இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பெரும்பாலான கிராம மக்கள் மற்றும் கிராமத்தில் இருந்து சிறு நகரங்களுக்கு பிழைப்பிற்காக இடம் மாறியவர்கள் கூட கம்பு, கேழ்வரகு, சோளம் என்று சிறு தானியங்களை தங்கள் அன்றாட உணவில் தினசரி அல்லது இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது தவறாமல் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வார்கள். அதிலும் கொள்ளு என்று கூறப்படும் சிறு தானியம் மூலம் தயாரிக்கப்படும் கொள்ளு பருப்பு, கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல், கொள்ளுப் பருப்பு கலந்த நெய் சேர்த்துக் கொண்ட அரிசி சாதம் இவையெல்லாம் அவ்வளவு ருசியாக இருக்கும்.
இந்தியில் குல்தி தால், தெலுங்கில் உளவாலூ, மலையாளத்தில் முதிர, கன்னடத்தில் குரளி என்று அழைக்கப்படும் கொள்ளு, முன்பு மட்டுமல்லாது இன்றும் குதிரைக்கு வழங்கப்படும் கிராமியத் தீவனங்களில் ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தில் இதன் காரணமாகவே கொள்ளுவிற்கு ஹார்ஸ்கிராம் என்ற பெயர் வந்தது. பலதரப்பட்ட விஷயங்களில், மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், கொள்ளு குறிப்பாக உடல் பருமனைக் குறைக்க மிகவும் உதவுகிறது.
பரம்பரை பரம்பரையாக, கொள்ளு உடல் பருமனை குறைக்க, அளவுக்கு மீறிய உடல் எடையைக் குறைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தான் இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழி வந்தது. ஒருவன் தனது உடல் எடை அதிகரிக்க வேண்டும் எனில் சாப்பிடும் உணவில் எள்ளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமெனில், கொள்ளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய நான்கு விஷயங்கள் மனிதனின் உடல் எடையை இயற்கை வழியில் குறைப்பதற்குரிய பண்புகள்கொள்ளில் உள்ளன என்பதை விளக்குகிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை சம நிலைப்படுத்துகிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடவோ குறையவோ இன்றி சம நிலையில் ஒழுங்குபடுத்தி சீராக வைத்திருக்க இது உதவுகிறது. வேலைகளுக்கு இடையே வயிறு நிரம்பிய உணர்வை அதிக நேரம் நீடித்து வைத்திருக்க உதவுவதால், பசி உணர்வை குறைக்கிறது. இதனால் தான் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு கொள்ளு மிகச் சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனைக் குறைக்கிறது.
அதிகக் கொழுப்புள்ள உணவுகளை உண்பதால் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் தூண்டுதலை கொள்ளு குறைக்கிறது என்று மருத்துவ ரீதியாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதயம் சார்ந்த நோய்களை தடை செய்கிறது.
கொள்ளு தானியத்தில் நாம் அதிசயப்படும்படியான அளவு ஆண்டி ஆக்சினட் வேதிப் பொருட்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் இதயத் தாக்குதல்களான ஹார்ட் அட்டாக், மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க / தீர்க்க கொள்ளு உதவுகிறது. கொள்ளு சமையல் செய்து சாப்பிட ருசியாக இருக்காது என்று நினைக்கிறார்கள். ஆனால், அது தவறான கருத்தாகும். கொள்ளு, பருப்புடன் வேக வைக்கப்பட்ட அரிசி சாதத்தை மதிய உணவாக சாப்பிடலாம். குழந்தைகளாக இருக்கும் போது, கொள்ளுவை உணவில் வழக்கமாகபயன்படுத்தினால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அதிகரிக்கும் உடல் பருமன் நோயை இளம் வயதினருக்கு ஏற்பட வாய்ப்பில்லாமல் செய்யலாம். இயற்கையாக உடல் பருமனை குறைக்க விரும்பினால், கொள்ளு மூலம் தயாரிக்கப்பட்ட பல வகை உணவுக் குறிப்புகளைப் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் பலன் பெற கொள்ளு சமையல் ரெசிபிகளை இங்கு தருகிறோம்.
கொள்ளுத் தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கொள்ளு எடுத்துக் கொண்டு, நீர் விட்டு, கொதிக்கச் செய்து. அரைத்து அரைக்கப்பட்ட கொள்ளின் நீரை வடிகட்டி, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்தால் இது தான் கொள்ளுத் தண்ணீர் ஆகும். (நீரில் வேகவைக்கப்பட்ட கொள்ளுப் பயிறை கொள்ளுப் பருப்பு தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.)
கொள்ளுப் பொடி
நன்றாக சுத்தம் செய்யப்பட்ட கொள்ளு அரை கோப்பை அளவு எடுத்துக் கொண்டு, காலியான வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுத்து அதை தனியாக வைத்துக் கொள்ளவும். உலர்ந்த மிளகாய் வற்றல் இரண்டு எடுத்து அதன் நிறம் மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும். மேற்கூறிய வறுத்த கொள்ளு, மிளகாய்வற்றலுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இடித்து மெலிதான பொடியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பொடியுடன் தோலுடன் கூடிய வெள்ளைப் பூண்டு பற்களை நறுக்கி, பருப்பு போட்டு சிறிது நொடிகள் அரைத்தால் சுவையான கொள்ளுப் பொடி தயார்.
கொள்ளு ரசம்
கொள்ளுதேவையான அளவு எடுத்து நன்றாக கொதிக்கவைத்து, அந்த நீரை வடிகட்டிக் கொள்ளுங்கள். மிளகாய் வற்றல், வெங்காயத்தின் நறுக்கிய துண்டுகள், கறிவேப்பிலை மற்றும் கடுகு, சீரகம், சிறிதளவு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். கொதிக்க வைத்து வடிகட்டிய கொள்ளின் நீரை மேற்கூறிய கலவையில் சேர்த்து, மீண்டும் குறைந்த வெப்ப நிலையில் கொதிக்க வைக்கவும். இப்பொழுது கொள்ளு ரசம் தயார்.