செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
என்றான் மாக்கவிஞன் பாரதி. அளவில் மிகுந்த இனிமையை அடிக்கோடிட்டுக் காட்டவே தேனை உவமைக்கு அழைத்தான் கவிஞன். தேன் இனிமை மட்டும் கொண்டதில்லை. மிகுந்த உணவு மதிப்பும் மருத்துவ குணமும் கொண்டது. சில இயற்கை உணவுகள் நல்ல உடல் நலத்திற்கும் நீண்ட வாழ்நாளுக்கும் காரணமாக உள்ளன என்று அண்மைக் கால உணவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வகை உணவுகளில் தேன் முதன்மை பெறுகிறது.
பாகிஸ்தானின் ஒரு புறத்திலுள்ள ஆண்டெஸ், காகசஸ் போன்ற பகுதிகளால் வாழுகின்ற ஹ§ன்சா இனத்தினர் பச்சைக் காய்கறிகள், பழங்கள், தயிர் மற்றும் தேன் போன்ற இயற்கைப் பொருள்களையே உணவாகக் கொண்டு வாழ்கின்றனர். இதன் விளைவாக இவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்கிறார்கள். உடலுறுப்புகளை அழிக்கும் நாகரீக நோய்கள் இவர்களைப் பாதிப்பதில்லை. அது மட்டுமின்றி மிக முதிர்ந்த வயதிலும் மூப்பின் சுவடே இவர்களிடம் தெரிவதில்லை.
தேனீக்கள் மலர்களில் காணப்படும் தேனைச் சேகரித்து அதை விரைந்து இரத்தத்தினுள் சேரவல்ல எளிய சர்க்கரைப் பொருள்களாக மாற்றுகின்றன. இதனால் தேன் உடனடி சக்தி தருவதுடன் குழந்தைகளுக்கும் நோயுற்றிருப்பவர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் ஏற்ற உணவாகிறது. தேன் ஒரு சிறந்த இனிப்பூட்டி செயற்கைச் சீனி சேர்த்துக் கொள்ளும் இடங்களிலெல்லாம் தேனைச் சேர்த்துக் கொள்ளலாம்.
தேன் ஒரு திண்மை வாய்ந்த தித்திப்பான உணவுப் பொருள். உடல் மெலிந்து இளைத்தவர்களுக்கு உடல் திடம் பெற உதவுவதுடன், இரத்தத்தைத் தூய்மையாக்கி, ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்க வல்லது.
தேனில் வைட்டமின் சி, விட்டமின் பி போன்ற உயிர்ச்சத்துக்களும், கால்ஷியம், அயன், பொட்டாஷியம் போன்ற மணிச்சத்துக்களும், அமினோ அமிலங்களும், நொதிப்பொருள்களும் நிறைந்த அளவில் காணப்படுகின்றன. காய்கறிகள் சமைக்கப்படுகின்ற போது வீணாகின்ற இச்சத்துப் பொருட்களைத் தேனை உண்ணுகின்ற போது சேதமின்றிப் பெற முடியும்.
இருமலுக்கும் வயிற்றுப் போக்குக்கும் ஏற்ற ஒளடதம் இஞ்சியும், தேனும் என்பது பாட்டி மருத்துவம். இருமலுக்கு மட்டுமின்றித் தடுமனுக்கும் ஏற்ற மருந்து இது. அரைக் கப் வெது வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனைச் சேர்த்து படுக்கைக்குச் செல்லுமுன் குடித்தால் உடல் இறுக்கத்தை தளர்த்தி நல்ல உறக்கம் உண்டாக்கும். அலுவலகம் செல்வதற்கு முன்னர் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் அருந்திவிட்டுச் சென்றால் மன இறுக்கமும், பதட்டமும் இன்றிப் பணி செய்ய இயலும்.
படுக்கையிலிருந்து எழுந்ததும் ஒரு கப் வெது வெதுப்பான நீரில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறும் இரண்டு டீஸ்பூன் தேனும் சேர்த்துக் குடித்தால் மலம் எளிதாகக் கழியும். தினமும் ஒன்றிரண்டு டேபிள் ஸ்பூன் தேன் அருந்தி வந்தால் உடற்சோர்வு நீங்குவதுடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்களையும் மணிச்சத்துக்களையும் பெறலாம். நம்மில் பெரும்பாலோர் அளவுக்கு மீறிச் சர்க்கரை (ஜீனி) சேர்த்துக் கொள்பவர்களாக இருக்கிறோம். நாம் உண்ணும் உணவு வகைகளிலும் குடிக்கின்ற குடிநீர் வகைகளிலும் இயன்ற அளவு செயற்கைச் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்து தேன் சேர்த்துக் கொண்டால் உடனடி சக்தியுடன் உடல் நலமும் பெறலாம்.
தேன் வாங்குகின்ற போது நன்கு கவனித்துத் தரமான தேனை வாங்க வேண்டும். நல்ல தரமான தேன் கண்ணாடி போன்று சுத்தமாகவும் அடியில் வண்டல் எதுவுமின்றியும் இருக்கும். காதி கமிஷன் மற்றும் கிராமோதய நிறுவனங்களின் மூலம் நல்ல தரமான தேன் கிலோ எண்பது ரூபாய் அளவில் விற்கப்படுகிறது.