இளமை தரும் இலை தழை

Spread the love

இன்றைய நாகரீக உலகில் மட்டுமல்ல, தொன்று தொட்டு மனிதர்கள் என்றும் இளமையுடன் இருக்க விரும்பினார்கள். அதற்கான காய கல்பங்கள்இல்லாத மருத்துவ முறைகள் இல்லை. இளமையின் ரகசியம் இலைதழைகளில் இருக்கிறது.

இளமை என்ன இலை தழையிலா கிடைக்கும்? நாங்கள் என்ன ஆடுமாடுகளா என்று நீங்கள் கேட்கலாம். உணவை சமைத்து உண்ணும் பழக்கம் மனிதனை தவிர வேறு விலங்கினங்களுக்கு கிடையாது. மனித உடற்கூறு நிபுணர்கள், மனிதனின் ஜீரண உறுப்புக்கள் மரக்கறி உணவுக்கே ஏற்றது என்கின்றனர்.

நம்மில் எத்தனை பேர் சமைக்காத பச்சைக் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடுகிறோம்? எப்போதாவது Salad என்ற பெயரில், அதுவும் பெரிய ஹோட்டல்களில் உண்ணும் போது, பச்சைக்காய்கறிகளை சாப்பிடுகிறோம். நெல்லிக்காய், மாங்காய், வெள்ளரிக்காய், தேங்காய், சோளக்கதிர், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கரும்பு போன்றவற்றை பச்சையாக உண்பதே சிறந்தது.

இவற்றை சமைத்து, சத்துக்களையெல்லாம் வடித்துவிட்டு, வெறும் சக்கையை மாத்திரம் சாப்பிடுகிறோம். இதனால் கண்கள் குழி விழுந்து, முகம் களையிழந்து, பற்கள் ஆடிப்போய், ஆரோக்கியத்தை இழக்கிறோம்.

உறுதியான உடல் நலத்திற்கு சமச்சீர் உணவு தேவை. அதாவது புரதம், கார்போ-ஹைட்ரேட், கொழுப்பு போன்ற அடிப்படை ஊட்டச்சத்துக்களும், விட்டமின்களும், ஏனைய தாதுப்பொருட்களும் சரியான விகிதத்தில் இருப்பது தான் சமச்சீர் உணவு.

உடல் இயக்கத்திற்கு அடிப்படைச் சத்துக்கள் எவ்வாறு தேவையோ அதே போல் உடல் பாதுகாப்பிற்கும், மூப்பினைத் தடுப்பதற்கும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் மிக மிகத் தேவை. நோய் எதிர்ப்புத் திறனையும், உறுப்புக்கள் இளமை குன்றாதிருக்கும் பயனையும் இவை தருகின்றன.

பச்சைக் காய்கறிகளிலும், கீரை வகைகளிலும் இவ்வகை உயிர்ச் சத்துக்களும், தாதுப்பொருட்களும் இருக்கின்றன. தாவர உணவிலும் கிழங்கிலும் இருப்பதை விடக் கீரைகளில் சத்து அதிகமிருக்கிறது. இதன் காரணமாகவே உண்ணக் கூடிய இலைகளையும் தழைகளையும் பண்டைய தமிழர்கள் கீரை என்று அழைத்தார்கள். உடல் நலம் பற்றி அவர்கள் கொண்டிருந்த தெளிவான சிந்தனைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டாகும். கீரை என்ற சொல்லுக்கு ஈடான ஒரு சொல்லை வேறு எந்த மொழியிலும் காண முடியாது. இதையே ஆங்கிலத்தில் Leafy Vegetables என்று குறிப்பிடுகின்றனர்.

கீரை வகைகளில் வைட்டமின் ‘A ‘ ன் முன்னோடியான பீட்டா கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம் எனப்படும் வைட்டமின் C, B காம்ப்ளெக்ஸ் வகை சார்ந்த ரிபோபிளேவின், ஃபோலிக் அமிலம், போன்ற உயிர்ச்சத்துக்களும் கால்ஷியம் போன்ற தாதுப்பொருட்களும் நிறைந்த அளவில் உள்ளன.

மஞ்சள் நிறங்கொண்ட பீட்டா கரோட்டின் என்னும் நிறமியை மனித உடல் வைட்டமின்  ‘A’ யாக மாற்றுகிறது. கண்களின் ஒளிமிக்க பார்வைக்கும், சருமப் பளபளப்பிற்கும், மூச்சுக்குழல் நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் வைட்டமின் ‘A’ பெரிதும் துணை செய்கிறது. இந்தியா போன்ற வெப்பமிகு நாடுகளில் வாழ்கின்றவர்களது கண்விழிகள் கடுமையான சூரிய ஒளியினால் நிறம் மங்கியும், வறட்சியுற்றும் போகின்றன. பச்சைக் கீரைகளிலுள்ள பீட்டா கரோட்டின் இவ்வகைக் கோளாறுகள் வராமல் தடுக்கின்றது.

பற்களையும் ஈறுகளையும் பாதுகாப்பதில் வைட்டமின் ‘C ‘ யும் கால்ஷியமும் பெரும்பங்கு வகிக்கின்றன. அத்துடன் இலை தழைகளில் இருக்கும் இரும்புச்சத்து உடற் திசுக்கள் இளமை மாறாதிருக்க உதவுகிறது. சருமத்தின் மேற்புறத் திசுக்களை (Epithelical Cells) பீட்டா கரோடின் சிறப்பான வகையில் பாதுகாக்கிறது. இதனால் தோல் வறட்சியும், சரும நோய்களும் தவிர்க்கப்படுவதுடன் சுருக்கம் விழுவதும் தடை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வேளையாகிலும் எதாவது ஒரு காய்கறி அல்லது கீரையைப் பச்சையாக உண்டு வந்தால் இளமை மிளிரும் சருமத்தைப் பெறலாம்.

காய்கறிகளையும் கீரைகளையும் வதக்கும் போதும், வேக வைக்கும் போது அவற்றில் உள்ள பீடா கரோடினும், விட்டமின் ‘C’, இரும்புச்சத்து, முதலிய உயிர்ச்சத்துக்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஒடிவிடும்.

முடிந்த வரை பசுமையான காய்கறிகளையும், கீரைகளையும் பச்சையாக உண்ண பழகிக் கொள்ள வேண்டும்.

முள்ளங்கி, தக்காளி, காரட், பீட்ரூட், பச்சைப் பட்டாணி, வெள்ளரி, சோளக்கதிர் போன்றவற்றையும் பசலைக்கீரை, லெட்டூஸ் கீரை, வெங்காயத்தாள், முட்டைக்கோசு, கொத்தமல்லி, வெந்தயக் கீரை போன்றவற்றையும் சாலாடாகச் செய்து உண்ணலாம். சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் உப்பையும் இவற்றுடன் சேர்க்கின்ற போது இவை மிகச்சுவையான உணவாகும்.

இதே போல் புடலங்காய், வெண்டைக்காய், பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளையும், முளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை போன்ற கீரைகளையும் சிறிது எண்ணெய் விட்டு மிகமிகக் குறைந்த அளவு வதக்கி உண்ணும் போது இவற்றிலுள்ள உயிர்ச்சத்துக்கள் அழியாமல் நமது உடலுக்கு வளம் சேர்க்கின்றன.

வல்லாரை, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவற்றைச் சிறிது புளியும், உப்பும் சேர்த்து துவையலாக அரைத்து இட்லிக்கும் தோசைக்கும் தொட்டுக் கொண்டால் அவற்றின் முழுப்பயனையும் பெறலாம்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக இவ்வகைப் பச்சைக் கீரைகளிலும் காய்கறிகளிலும் கொழுப்புச்சத்து இல்லையென்பதும் அவற்றின் கலோரித்திறனும் மிகக் குறைவு என்பதையும் நாம் உணர வேண்டும். மேலும் இவைகளை எவ்வளவு உண்டாலும் எடை உயராது என்பதுடன் இவற்றிலுள்ள நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. செரிமானத்தைக் கூட்டுகின்றன. மலச்சிக்கலைத் தவிர்த்து மலம் எளிதாகக் கழிய உதவுகின்றன.

இலைகளும் தழைகளுமே நீங்கள் இளமையோடு இருக்க உதவுகின்றன என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் என்ன வேண்டும்.


Spread the love