் தோட்டத்தில் பயிரிட 20 கிராம் விதை போதுமானது. அதன் பின் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றி விட வேண்டும்.
இது போல சுமார் 7 முறை நீர் பாய்ச்சுதல் அவசியமாகிறது. விதைத்த 5 அல்லது 6 அது நாட்களுக்குள் விதை முளைத்து விடும். மூன்று அல்லது நான்கு வாரத்திற்குள் செடிகளுக்கு இடையே 20 செ.மீ. இடைவெளி இருப்பது போல களையெடுத்து நடுதல் அவசியம். இரண்டு மூன்று தடவை களை எடுப்பது நல்லது. பின்பு மேலும் பயிரிட்டு, பாதுக்காப்பது அவசியமாகிறது.
விதைத்த நாளில் இருந்து இரண்டு மாதங்களில் பூக்க ஆரம்பித்து விடும். பூக்க ஆரம்பித்தவுடன் நீர் பாய்ச்சுவது கூடாது. அதன் பின்னர் இரண்டு மாதம் கழித்து அறுவடை செய்யலாம். இலைகள் பழுப்பு நிறமாகவும், விதைகள் லேசான கருப்பு நிறமாகவும் மாறும் பொழுது செடிகளை வேரோடு பிடுங்கிக் கொண்டு பெரிய துணிகளில் கட்டி தளத்தில் விரித்து பரப்பிக் காய வைக்க வேண்டும். விதைகளை பிரித்தெடுத்த பின்பு செடிகளை மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்தலாம். விதைகளின் மேல் தோலை இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுக்க வேண்டும்.
மருத்துவப் பயன்கள்
இசப்கோல் செடி விதைகளின் மேல் தோலில் தான் மருத்துவக் குணங்கள் உள்ளது. இசப்கோலில் அதிகளவு கரையக் கூடிய நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்துக்கு கலோரியும் கிடையாது. ஒரு மனிதனுக்கு சராசரியாக தேவைப்படும் நார்ச்சத்து 32 கிராம் ஆகும். நார்ச்சத்து தான் உணவு நன்கு செரிமானமாக காரணமாக உள்ளது. செரிமான சரியாக நடைபெறும் பொழுது, உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும்.
நார்ச்சத்தில் கரையக் கூடிய/ கரையக் கூடாத என்று இருவகைகள் உண்டு. கரைய கூடிய நார்ச்சத்து நீரை உறிஞ்சி, ஜவ்வரிசி அல்லது ஜெல் போன்ற பொருளாகி, வயிற்றில் உள்ள உணவுப் பொருள், இனிப்புச் சத்து, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை சுற்றி குடல் வழியாக எடுத்துச் சென்று வெளியேற்றுகிறது. இசப்கோல் மேல் தோலில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடை செய்வதால், இதயத்தை பலப்படுத்துகிறது.
செரிமானத்தை எளிதாக்கி மலமிக்கியாகச் செயல்படுகிறது. வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்ச்சி தருவதால், பசி உணர்வை கால தாமதப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் பருமன் குறைவதற்கும் உதவுகிறது. தொண்டை மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்த தேன் கலந்து பயன்படுத்தப்படுகிறது.
இசப்கோல் விதைகள் மெல்லியதாகவும் இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இது முக்கியமாக சிறுநீரகம், குடல் சார்ந்த நோய்கள், மூல நோய், மலச்சிக்கல், குடல் புண் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.
100 கிராம் உமி போன்ற மேல் தோலில் 71 கிராம் கரையக் கூடிய நார்ச் சத்து உள்ளது. இதே அளவானது ஓட்ஸில் கரையக் கூடிய நார்ச் சத்து ஐந்து கிராம் அளவு மட்டுமே உள்ளது. ஒரு சில ஆயுர்வேத மருந்து விற்பனையாளர்கள் இசப்கோல் கேப்ஸ்யூலில் விற்பனைச் செய்கின்றனர். தினசரி ஒரு கேப்ஸ்யூல் போதுமான பவுடர் வடிவத்தில் கிடைக்கிறது. இதனை தண்ணீரில் கலந்த உடன் இது ஜவ்வரிசி போன்று பெரியதாகி விடும் என்பதால் தண்ணீரில் கரைத்த உடன் குடித்து விட வேண்டும். பக்க விளைவுகள் இல்லை. இரவில் உறங்கச் செல்லும் முன்பு அரை டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் இசப்கோல் கலந்து குடிக்கலாம். மேலும், தண்ணீர் குடிப்பது நல்லது.
குறிப்பு
இரத்தத்தில் சர்க்கரை அளவினைக் குறைப்பதில் பிரச்சனை உள்ளவர்கள், குடலில் அடைப்பு அல்லது குடல் ஒடுங்கியே உள்ளவர்கள் இசப்கோலை உபயோகிக்கக் கூடாது.
கா. ராகவேந்திரன்