மூலிகை மர்மங்கள்

Spread the love

நரி மிரட்டியும் பேய் மிரட்டியும்

முற்காலங்களில் மக்கள் தனி குடியிருப்பு பகுதிகளாக காடுகளை, விவசாய நிலங்களை அழிக்காமல் எளிய முறையில் தேவைக்கேற்ப அளவு வீடுகட்டி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர். வனங்களில் உள்ள விலங்குகளும் அடர்த்தியான காடுகளில் உண்ண பல வகையான உணவுகளும், குடிநீரும், குளிர்ச்சியான சூழலும் இருந்ததால் காடுகளை விட்டு மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்தது இல்லை.

ஆனால் இப்பொழுதோ, மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் மலையடிவாரங்களில் வன விலங்குகள் வந்து விளைவிக்கும் பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவது அதிகமாக உள்ளன. மிருகங்களோடு இணக்கமாக இருக்கும் சூழ்நிலை தற்போது பெரும்பாலும் இல்லை. அதற்கு மிருக வசியம் அறிந்த மலைவாழ் மக்களால் மட்டுமே இயலுகிறது. முன்னர் காடுகள், மலைகளில் மனித நடமாட்டமே இருக்காது. அங்குள்ள சித்தர்கள் பல மிருகங்களை வசியப்படுத்தி இருக்கின்றனர்.

போகர் அருளிய மிருக வசியம் ஒன்றினை ‘போகர் 7000’ என்னும் நூலில் அறிந்து கொள்ள முடியும்.

தானென்ற மூலி நரி விரட்டிக்கப்பா

தப்பாமயாதித்த வாரந்தன்னில்

வண்மையுடன் ஓம் சடா சடாவென்று

ஆபெற வாயிரத்தெட்டுரு சொத்து

நள்ளுவாய் நிழலுலர்த்திக் கொண்டு

நலமான செப்பு குளிசத்திலடைத்துக் கொள்ளே

அணிவாய் முன்னுறுவே தியானஞ்செய்து

ஆச்சர்ய மந்திரந்தான் மிருகஞ்சேராது.

இவ்வாறு நரிமிரட்டி என்ற மூலிகையை பற்றி விபரமாக கூறுகிறார். இதன் விளக்கம் என்னவென்றால், மேற்கூறிய மூலிகையைத் தேடி கண்டுபிடித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் முன்பு அமர்ந்து ஓம் சடா சடா என்ற மந்திரச் சொல்லை ஆயிரத்து எட்டு முறை உச்சரித்து, அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்று அச்செடியினைப் பறித்து, அதன் வேரைப் பிடுங்கி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்.

செம்பினால் தயாரிக்கப்பட்ட தாயத்து செய்து கொண்டு, அதில் காய வைத்த நரி மிரட்டி வேரினை அடைத்து ஓம் சடா, சடா என்று மந்திரச் சொல்லை மீண்டும் முன்னூறு முறை உச்சரித்து அணிந்து கொள்ள, தாயத்து உடலில் அணிந்து கொண்ட மனிதரை மிருகங்கள் நெருங்காது என்று கூறுகிறார். மேற்கூறிய நரி மிரட்டி எங்கு விளைகிறது? அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

மூலிகை பெயர்

நரி மிரட்டிக்கு கிலுகிலுப்பை, சோண புஷ்பி, சங்கு நிதி என்ற பெயரும் உண்டு.

தாவர பெயர்

க்ரோடலரியா வெருகோசா

தாவர குடும்பம்

பாபிலினேசியே பேபசியே

பயன் தரும் பாகங்கள்

முழுத் தாவரமும் பயன்படுகிறது

எங்கு வளருகிறது?

புதர்ச் செடியான பேய் மிரட்டி காடுகள், மலைகள், மணற்பாங்கான பகுதிகளில் தானாகவே வளரக் கூடியது. 2 அடி முதல் 4 அடி வரை உயரமாக வளரக் கூடியது. எதிரெதிரில் அடுக்குகளாக இலைகள், முக்கோண வடிவத்தில் காணப்படும். இலைகள் சுமார் 5 செ.மீ. முதல் 15 செ.மீ வரை நீளமாக இருக்கும். இதன் பூக்கள் ஊதா மற்றும் வெள்ளை நிறமும் கலந்து காணப்படும்.

பூக்களில் கரு நீல வரிகள் காணப்படும். உயிர் வேலியாகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படும் இம்மூலிகையின் விதைகளில் இருந்து எண்ணெய் பிரித்தெடுப்பதும் உண்டு. இந்தியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பங்களா தேசம், சீனா, கம்போடியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, வியட்நாம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வளருகிறது.

ஆங்கிலப் பெயர் & புளு ரேட்டில் சினேக், ரேட்டில் பாட், புளு ப்ளவர்

சுவை & கசப்பு, துவர்ப்புச் சுவைகள்

மருத்துவத்தில் நரி மிரட்டி

வாந்தியை உருவாக்கி விடும். செரிமானம் இன்மை, சளி, காய்ச்சல், தொண்டை வலி, இதயம் சார்ந்த நோய்கள், பித்தம், சன்னிவாதம் குணப்படுத்தும். இதன் இலையிலிருந்து டீ தயாரித்து குடித்து வர தலைவலி, குளிர்க் காய்ச்சல், தோல் நோய், வயிறு வலி, சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். சிறுநீரகம், குடல், காமாலை சார்ந்த நோய்கள் குணமாகிறது. கால் நடைகளுக்கும் இயற்கை வைத்தியமாக பக்க விளைவுகள் ஏதுமின்றி பயன்படுகிறது.

பேய் மிரட்டி

பாரம்பரியமிக்க, காலம் காலமாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகைகளில் பேய் மிரட்டியும் ஒன்று. இதன் இலைச் சாறானது கொசுக்களை ஒழிக்கக் கூடியது. இதன் இலைகள் வலிப்பு, குன்ம நோய், விட்டு விட்டு ஏற்படும் காய்ச்சல், கொப்புளம், அழுகிய புண்கள், சளி, இருமல், வயிற்று வலி, அடிபட்ட காயங்கள், சொரி, சிரங்கு மற்றும் சிறுநீர்த் தாரை சார்ந்த நோய்களைக் குணப்படுத்தக் கூடியது.

தாவரவியல் பெயர் &- அனிசம்லிஸ் மலபரிகா

தாவரக் குடும்பம் -& ளேமியேஸி (புதினா குடும்பம்)

பொதுவான பெயர் &- மலபார் கேட் மிண்ட்

மற்ற மொழிகளில் இதன் பெயர்

இந்தி &- கோபோலி, கோதரா

மராத்தி &- கோஜிபா

மலையாளம் &- பெரும்தும்பா

கன்னடம் -& கரி தும்பி

தெலுங்கு -& கொக பிரான், கொக பேரி

ஒரியா -& வைகுந்தா

சம்ஸ்கிருதம் &- மகாதுரோணா, வைகுந்தா

தமிழ் -& பாண்டவ துளசி, காசித் துளசி, பாண்டவ பட்டி

வளரியல்பு

மணம் தரும். அடர்த்தியாக வளரும். பல்லாண்டு தாவர வகையச் சேர்ந்த மூலிகையாகும். இம்மூலிகையின் சிறப்பு இதன் இலைகள் தான். எளிமையாக காணப்படும் இதன் இலைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிராக அமைந்து மிகக் கனமானதாக, வாசனைத் தரக் கூடியதாக இலையின் மேல் பகுதி வெளுத்தும் கீழ்ப் பகுதி வெண்மையாகவும் காணப்படும்.

இலைகள் விளக்கு எரிக்க உதவும் திரியாகப் பயன்படுகிறது. எண்ணெய் இன்றியும் எரியக் கூடியது. இலைகளை எரிக்கும் பொழுது பரவும் வாசனை, சுற்றிக் காணப்படும் கொசுக்களை விரட்டக் கூடியது. நாடோடிகள், பழங்குடியினர் பயன்படுத்தும் மூலிகைகளில் பேய் மிரட்டியும் ஒன்று. மனம் சார்ந்த நோய்கள், காய்ச்சல், உடல் வீக்கம், கை, கால், மூட்டு வலி, குழந்தைகளின் பல் வலி காரணமாக ஏற்படும் காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

பேய் மிரட்டி மூலிகையானது தேள் மற்றும் பாம்புக் கடிக்கு விஷம் நீக்கி குணம் பெறவும் பயன்படுகிறது. மனிதனின் வாழ்க்கையில் காணப்படும் நோய்களில் ஒன்று, கொசுக்களினால் தோன்றும் மலேரியாக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், டெங்கு சுரம் போன்றவைகளை பேய் மிரட்டி வர விடாமல் கொசுக்களை ஒழித்துக் கட்டுகிறது. இதன் இலைச் சாறு புழுக்களின் முட்டைகளை அழித்து விடும் என்பதே இதற்குக் காரணம்.

ராஜகோபாலன். கி


Spread the love